KANDA PURAANAM - PORPURI KANDAM
5a. மூன்றாம்நாள் போர்.
பொழுது புலர்ந்தது, எழுந்தான் பானுகோபன்;
தொழுது மாயையை அழைத்தான் வருமாறு.
போரிலே தோற்று ஓடி ஒளிந்ததைக் கூறி
நேரிலே அவளிடம் உதவிகள் கோரினான்.
“மறை வழியை விட்டு விலகிச் சென்றாய்!
சிறை செய்தாய் விண்ணுலகத் தேவர்களை;
அழித்தாய் இந்திரனின் அரசாட்சியினை!
அழித்தாய் முனிவர்கள் செய்த தவத்தை;
வளர்த்தாய் நீ பலவிதக் கொடுமைகளை!
வளர்த்தாய் நாற்புறமும் பகைவர்களை.
மண்டும் பகைவர்களிடம் நீ தோற்றாய்!
வேண்டும் உதவி என்னவோ கோருவாய்!”
“பகைவர்களை வெல்ல வல்ல அரிய
படைக்கலன் ஒன்று வேண்டும் எனக்கு.”
மாயப் படைக் கலன் ஒன்றை உருவாக்கி
மாயை அளித்தாள் பானுகோபனுக்கு.
“வெற்றியை உனதாக்கும் இப்படைக்கலன்.
இற்றை நாள் போரில் வெற்றி உனதே!”
மாயப் படைக்கலனைப் பெற்றதும் பிற
தூய படைக்கலன்களுடன் புறப்பட்டான்.
காற்றுப் படை, தீப் படை, யமப் படை,
சூரியப் படை, சந்திரப் படை, சிவப்படை,
நான்முகப் படை, நாராயணப் படை என்னும்
நானாவிதப் படைக் கலன்களுடன் சென்றான்.
பதினாயிரம் வெள்ளம் கரிகள், பரிகள்,
பதினாயிரம் வெள்ளம் தேர்க்கூட்டம்,
காலாட்படை இருபதினாயிரம் வெள்ளம்
களம் நோக்கி நடந்தது பானுகோபனுடன்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.