KANDA PURAANAM - PORPURI KAANDAM
6b. நீரும், நெருப்பும்.
ஒற்றர்கள் நுழைந்தனர் அரண்மனையில்;
கொற்றவனிடம் கூறினர் அனைத்தையும்;
“நன்நீர்க் கடலில் கொண்டு சென்று இட்டான்
பானுகோபன் பூதப் படையினரை எல்லாம்!
மாயப் படையால் போர் புரிந்தான் அவன்;
மாயப் படையை அழித்தது வேளின் வேல்!
பூதப் படையினர் பிழைத்து எழுந்தனர்.
பூதப் படையினர் அடைந்தனர் நம் நகரை.
புலிமுகன் படையை வென்றனர் போரில்
புலி முகனையும் கொன்றனர் அப்போரில்.
தீயையும், காற்றையும் ஒன்றாகச் செலுத்தித்
தீமை செய்து விட்டனர் நம் தலை நகருக்கு!”
“ஊழிக் காலத்தில் உலகையே அழிக்கும்
ஏழு முகில்களையும் அழைத்து வருக!”
ஏழு முகில்களும் வந்து நின்றன அங்கு!
“எழுவீர்! பொழிவீர்!எரியும் நம் நகரில்!”
தீயை அணைத்து விட்டன ஏழு முகில்கள்!
திகைத்து நின்ற வீரவாகுத் தேவரிடம்
நாரதர் தோன்றிக் கூறினார் விவரம்;
நகரை அழித்திட மற்றொரு உபாயம்.
“ஊழிக்கால முகில்களை ஒடுக்கிட
உடனே செலுத்துவீர் வடவைத் தீயை!”
வடவைத் தீப்படை விரைந்து சென்றது!
வற்றச் செய்தது ஏழு ஊழிமுகில்களை.
ஆற்றல் இழந்தன ஊழி மேகங்கள்.
சீற்றம் அடைந்தான் சூரபத்ம அவுணன்.
“என் தேரை உடனே கொணர்க!” எனத்
தன் காவலருக்குக் கட்டளை இட்டான்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.