7#40b. தேவி கீதை ( நூற்பயன்)
தேவி கீதை என்ற இந்தப் புனித சாஸ்திரத்தைப்
போதிக்க வேண்டும் தகுதி வாய்ந்தவர்களுக்கு.
போதிக்க வேண்டும் நல்ல சிஷ்யர்களுக்கு ;
போதிக்க வேண்டும் பக்தி பூண்டவர்களுக்கு;
போதிக்க வேண்டும் நல்ல மனம் உள்ளவருக்கு;
போதிக்க வேண்டும் தனது மூத்த புதல்வனுக்கு;
போதிக்க வேண்டும் நல்ல ஆசார சீலனுக்கு;
போதிக்கலாகாது இதை துன்மார்க்கர்களுக்கு.
தகுதியற்றவர்களுக்கு உபதேசிப்பதற்குச் சமம்
தாயின் முலையை ஒரு காட்சி பொருளாக்குவது.
ரஹசியமாக இருக்கவேண்டும் இந்த தேவி கீதை
ரஹசியமாக இனிய முறையில் எச்சரித்தாள் தேவி.
மறைந்து அருளினாள் அந்த இடத்திலிருந்து;
சிறந்து விளங்கினாள் பார்வதி என்ற பெயரில்;
பத்தினியனாள் மகாதேவன் பரம சிவனாருக்கு;
உத்தமத் திருமகன் ஆனான் ஸ்கந்தன் முருகன்;
வென்றான் தாரகாசுரனைப் போரில் முருகவேள்;
வென்றான் தேவ சேனாபதி என்ற பட்டப் பெயர்.
கடைந்தனர் பாற்கடலை அமரரும், அசுரரும் கூடி.
அடைந்தனர் பல அரிய பொருட்களை அப்போது.
தோன்றினாள் லக்ஷ்மி அப்போது பாற்கடலில்;
தோற்றுவித்தாள் லக்ஷ்மியைத் தேவி பராசக்தி.
பத்தினியானாள் லக்ஷ்மி ஸ்ரீமன் நாராயணனுக்கு!
பாற்கடலை அடைந்தாள் பாதசேவை செய்வதற்கு.
சித்திக்கும் எல்லா நன்மைகளும் மேன்மைகளும்,
பக்தியுடன் தேவி கீதையைப் படித்து வருவோருக்கு.
நித்தியம் சிந்திக்க வேண்டும் மறைந்து உறையும்
நித்திலங்களாகிய முத்துக் கருத்துக்களை மாந்தர்கள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
