# 64 (c). குடுமிபிடிச் சண்டை
மூத்தவள் மகன்கள் மிகக் கொடியவர்கள்;
முழுமனததோடு ஏற்கவில்லை இளையவனை;
வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும்,
வளரலாயின அடிக்கடி அம்மக்கள் இடையே.
சிறுவர்களின் சண்டை சிறிது நேரமே!
பெரியவர்கள் நுழைந்தால் பெரிதாகும்,
சிறுவர் பூசலில் அன்னையர் நுழைந்ததால்,
பெரும் புயலில் சென்று நின்றது அது!
“நீ யார்? எந்த ஊர்? என்ன குலம்?
நீலி நீ ஒரு காமக் கிழத்தி அல்லவா?
என் திருமணத்துக்கு அக்னி சாட்சி.
உன் திருமணத்துக்கு யார் சாட்சி?”
“சம்பந்தர் பெருமானின் ஆணைப்படி
எங்கள் திருமணம் நடந்தது உண்மை;
திருப்புறம்பியத்தில் உள்ள கிணறும்,
சிவலிங்கமும், வன்னி மரமும் சாட்சி.”
“நல்ல சாட்சிகள் வைத்துள்ளாய் நீ!
நாப் பேச இயலாத மூன்று பொருட்கள்!
இங்கு வந்து நிரூபிக்கச் சொல்லுவாய்
அங்கு இருக்கும் உன் சாட்சிகளை!”
எள்ளி நகையாடினாள் மூத்தவள்,
உள்ளம் குமுறினாள் இளையவள்;
“கள்ளம் இல்லா என் வாழ்க்கைக்குக்
களங்கம் கற்பிக்கின்றாள் சிவனே!
தாய், தந்தை என யாரும் இல்லை!
சேய் எனக்கு நீயே ஒரு கதி ஆவாய்.
மாமனாக வந்து வழக்கு உரைத்தாயே!
மாமன் மகள் என்னையும் காப்பாற்று!”
பொற்றாமரைக் குளத்தில் நீராடினாள்,
நற்றாள் மலர்களைப் பணிந்தாள்;
வன்னியும், கிணறும், சிவலிங்கமும் – என்
இன்னுயிர் காத்திட இங்கு வரவேண்டும்.”
பெருமான் அருளால் அவை மூன்றும்,
திருக்கோவிலுக்கு வடகிழக்கு திசையில்,
உடனே முளைத்து நின்றன அங்கே!
அடைந்தனர் வியப்பு அவற்றைக் கண்டவர்.
நிந்தனை செய்தனர் மூத்த மனைவியை ,
வந்தனை செய்தனர் இளைய மனைவியை,
“நிந்திக்க வேண்டாம் நீங்கள் இவர்களை!
சிந்திப்பீர்கள் இவர்கள் செய்த நன்மையை!
கற்பின் திறத்தை உலகறியச் செய்த ஒரு
பொற்புடைய மங்கை இவரே அன்றோ?
தாயற்ற எனக்குத் தாயும் இனி இவரே!
தங்கையான எனக்குத் தமக்கையும் கூட !”
பொறாமை மறைந்து பொறுமை வளர்ந்தது;
திருந்திய மகன்கள் விரும்பினர் தம்பியை;
பெருவாழ்வு வாழ்ந்தான் வணிகப் பெருமகன்;
திருமகள் போலத் திகழ்ந்தாள் இளையவள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
ஆலவாய்க் காண்டம் முற்றுப் பெற்றது.
அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பெற்றன.