63b. அனல், புனல் வாதங்கள்.
தீய கனவுகள் கண்டன குடும்பங்கள்,
தீய சகுனங்கள் கண்டனர் சமணர்கள்;
தீமையை விரும்பிய தீயவர் குழு,
தீமையை எண்ணி அஞ்சவில்லை.
“மன்னன் சொற்படியே நாம் செல்வோம்,
சம்பந்தனை வாதப் போரில் வெல்வோம்;”
சமணர்கள் மன்னனைக் காணச் செல்ல,
சம்பந்தரும் அவ்விடம் வந்து சேர்ந்தார்.
அரன் அருள் பெற்ற திரு ஞானசம்பந்தர்,
அரசன் அளித்த அரியணையில் அமர்ந்து;
அரச மரியாதையால் அவையில் சிறந்த
உதய சூரியனைப் போல் ஒளி வீசினார்.
சமணக் குரவர்களின் அசூயையோ எனில்,
கணத்துக்குக் கணம் பெருகி வளரலாயிற்று.
பால சூரியனை நிகர்த்த ஞான சம்பந்தரை,
கோப சூரியர்களாக மாறி முறைத்தனர்.
“காக்கை அமரப் பனம் பழம் விழும்,
காக்கைக்கு அதில் என்ன பெருமை?
தானே வந்தது அரசனின் ஜுரம்;
தானே தணிந்தது அரசனின் ஜுரம்!
மருத்து அல்ல உன் கைச் சாம்பல்;
மந்திரம் அல்ல உன் வாய்ச் சொற்கள்.
எல்லாம் நீயே செய்ததாக எண்ணிப்
பொல்லாத செருக்கு அடையாதே!
அனல் வாதத்துக்குத் தயாரா நீ?
அது உறுதி செய்யும் வென்றவரை,
பச்சை ஓலையில் மந்திரம் எழுதி,
பற்றி எரியும் நெருப்பில் இடுவோம்.
பசுமை மாறாது வென்ற ஓலை,
பொசுங்கிப்போனது தோற்ற ஓலை;
சிவபதிகளில் செய்யலாகாது இதை,
சிவன் நடுநிலையாளன் அல்லவே!
ஊருக்கு வெளியே நம் அனல் வாதம்;
ஊர்மக்கள் அனைவர் முன்னிலையில்;
தோற்றவர் வென்றருக்கு அடிமை,
குற்றேவல் செய்து வாழ வேண்டும்.”
அரசனும் சம்பந்தரும் ஒப்புதல் தர,
விரைந்து வெளியேறினர் குரவர்.
மதுரைக்குக் கிழக்கே ஆழ் குழியில்
கதகதக்கும், நெருப்பை வளர்த்தனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.