VINAAYAKA PURAANAM 2
9h. பாலலீலைகள் (8)
கணேசனுக்கு அகவை ஏழு ஆனது;
பணிந்து செல்வர் முனிவர்கள் வந்து.
காசியப முனிவரும், அதிதி தேவியும்
கணேசனிடம் வந்து அடி பணிந்தனர்.
பதின்மூவர் ஆவர் காசியபர் மனைவியர்;
பகை கொண்டவர் வினதையும், கத்ருவும்
வினதையைச் சிறையில் இட்டவள் கத்ரு.
வினதையின் வீட்டுக்கு வந்தாள் கத்ரு.
மறக்கவில்லை வினதை பகைமையை;
திறக்கவில்லை வாயைச் சக்களத்தியிடம்!
ஜடாயு வினதையின் மகன்களில் ஒருவன்
கடிந்து பேசினான் அவன் மாற்றாந்தாயிடம்.
தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று
தள்ளினான் தெருவில் இரக்கம் இல்லாமல்.
கத்ருவின் புதல்வர்கள் கொடிய நாகங்கள்;
கத்ரு குறை கூறினாள் வினதையைப் பற்றி.
“பழி தீர்க்கச் சிறை செய்யுங்கள் ஜடாயுவை!”
மொழி கேட்ட நாகங்கள் சீறிப் புறப்பட்டன!
வினதையின் மகன்கள் பறவை இனத்தவர்!
சேனன், சம்பாதி, ஜடாயு ஆகிய மூவரும்
நகங்களால் கீறி, அலகுகளால் கொத்தி
நாகங்களைச் சின்னா பின்னப் படுத்தினர்.
பறந்து, பறந்து தாக்கியவர்களிடமிருந்து
பயந்து, பயந்து ஓடி விட்டனர் நாகங்கள்.
வலிய நாகங்கள் வந்தனர் எண்மர்;
எளிதாக மூவரையும் சிறை செய்தனர்.
தாங்கவில்லை துயரம் வினதைக்கு!
தயங்காமல் கேட்டாள் கணவனிடம்,
“நாகங்களை வென்று மகன்களை மீட்க,
நான் பெற வேண்டும் வலிய மகனை!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி