13e. அகலிகை
“தேவேந்திரன் இன்றி ஒளி இழந்து விட்டோம்
தேவர்கள் நாங்களும் தேவலோகம் முழுவதும்.
தேடாத இடமில்லை மூன்று உலகங்களிலும்.
தெரிந்தால் கூறுங்கள் இந்திரன் எங்கே என!”
“வஞ்சித்து விட்டான் இந்திரன் அகலிகையை.
அஞ்சி ஒளிந்துள்ளான் கௌதமர் சாபத்தால்.
இந்திரப் பதவியைப் பெற்றிருந்தும் காமத்தால்
உந்தப்பட்டு புரிந்தான் அவன் இழி செயல்கள்!”
அனைவரும் கூடிச் சென்றனர் கௌதமரிடம்;
அன்புடன் வரவேற்றார் தேவர்களை முனிவர்.
“தேவராஜனை இழந்து வாடுகிறது சுவர்க்கம்.
பாவத்தை மன்னித்துச் சாபநிவாரணம் தருக!
இச்சையால் வஞ்சியை வஞ்சித்தது குற்றமே.
பச்சாதாபம் கொண்டான், மன்னிப்புத் தருக “
கருணை கொண்டு மனமிளகினார் முனிவர்
“கற்பக விநாயகர் மந்திரம் மாற்றிவிடும்
அற்பப் பெண் குறிகளை இந்திரன் உடலில்
அற்புதக் கண்களாகக் கணப் பொழுதில்.
பிரஹஸ்பதிக்கு நான் உபதேசிக்கிறேன்
பிருஹஸ்பதி உபதேசிப்பார் இந்திரனுக்கு.”
கந்தர்ப்பத்தில், தடாகத் தாமரைத் தண்டில்,
சந்தர்ப்பத்தை நோக்கி இருந்தான் இந்திரன்.
நாணத்துடன் வெளிப்பட்ட இந்திரன் நீராடி,
ஆர்வத்துடன் பெற்றான் உபதேசம் குருவிடம்.
அற்பப் பெண்குறிகள் மாறிவிட்டன - ஆயிரம்
அற்புத விழிகளாக ஒரு கண நேரத்தில்.
வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.