3#15c. மஹாபலி
தொடர்ந்து பேசினாள் மனோரமை – தனக்கு
இடம் அளித்திருந்த பரத்வாஜ முனிவரிடம்.
“விரோசன மன்னன் பிரஹலாதனின் மகன்;
விரோசனின் மகன் மஹாபலிச் சக்கரவர்த்தி.
பெருமை பெற்றவன், கொடை வள்ளல்;
தரும சீலன், பூ மண்டலத்தின் சக்கரவர்த்தி.
தொண்ணூற்று ஒன்பது யாகங்கள் செய்தான்;
தொடங்கினான் நூறாவது யாகம் புரிவதற்கு.
பகைமை இல்லை விஷ்ணுவுக்கு பலி மேல்;
பாழ் செய்தது ஏன் பலியின் யாகத்தினை?
குறு வடிவம் எடுத்துச் சென்றார் யாகசாலைக்கு.
தருமாறு கோரினார் தன் காலால் மூன்றடி மண்.
பெருவடிவால் அளந்தார் விண்ணை; மண்ணை!
திருவடியால் அனுப்பினார் பலியைப் பாதாளம்!
கள்ளத்தனம் செய்தார் விஷ்ணு பிரான்!
கள்ளத்தனம் செய்யாதவர் யார் உளர்?
பேராசை மிகுந்தவன் மன்னன் யுதாஜித்!
பேதை என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!”
வந்து விட்டான் ஆசிரமத்துக்கு யுதாஜித் – அங்கு
வரவில்லை மனோரமை எனச் சாதித்தார் பரத்வாஜர்.
“நீரே அவளை அனுப்புகின்றீரா? வலிமையால்
நானே அவளைக் கவர்ந்து செல்லவா?” என்றான்.
“வசிஷ்டரின் பசுவை விஸ்வாமித்திரர் செய்தாற்போல்
வலிமை இருந்தால் கவர்ந்து செல்!” என்றார் முனிவர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.