3#12a. பிரம்ம லோகம்
மும் மூர்த்திகள் ஏற்றனர் பெண்ணுருவம்;
மும் மூர்த்திகள் தரிசித்தனர் பராசக்தியை!
மும் மூர்த்திகள் பெற்றனர் மூன்று தேவியர்
மும் மூர்த்திகள் பெற்றனர் முத் தொழில்கள்
ஆதார சக்தியும் வந்தாள் அவர்களுடன்;
ஆதாரம் ஆனாள் அனைத்துக்கும் அவள்.
தரித்துத் தாங்குகின்றாள் அனைத்தையும்;
தரை என்று பெயர் பெற்றாள் ஆதார சக்தி.
இருக்கிறாள் அகண்டமாக விரிந்து, பரந்து!
பிருத்வி என்ற பெயர் பெற்றாள் ஆதர சக்தி.
மது கைடபர்களின் மேனியுடன் கலந்து
மேதினி என்ற பெயர் பெற்றாள் அச்சக்தி.
பூமியாக ஆகிவிட்டாள் ஆதார சக்தி;
பூமி அசையாமல் காப்பது மலைகள்.
மஹீதரம் என்னும் மலைகளே பூமிக்கு
மரத்தில் அடித்த ஆணிகள் போன்றவை.
மரீசி, நாரதர், புலகர், புலஸ்தியர்,
கிருது, அத்திரி, தக்ஷன், வசிஷ்டர்
புதல்வர்களாகப் பிறந்தனர் பிரமனிடம்.
புதல்வரானார் காச்யபர் மரீசியிடம்.
காச்யபர் மணந்தார் தக்ஷனின் பெண்களை;
காச்யபர் மனைவியர் பதின்மூவர் ஆவர்.
அத்தனை வகை உயிரினகளும் உலகில்
அந்தப் பெண்களிடமிருந்தே உருவானது.
பிரமனின் உடலின் இரு பகுதிகளில்
பிறந்தனர் ஸ்வாயம்பூவும் சதரூபியும்.
பிறந்தார் இரண்டு புத்திரர்கள் அவர்களுக்கு.
பிறந்தனர் மூன்று புத்திரிகள் அவர்களுக்கு.
உற்பத்தியானது பிரமன் வம்சம் இங்ஙனம்;
உற்பத்தியானது பிரம்மலோகம் இங்ஙனம்.
சிகரங்களுடன் விளங்கும் வெகு அழகாக
சிறந்த மேரு மலையின் உச்சியில் அது.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி