3#7a. தத்துவ விளக்கம் (1)
நாரதன் கேட்டான் மேலும் ஐயங்கள்
நான்முகன் ஆகிய தன் தந்தையிடம்.
“நிர்குணை ஆன சக்தி எத்தகையவள்?
நிர்குணன் ஆன புருஷன் எத்தகையவன்?
அறிந்தவர் யாரேனும் உண்டோ – கண்டு
அனுபவித்தவர் யாரேனும் உண்டோ?
ஸ்வேத த்வீபதில் கடும் தவம் செய்தும்
சிவனும், சக்தியுமே தந்தனர் தரிசனம்.”
“நிர்குணை நம் கண்ணுக்குப் புலப்படாதது!
நிர்குணனை அறிய முடியும் ஞானத்தினால்.
வியாபித்துள்ளனர் அனைத்திலும் சிவ,சக்தி!
இயங்காது உலகில் எதுவும் சிவ சக்தியின்றி!
தியானிக்க வேண்டும் இவர்களை தேஹத்தில்!
தியானிக்கவேண்டும் தேஹத்தை ஆலயமாக!
குணங்களுக்கு அப்பாற்பட்ட நிர்குணனை
குணங்களுள்ள ஜீவனால் அறிய இயலாது!
அஹங்காரத்தின் வசப்பட்டவை முக்குணங்கள்;
அஹங்காரத்துக்கு அப்பாற்பட்டவன் பரம்பொருள்.
அஹங்காரம் முற்றிலும் அழிந்தால் மட்டுமே
அதற்கு அப்பாற்பட்ட பரமனைக் காணலாம்.
சூக்ஷ்ம ரூபத்தை உணர முடியும் ஞானத்தால்
ஞான யோகம் உணர்விக்கும் பரம்பொருளை!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி,




