1c. காமந்தன் புண்ணியம்
“வறுமையில் வாடுகின்றோம் நாங்கள்!
சிறு உதவியேனும் செய்ய வேண்டும் நீர்!”
பரிஹாரம் செய்ய அவகாசம் வந்தது!
பெருமகிழ்ச்சி கொண்டான் காமந்தன்
பொன்னும், மணியும் அள்ளித் தந்தான்;
இன்னும் பிறரை அனுப்பச் சொன்னான்.
மகிழ்ச்சிக் கடலில் திளைத்த அந்தணன்
நெகிழ்ச்சியுடன் கூறியவற்றைக் கேட்டு
வந்தனர் அநேகர் காமந்தனை நாடி!
நொந்தனர் அவர்கள் அவனைக் கண்டு!
“அந்தப் புதுவள்ளல் நீதானா கள்வா!
இந்தச் செல்வம் நீ ஈட்டியது எப்படி?
மங்கலம் இழந்த பெண்டிர் எத்தனை?
தங்கள் உயிர் தந்த மனிதர் எத்தனை?
நீ என்று அறியாமல் வந்துள்ள எமது
தீ வினை நீங்கச செய்வது எங்கனம்?”
“மாறி விட்டேன் உள்ளம் நான் என்று
கூறுவதை நீர் நம்பத் தான் வேண்டும்!”
“மெய் கூறுவதானால் செய்வாய் இதனை!
ஐயன் விநாயகன் கோவில் அடைந்தது பாழ்!
குறைவின்றி ஆலயத்தைச் சீரமைத்துக்
குறைப்பாய் நீ உன் பாவச் சுமைகளை ! “
சிற்பிகள் குழுமினர் சீரமைக்கும் பணியில்;
சிறந்த நந்தவனம் மலர்களைச் சொரிந்தது!
தாமரைக் குளம் தோன்றித் திகழ்ந்தது!
தாழ்வில்லாத குடமுழுக்கும் நிகழ்ந்தது.
திருவிழாக்கள் நடந்தன தொடர்ந்து;
திருப்பணிகள் அளித்தன திருப்தியை.
காமந்தனின் காலம் முடிந்துபோனது.
காலனிடம் இருந்தது பாவப் பட்டியல்.
ஆலயப் பணியினால் செய்த பாவங்கள்
ஆலைவாய்க் கரும்பென அழிந்து ஒழிய;
புண்ணியப் பயனை முதலில் விரும்பி;
கண்ணியப் பிறவி எடுத்தான் காமந்தன்.
தேவநகரில் சௌராஷ்டிரத்தில் சென்று
சோமகாந்தன் என்னும் இளவரசானான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.