# 62 (a). சமணமும், சைவமும்
அரிமர்த்தனின் மகன் சகநாதன்,
அவனுக்குப் பின்பு வீரபாகு தொடங்கி
ஒன்பது மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
கூன் பாண்டியன் அடுத்த மன்னன்.
முத்தமிழ் நாடுகளை ஒரு குடைக்கீழ்
சக்கரவர்த்தியாக ஆண்டு வந்தான்;
பொன், மணி, பெண்மணிகளைத் தந்து,
தன் நாட்டை மீட்டான் சேர மன்னன்.
நாட்டை மீட்க விரும்பிய சோழனும்,
நீட்டினான் நேசக் கரமும், பரிசுகளும்;
மங்கையர்த்திலகம் தன் செல்வ மகள்,
மங்கையர்க்கரசியை மனைவி ஆக்கினான்.
ஸ்ரீதனம் என்ற பெயரில் செல்வக்குவியல்;
ஸ்த்ரீகள், பல சேடிகள், இளம் தோழிகள்,
ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள்;
சோடை போகவில்லை இந்த சம்பந்தம்.
குலச் சிறையார் என்னும் நூல் வல்லுநர்,
குணவானும் வந்தார் நன்னெறி பகன்றிட.
மந்திரிப் பதவியில் அமர்ந்தார், பின்னர்
மந்திரிகளில் முதல்வர் ஆகிவிட்டார்.
சமணனாக மாறிவிட்டான் பாண்டியன்,
சமண இருளுள் மூழ்கியது அந்நாடு;
சைவ மதத்தையும், ஒழுக்கத்தையும்,
சைவ நெறிகளையும் புறக்கணித்தான்.
சமணர் பழக்க வழக்கங்கள் விரைந்து
அமணக் களையாக பரவியது நாட்டில்.
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி,
என்ன செய்வதென்று தெரியவில்லை.
குலச் சிறையாரும், குல அரசியும் அந்த
நிலைமை குறித்து கவலை கொண்டனர்.
கட்டுக்கடங்காமல் நிலைமை மாறினால்,
கட்டுப் படுத்த வல்லவன் இறைவனே!
ஆண்டவனிடம் சென்று இறைஞ்சினர்,
“தாண்டவம் ஆடும் தயாபரனே! நீர்
மீண்டும் சைவம் தழைத்திடச் செய்யும்;
யாண்டும் வேதம் ஒலித்திடச் செய்யும்.
மன்னனுக்கு நல்லறிவு வரவேண்டும்,
நன்னெறி நாட்டுக்குத் திரும்பவேண்டும்;
உள்ளம் உருகி வேண்டி நிற்கையில்,
கள்ளம் இல்லா மறையவனைக் கண்டனர்.
தில்லைப் பதியில் தீர்த்த யாத்திரை – பின்
தொல்லைகள் நீக்கும் ஆலவாய் அழகனைத்
தரிசிக்க வந்த அந்தணன் அவனிடம்,
கரிசனையோடு வினவினார் அமைச்சர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.