2#7b. பாண்டவர் சரிதை (2)
ஆசிரமத்தை அடைந்தனர் தர்மன் குழுவினர்.
அனைவரும் அவர்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
காணவில்லை ஆசிரமத்தில் மகான் விதுரரை!
வினவினான் அவரைக் குறித்து தர்ம புத்திரன்.
விரக்தி அடைந்த விதுரர் சென்றிருந்தார்;
பரம புருஷனை தியானிக்கத் தனியிடத்துக்கு.
தேடிச் சென்றான் தருமன் விதுரரை மறுநாள்.
ஒடுங்கி இருந்தார் ஆழ்ந்த தியானத்தில் விதுரர்.
ஜோதி வெளிப்பட்டது அவர் முகத்திலிருந்து;
ஜோதி கலந்தது தர்மன் முகத்தில் சென்று.
இருவர் அம்சமும் தர்மராஜனுடையதே;
ஒருவர் அம்சம் ஒடுங்கியது மற்றவரிடம்.
அந்திமக் கிரியைகள் செய்ய முற்படுகையில்
அசரீரி கூறியது, “விரக்தனை எரிக்கலாகாது!”
வந்தனர் வியாசரும் நாரதரும் ஆசிரமத்துக்கு;
குந்தி கூறினாள், ” காண வேண்டும் கர்ணனை!”
விரும்பினாள் காந்தாரி நூற்றுவரைக் காண;
விரும்பினாள் உத்தரை அபிமன்யுவைக் காண.
நீராடச் செய்தார் கங்கையில் அனைவரையும்
நீராடினார் கங்கையில் வியாச முனிவரும்.
தியானம் செய்தார் பராசக்தியைக் குறித்து;
தீர்க்கவல்லவள் அபிலாஷையை அவளே!
‘ஜகத்காரிணி, பரப்ரம்ம ஸ்வரூபிணி, மாயே
ஜகன்மாதா, ஸகுண நிர்குண ரூபிணி தாயே!
மகாதேவி, மணி த்வீப வாசினி, அம்பா!
மஹா வீரர்களை வரவழைப்பாய் இங்கே.
எந்த உலகத்தில் எந்த நிலையில் இருந்தாலும்.
உந்தன் அருளால் வரட்டும் அவர்கள் இங்கு!”
காண விரும்பியவரைக் கண்டனர் அனைவரும்.
கண்டபின் சென்றனர், வந்தவர் மறைந்தருளினர்.
வியாசர் சென்றார் தன் வழியே தனியாக
வந்தனர் மற்றவர் ஹஸ்தினாபுரத்துக்கு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


