19b. நான்கு மாடக் கூடல்.
பயந்து, நாணி, வெட்கிய வருணன்,
தயங்கிப் பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்து செய்ய விழைந்தான்
லிங்க பூஜை சொக்கநாதருக்கு.
வயிற்றுநீர் வியாதி நொடிப்பொழுதில்
கயிற்றை அவிழ்த்த கன்றாக ஓடியது!
ருத்திராக்கமும், திருநீறும் அணிந்து
ருத்திரனை உபாசித்தான் வருணன்.
கண்ணிய நதி நங்கைகள் தங்கள்
தண்ணிய நீரைத் தங்கக் குடங்களில்
அண்ணலின் அபிஷேகத்துக்கு அளித்து
புண்ணியம் எய்திப் புளகம் அடைந்தனர்!
வாசனைத் திரவியம், மலர்கள், சந்தனம்,
பூசனைக்கு வேண்டிய சில பொற்கலங்கள்,
அற்புதமான பொன்னாடைகள் இவற்றை,
கற்பகத் தரு மனமுவந்து அளித்தது.
பஞ்சாமிர்தம், ஐந்து வகைக் கனிகள்,
பஞ்சகவ்வியம், நைவேத்தியங்கள்,
தூப தீபங்களைக் காமதேனு உவந்து
தூய மனத்துடன் அவனுக்கு அளித்தது.
முறை தவறாமல் செய்தான் வருணன்,
நிறைவான பூஜை சொக்கலிங்கத்துக்கு;
ஆயிரம் நாமங்களை அர்ச்சனை செய்து
ஆயிரம் முத்துக்களை அர்ப்பணித்தான்.
வரம் தர விரும்பினான் கருணைக்கடல்,
வரம் தேவை இல்லையே இப்போது!
நீங்கிவிட்டது வயிற்று நீர் வியாதி,
நீலகண்டன் திருவருளால் வருணனுக்கு!
“சோதனை செய்தேன், பிழை பொறுப்பீர்!
வேதனை அடைகின்றேன், மதியிலி நான்!
போதனை பெற்றேன், தேவன் உங்களிடம்,
சாதனை மன்னர் நீங்களே! ஐயம் இல்லை!”
நான்கு மேகங்கள் நாற்புறமும் சூழ்ந்து
நான்கு மாடங்களாக நகரைக் காத்ததால்,
நான்கு மாடக் கூடல் நகர் என்ற பெயர்
நம் மதுராபுரிக்கு அமைந்து விட்டது.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.