# 17. மாணிக்கம் விற்றது.
# 17 (a). பயிரும், களையும்
மன்னர்களில் அநேகர் திருமணம்
மகாராணியுடன் புரிந்துகொண்டாலும்,
காமசுகத்தை அனுபவிக்க விரும்பிக்
காமக் கிழத்தியரை ஆதரிப்பார்கள்!
பொன்னும், மணியும் விரும்பியே
மன்னனுடன் கூடுவார்கள் அவர்கள்;
ராணிகளைப் போல ராஜ்ஜியத்தைப்
பேண வேண்டிய அவசியம் இல்லையே!
வீரபாண்டியனுக்குப் பிறந்தனர் முழு
வீணர்களாகிய மகன்கள் அநேகர்!
குலத்தை வளர்க்கப் பிறக்கவில்லை
குல மனைவியிடம் ஒரு மகன் கூட!
மகனை வேண்டி மன்னனும் மனைவியும்
மாதவம் செய்தனர், விரதம் காத்தனர்;
நல்ல வேளையாக ஒரு நல்ல நாளில்,
செல்ல மகன் ஒருவன் வந்து பிறந்தான்.
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்தான் அவன்;
என்ன நடக்கும் நாளை எனச் சற்றும்
எண்ணாமலே வாழ்த்து வந்தனர் அவர்.
வேட்டைக்குச் சென்ற வீரபாண்டியன்
வேட்டையாடப்பட்டான் வரிப்புலியால்!
குலப்பயிருக்குக் களையாக முளைத்த
குலத் துரோகிகள் காத்திருந்த வாய்ப்பு!
யானை, குதிரை, இரத்தினம், மணிகள்,
பொன், பொருள், அரசுச் சின்னங்கள்;
மாயமாக மறைந்து போயின! கூடவே
மாயமானார்கள் அந்த மாயாவிகளும்!
அந்திமக் கிரியைகளை செய்வித்து அவர்
சொந்த மகனுக்குப் பட்டம் சூட்டிட
விரும்பிய அமைச்சர்கள் கண்டது என்ன?
இரும்புச் சுவர் கஜானாவில் கொள்ளை!
மணி மகுடமும் இல்லை, நவமணிகளும்,
மன்னரின் சின்னங்களும் காணவில்லை!
பொன்னும், பொருளும், பிற செல்வங்களும்;
போன திசை எவருக்குமே தெரியவில்லை!
புதிய மகுடம் செய்து அணிவிக்கத் தேவை
புதுமையான நவமணிகள், ரத்தினங்கள்;
மகுடம் இல்லையேல் மன்னன் இல்லை!
மன்னன் இல்லையேல் அரசாட்சி இல்லை!
அரசாட்சி இல்லையேல் அரசியல் இல்லை!
அரசியல் இல்லாத நாட்டுக்குத் தொல்லை!
அரனே நமக்கு வழி காட்டுவான் என்று,
அரசிளங்குமரனுடன் அமைச்சர்கள் குழு
அரன் திருக் கோவிலைச் சென்று அடைந்தது.
அரனே அங்கு நின்றான் வியாபாரி வடிவில்!
ரத்தினங்களின் ஓர் அழகிய மூட்டையுடன்,
சித்திரம் போன்றதொரு அழகிய வடிவுடன்.
“என்ன கவலை உங்களை வருத்துகின்றது?
என்னிடம் தயங்காமல் நீங்கள் கூறலாமே!”
“மகுடம் புனைய வழில்லை குமரனுக்கு!
கபடமாகக் கவர்ந்து சென்றனர் முன்பே!”
“கவலையை விட்டு ஒழியுங்கள் நீங்கள்!
நவரத்தினங்கள் பல உள்ளன என்னிடம்;
பதினாறு கோடிப்பொன் விலை பெரும்
புதுமையான நவமணிகள், ரத்தினங்கள்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.