ஆக்கியோன் : சிவசண்முகம் .
தலைப்பு : திணை .
பட்டி மன்ற நடுவர் நெடுஞ்செழியனார் முதலில்
வேங்கை அணியினரை பேச அழைக்கிறார்..
திணை நாண்கு என்று கூறி அதற்குண்டான சான்றுகளை
முன் எடுத்து வைக்கின்றனர் நம் வேங்கை அணியினர் .
நாமும் கேட்போமா..?
அவையின் சான்றோர்களே வணக்கம்.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே.
என்று எம்பெருமானார் தமது தொல்காப்பியத்தில் (நூற்பா 5)
வகுத்து கூறியுள்ளார் .
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே !
மாயவன் (கண்ணன்) மேவிய காடு பொருந்திய உலகமும் ,
சேயோன் (முருகவேல்) மேவிய மைவரை உலகமும்
வேந்தன் (இந்திரன்) மேவிய தீம்புனல் உலகமும் ,
வருணன் மேவிய பெருமணல் உலகமும் .
முல்லை குறுஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்.
ஆக திணை நாண்கு மட்டுமே என்று கூறி
எனக்கு வாய்ப்பு அளித்த தலைவருக்கு நன்றி
கூறி விடை பெறுகிறேன்.
அடுத்து எழில் அணியினரை பேச அழைக்கிறார்
நடுவர் நெடுஞ்செழியனார் ..
எழில் அணியினர் ...'' வேங்கை அணியினரைப் பார்த்து
சிரிப்பதா அழுவதா
என்றே தெரியவில்லை !
எம்மான் தனது பொருளதிகாரத்தில் அகத்திணை இயலில் (நூற்பா 13 )
இருவகைப் பிரிவும் நிலைபெறத் ' தோன்றலும்
உரியதாகும் என்மனார் புலவர்
இது பாலைக்கு உரிய பொருளாம்
ஆறு உணர்த்துதல் நுதலிற்று .
மேலும் ...
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
சிலப்.காடுகான் . ( 64-66)
என்றும் பிற சான்றோர் செய்யுள் வகுத்துள்ளனரே !
ஆக..
பாலைக்கு நிலம் ஓதாது வேனிற்காலமும் நண்பகலும் ஒதினமையானும்..
''வந்தது கொண்டு வாராதது முடித்தல் '' (மரபு. 412)
என்பதற்கிணங்க கண்டுகொள்ளலாமே?
இந் நிலங்களில் வேனிற்காலத்து நிகழ்வான
கருப்பொருளாக கொள்ளப்படும் ..
பாலை நிலத்திற்கு தெய்வம் -கொற்றவை
மரம்- பாலை பண்-பாலை என்றும்
கொள்ளவேண்டும் !
எனவே பாலை சேர்த்து ஐவகைத்திணை
என்று கூறி விடை பெறுகிறேன்! .
நடுவர் நெடுஞ்செழியனார் தீர்ப்பு !
நன்று ! இங்கு வேங்கை அணியினரும் எழில் அணியினரும்
தத்தமது கருத்துக்கள் நிலைப்பெற அவர் தம் ஆதாரங்களை
அழகுற அடுக்கி ஒரு சொற்போரே நிகழ்த்திவிட்டனர் !
ஒருமுறை வேங்கை பதுங்கியது !
அவர்தம் நிலை கண்டு எழில் சிரித்தது !
மறுமுறை வேங்கை பாய்ந்தது !
எழில் மயங்கியது !
ஆகா ! என்னே ஒரு கண்கொள்ளாக் காட்சி !
இந்நிலையில் என்னை இங்கு தீர்ப்பளிக்க பணித்துள்ளனர் ..
நிலம் மயங்குருதல் போன்று
என்னிலையும் மயங்கிற்று !
மயக்கமுற்று தீர்ப்பு எழுதினால் மற்றவர்
என்னை எள்ளி நகையாட மாட்டாறோ?
என் அறிவிற்கும் -திறத்திற்கும் ஒப்பும் வகையால்
எழுதுகிறேன் ..தீர்ப்பு அல்ல ! இது ஒரு தீர்வு மட்டுமே!
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5
என்று தொல்காப்பியனார் அழகுற படம் பிடித்து காட்டியுள்ளார்.
இதன் முறையே பாலை நிலத்திற்கு தனியாக நிலம் குறிக்கப்பெறவில்லை
என்பதும் நாம் அறிந்ததே!
மேலும் பாலைக்கு தெய்வம் வேந்தன் ..
எப்படி வேந்தன் இந்திரன் ஆனான் என்பதும்
தெளிவுறவில்லை.
எனவே பாலை என்பதே ஒரு '' இடைச்செருகலோ''
என்று ஐயப்பாடும் எழுந்துள்ளது !
இதை சான்றோர்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன் .
எனினும் '' சொல்லிய முறையால் சொல்லவும் படும் ''
என்பதற்கிணங்க முல்லை குறுஞ்சி மருதம் நெய்தல்
இவற்றுடன் பாலை சேர்த்து ஐந்திணை என்று தீர்வு காண்கிறேன்