KANDA PURAANAM - DAKSHA KAANDAM
5b. உமை அன்னை.
சிவன் செயல் இன்றி இருந்தமையால்
சீவன்கள் உறைந்துவிட்டன செயல் இன்றி!
அஞ்சி நடுங்கினாள் உமை அன்னை.
கெஞ்சி வேண்டினாள் பின் வருமாறு!
“அசையும், அசையாப் பொருட்களில்
இசைந்து நிற்பது நீரே என அறிந்தேன்.
உயிர்களில் உறைந்து அவற்றின் அறிவை
இயக்குவது ஒழித்து நின்றீர் ஒருகணம்.
இமைப் பொழுதாகிலும் அதுவே உலகில்
யுகப் பொழுதாக நீள்வதும் மெய்யே!
உயிர்கள் தெளிவு பெற்று எழுந்து தம்
தொழில்கள் செய்திட அருள் புரிவீர்.”
இறைவன் அருள் புரிந்தார் மீண்டும்.
இயங்கின உயிர்த் தொகைகள் முன்போல்.
தேவர்கள் வந்து குழுமினர் கயிலையில்.
“தீவினையில் மூழ்கினோம் உணர்விழந்து!
கழுவாய் கூறியருள வேண்டும் எமக்கு!”
தொழுதுவேண்டிக் கொண்டது தேவர் குழாம்.
“அறிவு மயங்கி உணர்வை இழந்ததும்,
மறை வழி நில்லாது தீவினைப் பட்டதும்
உமையைச் சென்று சேரும் அஞ்சற்க!
முன் போல் உம் தொழில்களைப் புரிக!”
“உயிர்களைப் பற்றிய தீவினைகள் எல்லாம்
கயிலை நாதனே என்னைப் பற்றுவது ஏன்?”
“உன்னை நீயே வியந்து போற்றினாய்.
உன்னால் உயிர்கள் செயலிழந்தன.
தீவினைகள் உன்னைச் சேருவது முறையே!
நீயும் இதைச் சுமக்க வல்லவளே!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.