Devi Bhaagavatam - skanda 4
4#8b. பிரஹலாதன்
“எண்ணிறந்த புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன;
புண்ணிய தீர்த்தங்கள் பற்றிக் கூறவேண்டும் !”
“புண்ணிய, பாவங்கள் இல்லை நதிகளில்;
புண்ணிய, பாவங்கள் உள்ளன நமக்குள்!
மனம், மொழி, மெய் தூய்மையிருந்தால்
புனித நீர் உள்ளது ஒவ்வொரு காலடியிலும்.
மனம், மொழி, மெய் தூய்மையற்றவனுக்கு
புனித கங்கையும் புழு நெளியும் மாசு நீரே!
பாவங்கள் நீங்கிய மனதுடையவனுக்குப்
பாவனம் ஆகும் எல்லா நதிகளின் நீரும்.
கங்கை கரையில் உள்ளன – அனேக
சிங்கார நகரங்களும், சிற்றூர்களும்.
குடியிருக்கின்றனர் அங்கு பல மக்கள் – தினம்
குடிக்கின்றனர் குளிக்கின்றனர் கங்கை நீரில்!
மனத் தூய்மை வருவதில்லை குளியலால்!
மனத் தூய்மையே மற்றவற்றுக்கு ஆதாரம்
நைமிசாரண்யத்தில் உள்ளது புனித தீர்த்தம்;
நாடுவர் அதை நாடெங்கும் வசிப்பவர்கள்.”
பிரஹலாதன் சென்றான் நைமிசாரண்யம்
உறவினர்கள், சுற்றத்தினர்கள் புடை சூழ!
நிர்மலமான புண்ணிய தீர்த்தத்தில் முங்கி
நீராடினர் மாசற்ற மனங்களுடன் அவர்கள்.
சரஸ்வதி தீரத்தை அடைந்த பிறகு அங்கு
பிரஹலாதன் செய்தான் தானமும், தவமும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி