3#19b. சுதர்சனன்
அழைத்தனர் சுதர்சனனைப் பிற மன்னர்கள்.
“அழைத்ததால் வந்தாயா? அழைப்பின்றியா?
தனியாளாக வந்துள்ளாய் சுயம்வரத்துக்கு – இல்லை
தனக்கெனப் படை, பரிவாரம் அமைச்சர்கள் எதுவும்.
சத்ருஜித் வந்துள்ளான் பாட்டன் யுதாஜித்துடன்;
சத்ருஜித்துக்கு உதவ உள்ளது ஒரு வலிய படை.
உனக்கு மாலையிட்டு அவள் தேர்வு செய்தால்
உடனே மூளும் இங்கு பெரும் போர் ஒன்று.
ஒருவரும் இல்லை உனக்குப் போரில் உதவிட.
ஒருவனாக நீ என்ன செய்வாய் என்பதைக் கூறு.
உன் பலத்தை நம்பி இங்கிருப்பாயா – அல்லது
உன் நலத்தைக் கருதித் திரும்பிச் செல்வாயா?”
“உண்மை தான் நீங்கள் கூறுவது முற்றிலும்;
நண்பர்கள் என்று யாரும் இல்லை உதவிட.
போரில் வெல்லும் வலிமை எனக்கு இல்லை;
சோர்வில் தோள் கொடுத்திட யாரும் இல்லை;
பொன் இல்லை, பொருள் இல்லை, சேனை இல்லை!
என்ன இருக்கிறது என்னிடம் அவளை வசீகரிக்க?
வேடிக்கை பார்க்க வந்துள்ளேன் நான் இங்கு!
வேலை, வெட்டி இல்லாதவனாக எண்ணுங்கள்.
பராசக்தியின் ஆணையால் வந்துள்ளேன் நான்;
பராசக்தியால் செய்ய இயலும் எதுவும், எங்கும்.
ஆண்டியாக்க இயலும் அரசனை தேவிக்கு!
ஆண்டியை அரசனாக இயலும் தேவிக்கு!
மும்மூர்த்திகள் முயன்று நின்ற போதிலும்
எம்மாத்திரம் அவர்கள் தேவியின் முன்பு?
எல்லாம் அவள் செயல், நம்முடையது அல்ல!
எல்லாம் நடக்கும் அவளது விருப்பம் போல!
நடப்பது நடந்தே தீரும் என்பதால் – நாம்
நடப்பவை பற்றிக் கவலைப் படவேண்டாம்.
யாருமில்லை பகைவர்கள் என்று எனக்கு;
யாரேனும் வரலாம் பகைவர் என்று கூறி!
பாதுகாப்பது பராசக்தியின் திருவருள் – நான்
பரமேஸ்வரியை நம்புகின்றேன் என் உளமார.
துள்ள மாட்டேன் வெற்றி அடைந்த போதிலும்!
துவள மாட்டேன் தோல்வி அடைந்த போதிலும்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி