14a. முருகனின் குறும்பு.
குறும்பு செய்வது முருகனுக்குக் கரும்பு.
திருவடிகளில் தண்டை, சிலம்பு, கழல்,
திருநுதலில் வீரப்பட்டிகை ஒளிர்ந்திடும்,
அரையில் கிண்கிணி, காதில் குண்டலங்கள்!
மன்றுகள், தடாகம், பூங்கா, ஆறுகள்,
குன்றுகள், விண்வெளி, மண்வெளி, திக்குகள்,
கடல்கள், கதிரவன், திங்கள் என்னும் பற்பல,
இடங்கள் அனைத்திலும் இனிதே உலாவுவான்.
ஆறு முகத்துடனும், ஒரு முகத்துடனும்,
அரிய முனிவராக, இனிய சிறுவனாக,
பறந்தும் ஓடியும், நடந்தும் செல்வான்,
பரி, கரி, தேர், விமானம் ஏறி அமர்ந்து.
குழல் ஊதுவான், வீணை இசைப்பான்,
முழக்குவான் கருவிகள், மணி அடிப்பான்,
மலைகளைக் கொண்டு வந்து குவிப்பான்;
தலை தடுமாற நிறுத்துவான் நிலத்தில்!
வருத்துவான் கடல்களை ஓரிடத்துக்கு.
புகுத்துவான் மேருவைப் பாதாளத்தில்.
நிறுத்துவான் கங்கை நதியைத் தடுத்து,
பொருத்துவான் திக்கஜங்களை ஒன்றாக.
கங்கை நீரால் அணைப்பான் ஊழித்தீயை;
கருடனும், வாசுகியும் போர் புரிந்திடும்;
பாதாள நாகங்கள் நிலத்திற்கு வரும்,
பாதாளத்தில் சென்று சேரும் கடல் நீர்.
கதிரவன் செல்வான் திங்கள் மண்டலத்துக்கு
கதிரவன் மண்டலத்துக்குத் திங்கள் செல்லும்.
கனவிலும் எண்ணமுடியாத பல லீலைகளை
நனவாக்கிக் கொண்டிருந்தான் பாலமுருகன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.