# 57 (a). சிவன் இட்ட சாபம்
ஒருமுறை ஏகாந்தத்தில் அன்னைக்கு
குரு உபதேசம் செய்தார் சிவபிரான்.
வேத விழுப்பொருளின் சாரங்களை
வேண்டா வெறுப்பாகக் கேட்டாள் உமை !
“பாராமுகம் காட்டி விட்டாய் பெண்ணே நீ!
வேத விழுப்பொருளில் விருப்பம் இன்றியே!
ஏனோ தானோ என்று கேட்டதால் இன்று
வீணாகச் சாபம் பெறப் போகின்றாய் நீ!
விரதங்கள், தருமம் போன்ற எதுவும்
சிறிதும் இல்லாத பரதவ குலத்தினில்
பெண்ணாகப் பிறந்து தூய்மை அடைவாய்!
விண்ணுலகத்துக்கு மீண்டும் வரும்வரை.”
“தங்களைப் பிரிந்து தரியேன் இன்னுயிர்,
தாங்கள் அறியாத உண்மையா இது?”
“வலைஞன் மகளாக வளரும் உன்னை
வதுவை புரிந்து உன் சாபம் தீர்ப்பேன்!”
நடந்ததை அறிந்து அடைந்தனர் சினம்
நம்பி ஐங்கரனும், தம்பி ஆறுமுகனும்;
வேதச் சுவடிகளை வீசினான் கடலில்
வேழமுகன் தந்தை தடுக்கும் முன்பே!
சிவ ஞானச் சுவடியைப் பறித்து விட்டுச்
சிவகுமாரனும் அவற்றைக் கடலில் வீசவே
தொந்தரவு செய்யும் பாலகரை அனுமதித்த
நந்தி தேவன் மீது பாய்ந்தது சிவன் சினம்!
“இட்ட கட்டளைகளை மீறிவிட்டாய் நீ!
கட்டங்கள் பல விளைந்து விட்டனவே!
பாரில் சென்று விழுந்து, நீரில் பிறந்து,
பரிதவிப்பாய் நீ பெரிய சுறா மீனாக!”
ஐங்கரனுக்குச் சாபம் இட்டால் அது
ஐயனையே வந்து அடைந்துவிடுமே!
ஆறுமுகனைச் சபித்தார் வணிகனின்
ஊமை மகனாகச் சென்று பிறக்கும்படி!
சாபம் பலித்து விட்டது உடனேயே!
நந்தி தேவன் இப்போது கொடிய சுறா!
உமை மாறினாள் ஒரு பசுங்குழவியாக.
குமரன் ஊமை உருத்திர சருமானாக!
கவனம் வைக்க வேண்டும்கல்வியில் !
மறை பொருளின் மறைந்த பொருளை.
கவனம் இன்றிக் கேட்டதும் தவறே!
கடலில் சுவடியைப் போட்டதும் தவறே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


