# 50. சுந்தரேச அம்பு எய்தது.
# 50 (a). தோல்வியின் விளிம்பில்!
வங்கிய சேகரபாண்டியன் ஆட்சியில் நாட்டில்
தங்கினர் அன்புடன் கலைமகள், அலைமகள்;
நிலமகள் ஈந்தாள் தன் வளம் அனைத்தும்,
நிலத்தில் வாழும் செல்லப் பிள்ளைகளுக்கு.
நன்றாக வாழ்ந்தால் காணப் பொறுக்குமா எதிரிக்கு?
பொன்றாவது மகிழ்ச்சியைக் குலைக்க வேண்டுமே!
விக்கிரம சோழமன்னன் தன் நண்பர்களுடன்
அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டான்.
வடநாட்டு அரச நண்பர்கள் உதவியுடன்
படை எடுத்து வந்தான் பாண்டியன் மீது!
உடைத்து எறிந்தான் வாவிகள், ஏரிகளை!
கடத்திச் சென்றான் கறவைப் பசுக்களை!
கடலனைய சேனையும், வட நண்பர்களும்
படையெடுத்து வரும் செய்தி கேட்டதும்,
சமுத்திரம் அனைய சேனையை வெல்வதற்கு
சோமசுந்தரரிடமே பாண்டியன் சரணாகதி!
செஞ்சடையும், பிஞ்சு நிலவும் திகழும் ஈசன்
செங்கழல்கள் தவழும் பாதங்கள் பற்றினான்;
“அஞ்சற்க பாண்டிய மன்னா! நம்பி என்னிடம்
தஞ்சம் அடைந்த உனக்கே வெற்றி நிச்சயம்!”
ஓடி வந்த ஒற்றன் சொன்ன செய்தி இது,
“நாடிச் சேனைகள் நெருங்கின ரிஷபகிரியை!”
நொடியில் நால்வகைப் படைகள் புடை சூழ
இடிபோல் முழங்கும் அமர்க்களத்தை அடைந்தான்.
ஆலவாய் மதிலின் வெளிப்புறம் நின்றது
அலை அலையாகப் பகைவர் அணி வகுப்பு!
இரு படைகளும் பொருதலாயின நேருக்கு நேர்
பெருத்த ஆரவாரத்துடனும், ஆர்வத்துடனும்!
தேருடன் குலுங்கிப் பொருதன தேர்கள்!
வீரர்களுடன் பொருதனர் பிற வீரர்கள்!
குதிரையுடன் குதிரையும், யானையுடன்
எதிர் நின்று யானையும் பொருதலாயின.
வடவர்கள் சேனை திடமாக முன்னேற
திடுக்கிட்ட பாண்டியர் மருண்டுவிட்டனர்!
போட்டது போட்டபடி ஓடலாயினர்
தேட்டம் இழந்து விட்ட அந்த வீரர்கள்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி!



