1#17b. ராகியும், விராகியும்
வருந்தினான் காவலன் தன் செய்கைக்கு;
விரும்பினான் மன்னிப்புத் தன் செய்கைக்கு.
“கடமையைச் செய்தாய் நீ, வருத்தம் இல்லை!
கடமையன்றோ காவலன் நாட்டைக் காப்பது?
தவறு செய்ததை உணர்கின்றேன் நானே இன்று;
எவர் தேசத்திலும் எளிதாக நுழையலாம் என்று.”
ஞானவானைக் கண்டதும் பிறந்தது ஆவல்
ஞானம் பெற்றிடக் காவலன் அவனுக்கும்.
“சுகம் யாது? துக்கம் யாது? கூறுவீர் ஐயா!
பகைவன் யார்? நண்பன் யார்? பகருவீர் ஐயா!
நலத்தை நாடுபவன் செய்ய வேண்டியது யாது?
விளக்க வேண்டும் நீர் இவற்றை எனக்கு!” என
“சம்சாரத்தை விரும்புபவன் ஆவான் ராகி.
சம்சாரத்தில் அடைவான் ஒரு மன மயக்கம்.
விரும்புவது கிடைத்துவிட்டால் வரும் சுகம்;
விரும்புவது கிடைக்காவிடில் பெரும் துக்கம்.
விருப்பத்துக்கு துணை நிற்பவனே மித்திரன்.
விருப்பத்துக்குத் தடை செய்பவனே சத்ரு.
விராகி அனுபவிப்பான் ஆத்ம சுகத்தை!
விரும்பமாட்டான் அவன் விஷய சுகத்தை!
விசாரம் செய்வான் ஆத்மாவைக் குறித்து,
விலைபோக மாட்டான் மோக வேகத்துக்கு!
சம்சார சுகமும் அவனுக்கு ஒரு துக்கமே.
சம்சாரத்தை வெறுப்பவனுக்கும் உள்ளன.
பலவிதப் பகைவர்கள் – காமம், குரோதம்,
லோபம், மதம், மாச்சர்யம், போன்றவை.
உண்டு ஒன்று நண்பன் உறவு என்று;
உள்ளத்தில் நிலவும் ஆனந்தமே அது!”
அனுமதித்தான் காவலன் நகரில் நுழைய;
அதிசய நகரைச் சுற்றி வந்தார் சுகமுனிவர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


