31. உலவாக்கிழி அளித்தது.
# 31. உலவாக்கிழி அளித்தது.
குலபூஷண பாண்டியன் விளங்கினான்
குலத்துக்கே குன்றிலிட்ட விளக்காக.
விரதங்களை விடாமல் அனுஷ்டித்ததால்
கர்வம் பெருகலாயிற்று மெது மெதுவே!
மறையவர்களுக்கு இல்லை மரியாதை;
மழையும் பொய்த்தது வேள்விகள் இன்றி;
வறுமையின் கொடுமை அதிகரிக்கவே,
குறைந்து போயின யாகமும், வேள்வியும்.
நினைத்து வருந்தினான் குலபூஷணன்;
மனத்தால் வேண்டினான் பெருமானிடம்,
“உன் திருப்பணிகளுக்கே செலவிட்டேன்
என் பொக்கிஷங்களை எல்லாம் ஐயனே!
வறுமைகள் நீங்கி வளமை கொழித்திட,
வழி ஒன்றைக் காட்டுங்கள் என் ஐயனே!”
குறை மன்னனிடம் இருந்ததால், பிரான்
மறுமொழி கூறாமல் மௌனம் காத்தான்.
தரையில் படுத்து, இறையை நினைத்தவனின்
கனவில் தோன்றினான் சித்தர் சிவபிரான்;
“மறையவர்களை நீ மதிக்கவில்லை மன்னா!
மறை என்பது வெறும் ஓலைச்சுவடிகள் அல்ல!
என் இருக்கை, என் வாஹனம், என் கண்கள்,
என் வாக்கு, என் வடிவம், என் சக்தி வேதமே!
வேள்விகளே வான்மழைக்கு வித்தாகும்,
வேள்விகள் இன்றேல் வான்மழை பொய்க்கும்!
பொன், பொருள் இல்லை என்று அஞ்சற்க!
உன் தேவைகளை எல்லாம் நிறைவேற்றும்
உலவாக்கிழி ஒன்று உவந்து அளித்தேன்!
செலவாக்கினாலும் குறையாது என்றும்!
இந்தப் பொற்காசுகளின் உதவியால் நீயும்
சொந்த நாட்டின் வறுமையைத் தீர்ப்பாய்!”
திரு நீற்றை நெற்றியில் இட்டுவிட்டுத் தம்
திருக் கரங்களால் கிழியினை அளித்தார்.
விழித்துப் பார்த்து வியந்தான் மன்னன்,
கிழி இருந்தது, பொன்னால் நிறைந்தது;
அரனை வணங்கி ஆனந்தம் அடைந்தான்;
அரியணை மேல் அதை வைத்துப் பூஜித்தான்.
வாரி வழங்கினான் மறையவர்களுக்கு,
குறைவற்ற யாக, யக்ஞங்கள் நடந்தன;
மாரி பொழிந்தது நிறைவான யாகத்தால்,
வறுமை ஒழிந்தது, வளமை செழித்தது.
பொன்னாலே இழைத்தான் குலபூஷணன்,
பொன்னார்மேனியன் கோவில் விமானத்தை.
அன்னையின் கோவிலை, அறுகால் பீடத்தை,
அழகுற அமைத்தான் அதன் கோபுர வாசலை.
வேதியர், வேதாந்தியர், வியாகரணர்,
சிவ விரதர், நியாயிகள், சிவாகமியர்,
துறவியர் என்னும் எல்லாவித மக்களும்
வறுமை நீங்கிச் செழித்து வாழ்ந்தனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.