20. எல்லாம் வல்ல சித்தர் ஆனது.
அபிஷேக பாண்டிய மன்னன் மாறாத
அபிமானம் கொண்டிருந்தான் சிவன் மீது;
அன்புக்கு அடிமையான ஈசன் அவனோடு
அன்புடன் விளையாட விரும்பினான்!
வடிவடுத்தான் அழகிய சித்தர் பிரானாக;
முடிக் கற்றைகள், புலித்தோல், இளவயது;
தங்க நிற நெற்றியில் திருநீற்றுப்பட்டை;
தங்கப் பூண்கள் இட்ட அழகிய ஒரு பிரம்பு!
மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்;
கடை வீதிகள், சித்திரக் கூடங்கள்;
நிலவு முற்றம், நாற்சந்திகள் எங்கும்
அலகிலா இந்திரஜாலங்கள் செய்தார்!
ஆண் மகனைப் பெண்ணாக்கி விடுவார்;
ஆண்மகன் ஆக்குவார் அழகிய பெண்ணை;
வாலிபர்கள் வயோதிகர்கள் ஆனார்கள்;
வயோதிகர்கள் வாலிபர்கள் ஆனார்கள்;
கூனனை நிமிர்த்தி அழகனாக்குவார்;
குருடனுக்குக் கண் பார்வை தருவார்;
செவிடன் கேட்பான்; ஊமை பேசுவான்;
முடவன் காலை வீசி நன்கு நடப்பான்;
இரும்பு உருமாறி பொன்னாகிவிடும் ;
ஈயம், தாமிரம், வெள்ளியும் கூட;
பண்டிதன் ஆவான் பாமரன் நொடியில்;
சண்டிராணி அழகிய மடந்தை ஆவாள்;
சித்தரின் சித்து விளயாடல்களால்
சித்தம் பறி போனது பாண்டியனுக்கு!
“வித்தகர் அவரைக் கண்டு நான் என்
அத்தனாகவே வணங்குவேன் அவரை!”
ஏவினான் தன் ஆணைக்கு அடிபணியும்
ஏவலர்கள் சிலரைச் சித்தர் பிரானிடம்;
பணியாட்கள் சித்து விளையாடல்களில்
பணிமறந்து சிலையாக நின்றுவிட்டனர்;
மதி மந்திரிகள் அனுப்பப்பட்டனர் பிறகு
மதி மயக்கும் சித்தரை அழைத்துவர;
“மன்னனுக்கு எந்த நன்மையையும்
என்னால் விளையாது! வரமாட்டேன்!”
மதி மந்திரிகளின் இத்தகையதொரு
பதிலைக் கேட்டு எண்ணினான் மன்னன்,
“தேவருலக மன்னனையே மதியாதவர்
பூவுலக மன்னனையா மதிக்கப் போகின்றார்?”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


