#202. "நான் யார்?"
அடையலாம் நாம் பரிபூர்ண ஆத்ம ஞானத்தை,
அடைந்தால் "நான் யார்?" என்பதன் விடையை!
இளம் வாலிபன் ஆக இருந்தான் ஒரு சீடன்;
உளம் நிலை பெறவில்லை ஞானத் தேடலுக்கு!
உணர்ந்தார் குரு நாதர் இந்த உண்மையை;
உணர்ந்து கொண்டார் என்ன செய்வதென!
இருக்கச் செய்தார் அவனை நந்த வனத்தில் ;
இருக்கச் செய்தார் ஓர் அழகியை அவனுடன்.
இருந்தனர் இருவரும் இன்ப உலகத்தில்;
நீந்தினர் இருவரும் இன்ப வெள்ளத்தில்.
வந்தார் குருநாதர் மீண்டும் ஒருமுறை;
வினவினார், "வேறு எதுவும் தேவையா?"
"இன்பமாக உள்ளோம் யாம் உம் தயவால்;
இனித் தேவை என்பது எதுவும் இல்லை!"
வினவினார் குருநாதர், "இது என்ன கூறு?"
விடை தந்தான், " இது சியாமாவின் கை !"
வினவினார் குருநாதர், "இவை என்ன கூறு?"
விடை தந்தான், " இவை சியாமாவின் கண்கள்!"
தொடர்ந்தன கேள்விகள் மேலும் மேலும்;
தொடர்ந்து காது, மூக்கு, வாய், முகம் பற்றி !
பொறி தட்டியது சீடன் மனத்தில் ஓர் ஐயம்;
அறிய வேண்டும் இந்த சியாமா யார் என்பதை!
"குருவே கூறுவீரா இந்த சியாமா யார் என்பதை?"
அருளுடன் அழைத்துச் சென்றார் குருநாதர் அவனை.
தயார் ஆகிவிட்டான் சீடன் ஆத்ம விசாரத்துக்கு;
தருணம் இதுவே தமது போதனையைத் துவக்க.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி