KANDA PURANAM - DAKSHA KAANDAM
2a. தக்கனின் தவம்.
சிவனைக் குறித்துத் தவம் செய்து
அவனருள் பெற விழைந்தான் தக்கன்;
தவம் செய்வதற்குத் தகுந்த இடத்தைத்
தனக்குத் தருமாறு தந்தையைக் கேட்க;
மனத்திலிருந்து தோன்றிய மானசவாவியை
மகன் தவம் செய்யத் தந்தான் தந்தை.
தடாகத்தை அடைந்த தக்கன் தன்
தவத்தை உடனே தொடங்கிவிட்டான்.
உயிர்க்காற்றை எழுப்பினான் மேலே!
தீயை மூலாதாரத்தில் வெளிப்படுத்தினான்.
அமிர்த தாரையைச் புருவ மத்தியில்
அடைந்து உடலை முழுக்காட்டினான்;
ஒருமையோடு ஐந்தெழுத்தை ஓதினான்;
ஓராயிரம் ஆண்டுகள் தவம் செய்தான்.
காலனை உதைத்த முக்கண்ணன்
காளை ஊர்தியில் எழுந்தருளினான்.
“உளம் மகிழ்ந்தோம் உன் பக்தியால்;
உளம் மகிழ நீ விழைவது யாது?”என,
“என் ஆணையுருளை எங்கும் செல்லவும்,
என் ஆணைகள் என்றும் நிறைவேறிடவும்,
உன்னைப் போற்றுபவர் என்னைப் போற்றவும்,
உனையன்றி பிறதெய்வம் தொழாத மேன்மையும்,
இறைவியே என் மகளாகும் பெரும் பேறும்,
இறைவனே என் மருகனாகும் அரும் பேறும்
தரவேண்டும் தயாபரனே நீ எனக்கு!
தரவல்லவன் தரணியின் நீயே எனக்கு!”
“மேன்மைகள் அனைத்தும் தந்தோம்!
நேர்மையில் நின்றால் நிலைக்கும் அவை!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.