39. மாமன் வழக்கு உரைத்தது.
வணிகன் ஒருவன் வாழ்ந்திருந்தான்;
தனபதி என்பவன் மதுராபுரியினிலே!
புத்திரப்பேறு இல்லாததால் அவன்
தத்தெடுத்து வளர்த்தான் மருமகனை!
மறு பிறவியிலேனும் தம் இருவருக்கும்
குறைவின்றிக் குழந்தைப் பேறு வேண்டி,
மருமகனுக்குச் சொத்தை அளித்துவிட்டு,
மாமன் மாமியுடன் சென்றான் வனவாசம்.
தனியாக மகனுடன் வாழ்ந்தவளை,
இனிதாக வென்று விடலாம் என்று,
தாயாதியர் பொய்வழக்குகள் உரைத்து
தனபதி தந்த சொத்தைப் பிடுங்கினார்.
நில புலன்கள், வீடு, வாசல் மற்றும்
நகை நட்டுக்கள், பிற பொருட்கள்,
மாடு, கன்று என்று எல்லாம் போக;
நடு வீதிக்கே வந்து விட்டனர் பாவம்!
ஈசன் கோவிலுக்குச் சென்று -அன்பர்
நேசனிடம் புலம்பித் தீர்த்து விட்டாள்.
“பாலகனுடன் பரிதவிக்கின்றேன் நான்!”
கோலம் புனைந்தான் அந்தணனாக ஈசன்!
“வருந்த வேண்டாம் பெண்ணே நீ!
இறைவனே துணை திக்கற்றோருக்கு!”
மறுமுறை சென்று உன் வழக்குரைப்பாய்
வருவான் ஈசன் உனக்கு சாட்சி சொல்ல!”
மறையவர் தந்த அருள் வாக்கினால்,
மறுமுறை தாயாதிகளிடம் சென்றாள்;
“தருமம் இன்றிப் பிடுங்கிக் கொண்டீர்,
அருமை மகன் சொத்து அத்தனையும்!”
யாருமில்லை உதவுவதற்கு என்றதும்,
தாறுமாறாகப் பேசி அடித்தனர் அவளை;
கோவலனிடம் சென்று வழக்கு உரைக்கக்
காவலர்கள் இட்டு வந்தனர் தாயாதிகளை.
வானப் பிரஸ்தம் சென்ற வணிகன்
தனபதி உருவில் வந்தான் சிவன்;
“காவலன் இல்லையா? கடவுள் இல்லையா?
நியாயம் இல்லையா? தருமம் இல்லையா?”
தங்கையைத் தனயனை அணைத்துத்
தனபதி தாங்கினான் பெருகிய அன்புடன்;
தனயன் அணிந்திருந்த நகைகளை
தனபதி பட்டியல் இட்டான் அவையில் !
தனபதி அல்ல வந்திருப்பது என்று
தாயாதியர் புது வழக்குரைத்தனர்.
குடும்பம், குடி, பெயர், பட்டம், என்று
எடுத்துரைத்தான் தனபதி சரியாக!
தாயாதிகள் வழக்குப் பொய்யானது!
தனபதியின் வழக்கு மெய்யானது!
தாயாதிகள் திருப்பித் தந்துவிட்டனர்
தனயனிடம் பறித்த சொத்துக்களை.
அஞ்சி ஓடினர் அனைத்து உறவினரும்!
மிஞ்சியது தனபதி அளித்த சொத்து;
தத்துப் புத்திரனின் கதையைக் கேட்டதும்,
தந்தான் பல பரிசுகள் பாண்டிய மன்னனும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி