எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 101

வலிய ஊழின் தன்மைகள் பற்றி வள்ளுவர் தன்
அரிய சில குறட்பாக்களில் வலியுறுத்துகின்றார்.

கோடிப் பொருள் முயற்சியால் குவித்தாலும், அதை
நாடி நுகருதல், ஊழின் தயவின்றி இயலாது போகும்.

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது', என்கிறார்.

நன்மையும், தீமையும் வாழ்வில் மாறி மாறி வரும்
தன்மையை உடையவை, என்பது உண்மை ஆகும்!

நன்மை வந்தால், மகிழும் மனநிலை உடையவர்கள்,
தீமை வந்தால், மனம் கலங்குவது ஏன் எனக் கேள்வி.

'நன்றாங்கால் நல்லவாக் காண்பர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்', என்று வினவுவது குறள்.

பெரிய வலிமையுடைய ஊழை, மாற்றிவிட எடுத்த
அரிய முயற்சியையும் முந்தி, ஊழே முன் நிற்கும்!

பலவகைகளில் செயல்களைத் தடுத்து, செய்திடும்
பலவித மாற்றங்களை, வலிவுடைய ஊழ் வினை.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்', என்கின்றார்.

விதியால் துன்பநிலை வந்தாலும், முயன்று நம்
மதியால் உய்யும் வழிகண்டு, முன்னேறுவோம்!

:ballchain:
 
அறத்துப்பால் முற்றுப் பெறுகிறது...

திருவள்ளுவர் அருளிய, அரிய குறள் அமுதத்தில்,
அருமையான அறத்துப்பால் முற்றுப் பெறுகிறது!

சிறப்புறத் தொடரும் பொருட்பால் குறட்பாக்களில்,
சிறந்த சில முத்துக்களை எடுத்துப் போற்றுவோம்!

:hail:
Raji Ram
 
என்னைக் கவர்ந்த சில குறட்பாக்களைப் பார்த்தபோது,

முன்னே வந்தன, பொருட்பாலில் சில குறட்பாக்கள்.

அந்த அதிகாரம் வரும்போது, அது பற்றிக் குறிப்பு,
தந்து விடுகின்றேன்; வள்ளுவம் வாழ்க! வளர்க! :hail:

அன்புடன்,
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 102

அரசருள் ௦சிங்கம் ...

நாளும் நல்வாழ்வு வாழ்ந்து உயர, அறத்துப் பால் இருக்க,
மேலும் குறட்பாக்கள் கூறுகிறார், பொருட்பால் அமைக்க.

ஆதி பகவனின் சிறப்பை முதலாக வைத்துவிட்டார் அங்கு;
ஆளும் அரசரில் சிங்கத்தை நமக்குக் காட்டுகின்றார் இங்கு!

காடாளும் அரசன் சிங்கம் என்பது ஒப்புக்கொள்கின்றோம்.
நாடாளும் அரசருள் சிங்கம் ஆக என்ன, என்ன வேண்டும்?

ஆற்றல் மிக்க படை; அறிவில் சிறந்த மக்கள்; குறைவிலா
ஏற்றம் மிக்க வளம்; குறையற்ற அமைச்சர்; வலிமையான

முறியாத நட்பு; மோதி அழிக்க முடியாத வலுவான அரண்;
அரிதான இவை ஆறையும் உடையவனே, அரசருள் சிங்கம்!

நல்ல படையும், அறிவில் சிறந்தோரும், சிறந்த வளமும்
நன்கு அமைந்த நம் நாட்டில், மற்றவை வருவது எப்போது?

:wof:
 
மிகவும் ரசிக்ககூடியவை நன்றி
தங்கள் ஊக்கம், எந்தன் ஆக்கம்.... தொடர்ந்து படியுங்கள் !

நன்றி, :cool:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 103

தகுதிகளும் நற்பண்புகளும்...

மக்களை ஆளுபவனுக்கு வேண்டும் தகுதிகள் எவையென
சொற்களை அழகுற அமைத்து, ஒரு குறட்பா ஆக்குகின்றார்.

நல்ல துணிவு, இரக்கமுடைய சிந்தை, தெளிந்த அறிவாற்றல்,
நல்ல குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கே அவை.

'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு', என்கின்றார்.

துணிவு இருப்பவரே முயற்சி செய்வார்; அறிவுடன், நெஞ்சில்
கனிவு இருந்தால்தான், உயர்ந்த குறிக்கோளையும் நாடுவார்.

நல்ல பண்புதான் தகுதிகள் அமைய அடிப்படை ஆகும். எந்த
நல்ல பண்புகள் மூன்றும் ஆள்பவனுக்கு நிலையாகத் தேவை?

காலம் கடத்தாது நடவடிக்கை எடுத்தல், நல்ல அறிவாற்றல்,
நாளும் குறையாத துணிவு ஆகியவையே அந்த மூன்றாகும்.

'தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு', என்பதே அந்தக் குறள்.

தகுதி உள்ளவர் கைகளில் ஆட்சி செல்லவும், அவர்களுக்குத்
தகுதி வர நற்பண்புகள் அமையவும், நாமும் வேண்டுவோம்!

:pray:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 104

இனிமையான வாக்கு...

திறமையான நல்லாட்சி அமைய வழி கூறுகிறார் அவர்.
அருமையான ஏழு சொற்களில் குறளாக அமைக்கிறார்.

முறையாக நிதி திரட்ட வழி வகுத்தல்; பின்னர் திரட்டல்;
குறையாது அதைக் காத்தல்; நல்ல வழியில் செலவிடுதல்.

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு', என்கின்றார்.

எளிய தோற்றத்துடன், கடுஞ்சொல் பேசாத அரசனை
இனிய நல்ல அரசன் என்று, உலகத்தவர் பாராட்டுவர்.

'காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்', என்பதோடு கூறுகிறார்,

இனிமையான வாக்குடன், தக்கவருக்கு ஈந்து காக்கும் ஓர்
இனிமையான பண்பு இருப்பவனுக்கு, வையகம் வசப்படும்!

'இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு', என்றும் உரைக்கின்றார்.

எத்தனை ஆண்டுகள் முன்னர் வடித்த குறள், இன்றும்
இத்தனை அழகாகப் பொருந்துவது, வியப்பே ஆகும்!

:thumb:
 
Last edited:
தகுதிகள் பண்புகள்.....

அரசனுக்கு வேண்டிய தகுதிகளும், பண்புகளும் நோக்கினால், இல்லத்-
தரசிக்கும் இதே தகுதிகளும், பண்புகளும் தேவையே எனத் தோன்றும்!

வீட்டை ஆளுபவர் எவர் என அறியக் கேட்பார், 'மதுரையா சிதம்பரமா?'
வீட்டை ஆளுபவர் எவராயினும், இத் தகுதிகள், பண்புகள் தேவைதான்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 105

மேலும் நற்பண்புகள்...

வள்ளுவர், ஆள்பவனுக்கு வேண்டிய குணங்களை மேலும்
சொல்லுகின்றார், இரு குறட்பாக்களை அழகாக அமைத்து.

செவிக்கு ஊறு தரும் கடும் சொற்களைக் கேட்க நேரினும்,
தவித்துப் போகாது பொறுப்பவனிடம், மக்கள் தங்குவார்.

அத்தகைய பண்பு கொண்டவனின் அரசனின் ஆட்சியிலே,
எத்தகைய குறைகளையும் மக்கள் எடுத்துரைக்க இயலும்.

'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு', என்பதே அந்தக் குறள்.

நல்ல வாழ்வுக்கு வேண்டியவை வழங்கி, கருணை காட்டி,
நல்ல நடுநிலை கடைப்பிடித்து, மக்களைப் பேணினால்,

மக்கள் அந்த நல்லாட்சியில் உயர்வு பெறுவார்; மேலும்,
மக்களைக் காக்கும் அரசுக்குப் புகழொளி சேர்ந்துவிடும்!

'கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி', என்பது குறள்.

நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர் ஆயினும், அல்லது
வீட்டை ஆட்சி செய்பவராயினும், இவை அறிவது நலமே!

:grouphug:.....:angel:
 

கல்வி ....

'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக', என்ற குறள்

முன்பே போற்றிவிட்டோம்! இனி, மேலும் சில காண்போம் .....:happy:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 106

கண்ணான கல்வி

சிறந்ததாக நாம் போற்றுவதை கண் எனக் கூறுவோம்;
சிறந்ததான கல்வியை வள்ளுவர் கண் எனக் கூறுகிறார்.

எண் என்பதையும், எழுத்து என்பதையும் முகத்தின் இரு
கண்கள் எனக் கொள்ளவேண்டும், உயிர் வாழும் மக்கள்.

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு', என்பது குறட்பா.

புறக் கண்களை இழந்தவர் ஆயினும், கல்வி கற்றவர்கள்,
அகக் கண் உடையவரே! கல்லாதவர் கண்கள் புண்களே!

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்', என்று உரைக்கிறார்.

பொன்னான நேரத்தை அனைவரும் கற்பதில் செலவிட்டு,
கண்ணான கல்வி பெற்று, இவ்வுலகிலே சிறந்திடுவோம்!

:cheer2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 107

எதுவரை கல்வி?

ஊற்று நீர், மணலைத் தோண்டத் தோண்டப் பெருகும்;
ஊற்றுபோல் பெருகும், கற்கக் கற்க மனிதனின் அறிவு!

'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு', என்பது அவர் வாக்கு.

கற்பதற்குக் கால வரையறை கிடையாது; வாழும் வரை
கற்பதை நிறுத்தாது தொடரவேண்டும். இதன் கேள்வி,

கற்றோர் எல்லா நாடுகளிலும், ஊர்களிலும் சிறப்பு பல
பெற்றோர், என்றறிந்தும், சாகும்வரை கல்லாதது ஏன்?

'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு', எனக் கேட்கிறார்.

பெருமை தருவதுடன், ஏழேழு தலைமுறைக்குமே,
அருமையான பாதுகாப்பாக அமையும், கற்ற கல்வி!

'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து', என்பது குறள்.

வரும் தலைமுறைகள் பாதுகாக்க, சிறந்த கல்வி
பெறும் வழியை, தொடருவோம் உயிர் உள்ளவரை!

:decision: . . . :high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 108

அழிவற்ற செல்வம்!

கற்றதனால் பெருமையும் சிறப்பும் நம்மை வந்தடையும்;
உற்ற நேரமென ஒதுக்காது, என்றும் விடாது கற்றல் நலம்.

கற்ற கல்வியால் இன்புற்று, அதைப் பரப்பி, அதனால் உலகு
பெற்ற இன்பம் கண்டு, அறிஞர் மேன்மேலும் கற்றிருப்பார்!

'தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்', என்கிறார்.

செல்வம் என்பதே செல்லும் தன்மை உடையது; வேறிடம்
செல்லும் ஓரிடத்திலிருந்து, என்பது அதன் தன்மையாகும்.

அழியாத செல்வம் என ஏதேனும் உள்ளதா? ஆம்! உள்ளது,
அழியாத கல்விச் செல்வம்; பகிர்ந்தால் வளருமே கல்வி!

அழியாத நல்ல செல்வம் ஒருவருக்குக் கல்வியேயாகும்;
அழியும் உலகில், அதைவிடச் சிறந்ததே வேறு இல்லை.

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை', என்பது குறட்பா.

உலகில் இன்பம் பரப்பி, அழியாதிருக்கும் நற்கல்வியை,
உலகில் வாழும் நாள் வரை, நாம் கற்றுச் சிறப்புறுவோம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 109

கல்லாதவர்...

கல்லாதோர் கற்றோர் முன்னிலையில் மௌனம் காத்தால்,
கல்லாதோர் நல்லோர் என்றே கருதப்படுவார்கள், என்கிறார்.

'கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்'. இது குறட்பா.

வாய் திறந்து தம் அறியாமையைப் பறை சாற்றாது, தாம்
வாய் மூடி மௌனம் காத்தால், கல்லாதவரும் நல்லவரே!

கற்காத ஒருவர் அறிவில் மிகச் சிறந்தாலும்,என்றும் அவரைக்
கற்றோர் என்று கற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார். இதனை,

'கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்', என்கின்றார்.

அறிவாளிபோலப் பாசாங்கு செய்து திரிந்தாலும்கூட ஒருவர்,
அறிவாளியிடம் உரையாடும்போது, அவர் வேடம் கலையும்.

'கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்', இது குறட்பா.

கல்வி கல்லாது, கற்றவரிடம் உரையாடவே இயலாது! எனவே,
கல்வி கற்று நல்லறிவை வளர்த்து, வாழ்வாங்கு வாழுவோம்!

:angel: . . .
:happy:
 
மீண்டு வந்தது என் கணினி!

நீங்குதல் நலம் என வள்ளுவத்தில் கண்டாலும்,
நீங்குதல் கடினமே, கணினியைப் பொறுத்தவரை!

ஏங்கித்தான் போனது மனது, கணினி வரவிற்கு;
ஏங்கிய மனம் மகிழ, கணினி கிடைத்தது, இன்று!

இனிதே போற்றிச் செல்லுவோம், வள்ளுவருடன்;
இனி வரும் நாட்களைத் தொடருவோம், நட்புடன்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் . :pray2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 110

கல்லாதவருக்கு ஒப்பானவை...

கல்வி கற்றவரின் சிறப்பு உரைத்த வள்ளுவர், குறளில்
கல்வி கற்காதவரின் கீழ் நிலை குறித்தும் கூறுகின்றார்.

பயனே இல்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர் ஆவார்,
பயனும், சிறப்பும் தரும் கல்வி கல்லாதவர்கள். இதை,

'உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்', என்ற குறளாக்கி,

உயிர் உள்ளவர் என்ற நிலை மட்டும்தான் பெறுவர்;
உயர் நிலை உலகில் எட்டார் கல்லார், என்கின்றார்.

தோற்றத்தில் அழகுண்டு; ஏற்றமான நல்லறிவு இல்லை;
போற்ற முடியாத அவர்கள், மண் பொம்மையே, உண்மை!

'நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று', என்கின்றார்.

அறிவு நூல்களை நன்கு கற்றோர், மற்றோர் ஆகியோரின்
பெரிய வேறுபாடு, மனிதர்கள், விலங்குகளிடை உள்ளதே!

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்', என்பது குறட்பா.

களர் நிலம்போல, மண் பொம்மைபோல, விலங்குபோல
உளர், என ஒப்புமை பெறாது, கல்வியால் சிறப்புறுவோம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 111

கேள்வி ஞானம்...

அறிவை வளர்ப்பது படிப்பு என்பது மட்டுமல்லாது, கேட்பதும்
அறிவை வளர்க்கும் ஒரு நல்ல வழியே ஆகும். இதைத்தான்,

கேள்விச் செல்வம் என்று பெரியோர் வரையறுத்தார்; இந்தக்
கேள்விச் செல்வமே எல்லாவற்றிலும் பெரியது என்கின்றார்.

'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை', என்பது அந்தக் குறட்பா.

செவி வழி வரும் நல்ல விஷயங்களை, உணவுக்கு ஒப்பிட்டு,
செவி உணவு பெறாதபோது, உண்பதற்கு உணவு என்கின்றார்.

'செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்'. இது குறட்பா.

ஆன்றோர் குறைந்த உணவு உண்டு, நிறைந்த அறிவு பெற்றவர்;
ஆன்றோருக்கு ஒப்பானவர்கள், செவி வழி அறிவு பெற்றவர்கள்.

'செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து', என்கிறார் வள்ளுவர்.

படிப்புடன் கல்வியறிவை நிறுத்தாது, நல்லவையும் கேட்டு,
துடிப்புடன் நல்லறிவை மேம்படச் செய்து, உயர்ந்திடுவோம்!

:high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 112

ஊன்றுகோல்...

நடக்க முடியாது, நடை தளர்ந்தோருக்கு, உதவ வந்து,
நடக்க முடியச் செய்வது, ஊன்றுகோலின் துணையே.

கல்வி கற்க வாய்ப்பு இல்லாதவர், கேட்டுக் கற்கலாம்.
கேள்வி அறிவு, ஊன்றுகோல் போன்று உதவ இயலும்.

'கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை', என்கிறார்.

வழுக்கும் சேற்று நிலத்தில் போக, ஊன்றுகோல் தேவை.
ஒழுக்கம் நிறைந்தவர் அறிவுரை, அதுபோன்றே உதவும்.

'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்'. இது குறள்.

இவ்வாறு உதவும் கேள்வி அறிவைக்கூடப் பெறாதோர்,
எவ்வாறு சிறப்புறுவார்? அவர்களை மாக்கள் என்கிறார்!

செவிச் சுவை அறியாமல், வாய்ச் சுவைக்கு உண்போர்,
அவிந்து கேட்டாலும், வாழ்ந்தாலும் என்ன பயனுண்டு?

'செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்', என்று கேட்கின்றார்.

:pop2: . . :pound:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 113

எது அறிவுடைமை?

அறிவுடைமை பற்றி எளிதாய் அறிந்துகொள்ள, இரண்டு
அரிய குறட்பாக்களை உரைக்கின்றார், நம் திருவள்ளுவர்.

சற்றும் யோசிக்காது மனம் போன வழி செல்வது, எப்போதும்
சற்றும் அறிவுக்கு வழி வகுக்காது! அது தீயவழியே காட்டும்!

எந்த வழி நல்லது என ஆராய்ந்து, அறிந்துகொண்ட பின்னர்,
அந்த வழியில் செல்வதே, அறிவுடைமை ஆகும் என்கிறார்.

'சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு', என்பது குறள்.

தம் காதில் விழும் சொற்களையெல்லாம் நம்பிவிடுவது,
தம் மன இன்னலுக்கே வழி வகுக்கும் என அறிய வேண்டும்!

எந்தச் சொற்களை எவர் சொல்லக் கேட்பினும், ஆராய்ந்து,
அந்தச் சொற்களின் உண்மையை உணர்வதே, அறிவாகும்!

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு', என்று கூறுகின்றார்!

மனம் போகும் தீய வழிகளையெல்லாம் தவிர்ப்போம்! நம்
மனம் தெளிய, உண்மைகளெல்லாம் அறிய முனைவோம்!

:decision: . . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 114

அறிவுடமை ...

சொல்லுவதை விளங்குமாறு சொல்லுதல் அரிது; பிறர்
சொல்வது கடினமான பொருளாயினும் அறிதல், அரிது!

அறிவுடையோர் எளிய சொற்களால் விளங்கச் செய்வார்!
அறிவுத் திறத்தால் கடினமானவற்றையும் அறிந்திடுவார்!

'எண்பொருள வாகச் செலச்சொல்லி தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு', என்று விளக்குகின்றார்.

நன்மை வந்தபோது மகிழ்ந்து கூத்தாடுவதும், தமக்குத்
தீமை வந்தபோது மனம் உடைவதும், உலக வழக்கம்!

அறிவு உடையவர் இவ்வாறு மனம் மாறுபடாது, தம்முடைய
அறிவுத் திறத்தால், இன்ப துன்பங்களை ஒருபோல ஏற்பார்!

அந்த அறிவுடைய உயர்ந்த பெருமக்களின் நட்பைப் பெற்று,
அந்த மன நிலையைப் பெறுவது அறிவு ஆகும் என்கின்றார்!

'உலகத் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலு மில்ல தறிவு', எனக் கூறுகிறார்!

அறிவு நிரம்பப் பெற முயன்று, உயர்ந்திடுவோம்! மேலும்
அறிவு நிரம்பப் பெற்றோரின் நட்பாலும் சிறந்திடுவோம்!

:thumb: .
:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 115

அஞ்சுவதும், நிறைவதும்

அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது
அஞ்சா நெஞ்சரெனப் பெயர் தருமென எண்ண வேண்டாம்.

புலி ஒன்று வந்தால், பெரிய வீரன்போல எதிரில் போனால்,
புலி என்ன நட்புப் பாராட்டி, அன்பு காட்டவா விழையும்?

'அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்', இது அறிவுரை!

அறிவு இல்லாதவரிடம், வேறு எல்லாமே இருந்தாலும்,
பெரிய பெருமை வந்து அவர்களுக்குச் சேராது! ஆனால்

அறிவு செறிந்த பெருமக்களிடம் எல்லாமே வந்து சேரும்;
அறிவு அவர்களுக்கு நிறைந்த வாழ்வையே தந்துவிடும்.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா?
கற்றோரை எல்லோரும் மதித்து வணங்குவார் அல்லவா?

'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்', என்பது அந்தக் குறள்.

அறிவைப் பெற்று, அதனால் அஞ்சுவதை அஞ்சுவோம்;
அறிவினால் எல்லாம் உடையவராகவும் ஆவோம்!

:fear: . . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 116

பெருமை தருவது ...

அருமையான செல்வாக்குப் பெற்று, அதனால்
பெருமை பெறுவதை எல்லோருமே விழைவார்!

உபாயத்தை தன் குறட்பாவில் அழகாக வைத்து,
உபதேசிக்கிறார் திருவள்ளுவர், தம் திருக்குறளில்!

தன்னைப் பற்றிய இறுமாப்பு, தீய குணமான கோபம்
தன் மதிப்பைக் குறைக்கும் இழிந்த செயல்கள் என

இந்த மூன்றும் விடுத்து வாழ்பவர்களுக்கு, என்றும்
எந்த குறையும் வராது; அவர் செல்வாக்கு பெருகும்!

'செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து', என்பது குறட்பா.

பழி நாணுவது என்பது நல்லோரின் வழக்கம்.
பழி வராது காப்பது எப்படி என உரைக்கிறார்!

தினை அளவு குற்றம் வந்தாலும் கூட அதனைப்
பனை அளவு எண்ணினால், அதைத் தடுக்கலாம்!

'தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்', என்று கூறுகின்றது வள்ளுவம்!

சிறந்த செல்வாக்குப் பெற்று, பழியை அஞ்சி, இவ்வுலகில்
சிறந்த வாழ்வுக்கு வழி வகுத்து, எந்நாளும் சிறப்போம்!

:first: . . . :peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 117

பயனிலாச் செல்வம் ...

செல்வம் சேர்ப்பது பயனுள்ள வழிகளில் செலவிடத்தான்;
செல்வம் முழுதும் தானே ஆண்டால், யாருக்கு என்ன பயன்?

அற்பரிடம் கோடிகளில் பொருள் சேர்ந்து விட்டால், எந்த
நற்பணிகளுக்கும் உதவாது, வீணாகவே அது போய்விடும்!

'செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்', என்பது குறட்பா.

பெரும் செல்வம் சேர்ப்பதிலேயே பற்றுக் கொண்டு, எந்த
அரும் பணிகளுக்கும் செலவிடாது பாதுகாத்தால், அதுதான்

உலகின் குற்றங்களிலேயே மிகப் பெரும் குற்றம் என்கின்றார்,
உலகப் பொதுமறையை நமக்கு ஈந்த வள்ளுவப் பெருந்தகை!

'பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று', என்பது எச்சரிக்கை!

தனக்கு மிஞ்சினால் தான தருமம் அல்லவா? இதை அறிந்து,
தனக்கு மிஞ்சியதை நல்வழியில் செலவிட முயலுவோம்

:grouphug:
 
கலிகாலம்!

கேடிகளிடம் கோடிகள் சேர்கின்ற கலிகாலம்! கட்சிக்
கொடிகட்டத் துணியோ, கொள்ளை அளவுகளில்!

அடித்த பணமும், பகல் கொள்ளையால் அல்லவா?
உடுத்தத் துணி இல்லாதவன், கொடிகள் கட்டுவான்!

வள்ளுவரைப் பற்றி வாய் கிழியும், மேடைகளில்! தம்
கொள்ளைப் பணமும் முடங்கும், 'ஸ்விஸ்' வங்கியில்!

அதர்மம் தலைதூக்கும்போது, பகவான் வருவானா?
அதர்மம் அழிந்து, தர்மம் மீண்டும் வந்து வெல்லுமா?

உலகம் உய்ய வேண்டும், :pray:
ராஜி ராம்
 
Back
Top