நிஷாவின் விஷமம்….. II
இணைந்தவாறு இரு ஸ்டூல்களப் படுக்க வைத்து – மேலே
வீணை “ஸ்டாண்டை” ஏற்றி வீணைகளை அடுக்கியாச்சு!
குட்டி சுவாமி அலமாரியை “டீபாய்” மேல் ஏற்றியாச்சு!
பெட்டிகளில் புடவைகளை அடைத்துக் கட்டிலில் போட்டாச்சு.
எங்களைத் தவிர வீட்டில் அனைத்தும் கட்டிலில் கிடக்கிறது!
எங்கள் “வாஷிங் மெஷின்”, “ஏர் கூலர்” அதில் அடங்குகிறது!
“டிபன் காரியர்” கிண்ணங்களை பலகை மேல் கவிழ்த்து,
“டிபன்” மாவு, பால், தயிர் காக்கும் “பிரிஜ்ஜு”க்கு
“ஸ்டாண்ட்” போல் செய்து வைக்க, அதன்மேல் ‘அது’
“ஸ்டண்ட் மாஸ்டர்” போல “பாலன்ஸ்” செய்கிறது!
அஞ்சு இஞ்சு தண்ணீர் வீடு முழுதும் வியாபித்திருக்க,
அஞ்சியபடி நடந்தோம் கீழே வழுக்கி விழாதிருக்க!
Tub – பினுள் நின்று சமைக்கவிட்டால் கால்கள் குளிரும்!
உடம்பினுள் நடுக்கம் மின்னல் போல ஏறி வரும்!
Tub – பிலே நின்றவாறு நகர்ந்தும் செல்லப் பழகிவிட்டால்,
செவ்வனே குச்சிப்புடி நடனம் கற்றுத் தேற ஏதுவாகும்!
‘ஆத்துக்கு வாங்கோ’ என்று சகஜமாய் மாமிகள் அழைப்பர்! – நிஜமான
ஆத்துக்குள் குடியிருப்பதுபோல இப்போ இல்லம் மாறியது!
காலைத் தேய்த்து தேய்த்து இதேபோல நடந்தால்.
காலை வீசி நடக்க இனி மறந்தே போய்விடுமோ?
இரண்டுநாள் இதுபோல உழன்றபின், மோட்டார் வைத்து
திரண்ட நீரை வெளியேற்றி, எட்டு நூறு கொடுத்த பின்,
இரண்டே மணிகளில் வீட்டில் மீண்டும் அஞ்சு இஞ்சு ஆறு!
இருண்டே போனது மனம்; இம்முறை வந்த நீரில் சேறு!
ஒருமாதம் இதுபோலக் குடித்தனம் செய்துவிட்டால்
அருவருப்பு என்ற சொல் நம் அகராதியில் காணாது போகும்!
மூன்றாம் நாள் மின்சாரம் தடைப்படுத்தப்பட,
அன்றிரவு பெரு மழையால் நீரும் ஏறி வர,
நள்ளிரவில் தட்டுத்தடுமாறி “காட்ரேஜி”ன் அடித் தட்டுக்களைப்
புள்ளி போல் வந்த “டார்ச்” ஒளியில் காலி செய்தோம்!
கிண்ணங்கள் உருட்டுவதுபோல் சப்தம் எழுந்து வர,
எண்ணங்கள் பல தோன்றி அச்சம் மிகுந்து வர,
என்னவென்று மறுநாள் காலைதான் புரிந்தது, “ஷோ கேசில்”
என்னவரின் பரிசுக் கோப்பைகள் மழை நீரில் உருண்டது!
தேங்காய்கள் உள்ள மோட்டார் ரூம் கதவு விழுந்துவிட,
தேங்காய்கள் தோட்டமெங்கும் நீரில் மிதந்து செல்ல,
பூக்கள் செடிகளில் பூப்பதையே மறந்துவிட,
பூக்கள் போல “பிளைவுட்” கதவுகள்தான் விரிந்தன!
“ஜாலியாக ‘ஆத்துக்குள்’ இருந்து உடம்பை வருத்தாதே!
காலியாக இருக்கும் மாடிக்கு உடனே மாறிக்கொள்” – என
அன்புடன் தங்கை எனக்குக் கட்டளை இட – மீண்டும் புதிய
தெம்புடன் “டெம்பரரி” ஜாகை மாடிக்கு மாற்றினோம்!
அடுப்பும் அத்தியாவசியப் பொருட்களும் கடத்தியதில்
இடுப்பும் கேட்டது “என்ன சேதி?” என்று அன்று!
தொலைபேசி இல்லாவிடில் தொல்லைதான் – எனவே
தொலைபேசி இணையொன்றும் மாடியில் வைத்தோம்!
புயல் கரையைக் கடந்த பின்னும் மழை தொடர்கிறது – அடுத்த
புயல் சின்னம் உருவாகுமெனச் செய்தியும் பரவுகிறது!
ஜோடியாக வருவதற்குப் புயலுக்கும் ஆசை வருமோ?
கூடிக் குலாவிட நிஷாவின் தங்கை திரிஷா வருமோ?
வாங்கி வைத்த எல்லா டிக்கெட்களும் கான்சல் செய்தாச்சு!
ஏங்கி எதிர்பார்த்த சுற்றுலா இல்லாமல் பொய்யாச்சு!
எப்போது ஆண்டவன் கட்டளை இடுகிறானோ – பயணங்கள்
சென்று வரும் ஆசைகள் அப்போதுதான் நிறைவேறும்!
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது வேதாந்தம் – அதை
நடப்பதிலெல்லாம் காணும் பக்குவமே யதார்த்தம்!
29- 11 – 2008