• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

விஞ்ஞானத்தை மதியுங்கள்!

நேற்று ஒரு மருத்துவர் கூறிய உண்மையான
கூற்று ஒன்றைக் கேட்டேன், மனம் வருந்தி!

உலகை வாட்டும் புதிய அந்த வைரஸ் கிருமி,
உடலை வாட்டும் முகக்கவசம் இல்லையெனில்!

கையுறை மட்டும் அணிந்து பயனில்லை!
மெய்யைக் காப்பது முகக்கவசம் மட்டுமே!

எத்தனையோ நாட்கள் விஞ்ஞானிகள் உரைத்தது!
அத்தனையும் மறந்ததால், வந்தது பெரிய சோகம்!

அரை நூற்றாண்டுக்கு மேல், வானம்பாடியாய்,
குறை ஏதுமின்றிப் பாடி மகிழ்வித்த அரியவன்!

அவன் வயதைக் கருதாது, அழைப்பு விடுத்து,
அவன் இன்னுயிரை மாய்க்கச் செய்தனர், ஏன்?

ஐம்பது ஆண்டுகள் உலகை மகிழ்வித்தவன்,
ஐம்பது நாட்கள் உபாதைகள் அனுபவித்தான்!

விஞ்ஞானத்தை மதித்து நடந்திருந்தால்,
இஞ்ஞாலம் அவனை இழந்து இராது அன்றோ!

விஞ்ஞானத்தை மதிப்போம்!
வளமுடன் வாழ்வோம்!


🙏 🙏 🙏
 
A week away to celebrate this thread of completing 10 years. Great. My reply is 2kth
அவன் வயதைக் கருதாது, அழைப்பு விடுத்து,
அவன் இன்னுயிரை
But if you see the video of Mouna ragam Murali programme i think he has volunteered to visit the orchestra and I do not know about the other programme happened somewhere else.
 
A week away to celebrate this thread of completing 10 years. Great. My reply is 2kth

But if you see the video of Mouna ragam Murali programme i think he has volunteered to visit the orchestra and I do not know about the other programme happened somewhere else.
hi

i saw the video.....but initially many programmes with laksman sruthi orchestra...
 
விதியின் சதி!

சங்கீத உலகின் ஒரு தாரகை அவள்;
சங்கீதத்தை சாமானியரும் அனுபவிக்க வைத்தவள்!

விஷமக்காரக் கண்ணனை, மாடு மேய்ப்பவனை,
விரிவாகக் கண் முன் கொண்டு நிறுத்தியவள்!

யார் கண் பட்டதோ இன்று வாடுகிறாள்,
சீராட்டி வளர்த்த செல்ல மகளை இழந்து!

தாங்கொணாத் துயரிலிருந்து அவள் மீள,
நாம் வேண்டுவோம் இறைவனை, சக்தி தர!

ஓம் சாந்தி! 🙏
 

இந்த இணையதளத்தில் .......

இந்த இணையதளத்தில் நான் இணைந்து
இனிதே ஓடிவிட்டன ஈரைந்து ஆண்டுகள்!

இணைந்த நாளோ சிறப்பானது... 10 -10 -10;
இணைத்தவர் என் அன்பான தமக்கையார்!

என் தமிழ் எழுத்துக்களைப் படித்து, ரசித்து,
என் திறமையை வளர்த்தனர் பல நண்பர்கள்!

திருவாளர்கள் ப்ரஹ்மண்யன், குஞ்சுப்பு, நரா,
பேராசிரியர் எம். எஸ். கே, பண்வளன் ஆகிய

நண்பர்கள் முதன்மையானவர்! இன்னும் பலர்
நட்பு மிகப் பாராட்டி வருகின்றார் இன்று வரை!

திருமதி ரேணுகா, நாராயணி, ப்ரசாத், கணேஷ்,
டி. வி. கே, டி. பி. எஸ், ரவி, வாக்மி, நய்னாமார்பஸ்,

நன்னிலம் பாலசுப்ரமண்யம், ஆனந்த் மனோஹர்;
நல்ல நண்பர் பட்டியல் மிகவும் நீளமானது! நிஜம்!

நேரில் சந்திக்க நான் அழைத்ததும், மறுக்காமல்
நேரில் சந்தித்து என்னை கௌரவித்தனர் பலர்!

ஆனந்த் மனேஹரின் துணைவி மீரா, எங்களை
ஆர்வத்துடன் அழைத்து நல்ல விருந்து அளித்தார்!

இனிதே எண்ணிடப் பல நல்ல நினைவுகள் உண்டு;
இனிய இந்தச் சூழலிலே, தொடரட்டும் நல்ல நட்பு!

வாழ்க வளமுடன்; நலமுடன்!

நட்புடன்,

ராஜி ராம் 🙏
 
hi

வாழ்க்கை என்கிற சக்கிரம் .....நிற்காமல் சுற்ற வேண்டும்.....படகு தண்ணீரில் செல்ல வேண்டும்....நின்று விட

கூடாது......உங்கள் சேவை.....எங்களுக்கு தேவை....
 
காணொளி அரட்டை!

சந்திக்கும் நாளை மனம் எதிர் நோக்கும்.

சந்திக்கும் முன் நல்லுடை உடுத்த வைக்கும்!

சந்திக்கும் வேளை மனம் குதூகலிக்கும்.

சந்தித்த பின் மனம் நிறைவாகும்! 😇
 
நிம்மதியான நவராத்திரி.

ஊரடங்கு ஓய்ந்தாலும், கொரோனா ஓயவில்லை;
ஊர் சுற்ற விழைந்தாலும், பயமும் விடவில்லை!

அவரவர் வீட்டில் தினமும் பூஜை நடக்கிறது;
அவரவர் செய்த சுண்டல் மாலையில் கிடைக்கிறது!

கைப்பேசி மூலமாகத் தாம்பூலம் வருகிறது;
கைச் செலவு இல்லாமல் நட்பும் தொடர்கிறது!

மொத்தமாகத் தேங்காய் வாங்கி வைத்து,
எத்தனை கெடுமோ என மனக் கிலேசம் கிடையாது!

அலமாரியை ரவிக்கைத் துணிகள் நிறைக்காது;
அலுங்காமல் அடுத்தவருக்குச் சுற்றுலாச் செல்லாது!

வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாது;
ஆட்டோ, டாக்சி செலவுகள் கிடையாது!

காணொளிக் காட்சியைக் கைப்பேசியில் இட்டால்,
கானம் செல்கிறது நண்பரின் வீட்டுக்கு!

நவராத்திரி நகர்கிறது அம்பாளின் அருளோடு;
நல்லாசி கிடைக்கிறது எல்லோருக்கும் அன்போடு!

வாழ்க வளமுடன், நலமுடன்!
ராஜி ராம்
25 - 10 - 2020
 
hi

HAPPY NAVARATHRI....
இந்த ஆண்டு கொரோன வோட பழகி நவராத்ரி முடிந்து விட்டது .....தீபாவளியும் செலவு இல்லாமல் இந்த

காரோண காலத்தில் நன்றாக முடிந்து விடும்....
..வாழ்க வளமுடன், நலமுடன்!
 
hi
இனிமேல் வாழ்க்கை என்பது.....skype /zoom .....டிஜிட்டல் வாழ்க்கை முறை கற்று கொள்ள வேண்டும்...

இது corona கற்று தந்த பாடம்...
 
ஐயா! தீபாவளி செலவு இல்லையா? யார் சொன்னது? அவரவர் ஆன்லைனில் வாங்கித் தள்ளுகிறார்!
 
ஐயா! தீபாவளி செலவு இல்லையா? யார் சொன்னது? அவரவர் ஆன்லைனில் வாங்கித் தள்ளுகிறார்!
hi
தேவை இல்லாமல் பட்டாசு செலவு இருக்காது என்று நினைக்கறேன்...
 
மெய்யும், பொய்யும்!

மெய்யான வாழ்வு முறை மாறுகிறது;
பொய்யை மெய்யென நம்ப வைக்கிறது!

பாரில் பரவும் கொடும் கிருமியால்,
நேரில் சந்திப்பது அரிதாகிவிட்டது!

அலைபேசியையும், கணினியையும் நம்பி,
தொலைதூர நட்பும் தொடருகிறது!

சிங்காரச் சென்னை I I T யிலே நடந்தது
பாங்காக மெய்நிகர் பட்டமளிப்பு விழா!

அவரவர் இடத்தில் காணொளிப் பதிவு செய்து,
அவரவர் நேரில் வந்தது போல் தெரிந்தது!

பித்தலாட்டம் என்ற ஒன்று உண்டு - அது
பித்தளையைத் தங்கமாகத் தெரியச் செய்வது!

நவீன விஞ்ஞான வளர்ச்சியால், உலகில்
நன்கு வளர்கின்றன பித்தலாட்டங்கள் பல!

பொய்யை மெய்யென நம்பி வாழ்வோம்!
மெய்யான வாழ்வும் திரும்பும் என நம்புவோம்!

வாழ்க வளமுடன், நலமுடன்! 🙏
 
இசை விழா - 2020...

இசை விழாவின் தொடக்கத்தை, எப்போதுமே
இசைப் பிரியர்கள் எதிர்நோக்கி இருப்பார்கள்.

எந்த சபையில் யார் கேட்டரிங் செய்கின்றார்,
எந்த சபையில் யார் விருது பெறுகின்றார்,

என்று நம் மனம் விரும்பும் வித்வான் பாடுவார்,
என்று இரு மாலைக் கச்சேரிகளுமே உன்னதம்,

சபா ஒன்றில் சீசன் டிக்கட் வாங்கலாமா, அல்லது
சபாக்களில் பாடுவோரைப் பார்த்து வாங்கலாமா,

இன்ன பிற ஆராய்ச்சிகள் ஜூலை மாதம் துவங்கும்.
இன்னும் ஒரு படி மேலே வெளிநாடு வாழ் ரசிகர்கள்!

ஒரு வீட்டை ஒரு மாதம் வாடகை எடுத்தால் - அது
ஒரு விடுதியின் அறை வாடகையைவிட லாபம்!

விமான டிக்கட் வேட்டையுடன், இந்த வேட்டையும்,
விவரமாகத் தொடங்கும், பல மாதங்கள் முன்னரே!

பெண்களுக்கு இன்னும் ஒரு வேலை அதிகம் - தம்
கண்கவர் சேலைகளை நண்பிகளிடம் காட்டணுமே!

எல்லா ஆசைகளையும் மூட்டை கட்ட வைத்தது ஒரு
பொல்லாக் கிருமி; அது உலகையே வலம் வருகிறது!

வீட்டிலிருந்து வெளியே போகப் பயமும் வந்துவிட்டது;
நாட்டில் கூட்டம் கூட முடியாமல் தடை வந்துவிட்டது!

ஓர் அறையில் அலங்காரம் முடித்து, அடுத்திருக்கும்
ஓர் அறையில் கச்சேரி செய்யும் காலம் வந்துவிட்டது!

வீட்டிலிருந்தே இசை விருந்தளியுங்கள் வித்வான்களே!
வீட்டிலிருந்தே ரசித்து மகிழ்வார்கள் உம் ரசிகர்களே!

வாழ்க வளமுடன்; நலமுடன்!
 

கடைத் தேங்காயும், வழிப் பிள்ளையாரும்!

திரைப்படங்களில் மக்களை மகிழ்விக்க நடித்து,
நிறைப்பார்கள் தம் கஜானாவை நோட்டுக்களால்!

சக நடிகர் உடல் உபாதையில் வருந்தும் சமயம்,
மிக அக்கறையாய் உதவி செய்வதுபோல் - சிலர்,

கொடுப்பார்கள் அவர்களின் செலவிற்குப் பணம்;
எடுப்பார்கள் அதைத் தன் விசிறிகள் சங்கத்தில்!

இதைத்தான் பெரியோர்கள் சொன்னாரோ அன்று,
கடைத் தேங்காயும், வழிப் பிள்ளையாரும் என்று!

வாழ்க வளமுடன்; நலமுடன்.


 
அலைபேசி - அன்றும் இன்றும்!

பள்ளிக்குள் அலைபேசிக்கு அனுமதியில்லை அன்று;
பள்ளியே அலைபேசிக்குள் அடங்கிவிட்டது இன்று!

கச்சேரிகளில் அலைபேசினால் முறைப்பார் அன்று;
கச்சேரிகள் அனைத்தும் அலைபேசிக்குள் இன்று!

சினிமா அரங்குகளில் அலைபேசி அடிக்காது அன்று;
சினிமாக்களே ஓ.டி.டி யாக அலைபேசிக்குள் இன்று!

கடையிலிருந்து அலைபேசியில் லிஸ்ட் கேட்பர் அன்று;
கடைக்கு அலைபேசியில் லிஸ்ட் அனுப்புவர் இன்று!

குழந்தையின் கைகளில் அலைபேசி இருக்காது அன்று;
குழந்தை உணவு உண்ண அலைபேசி தேவை இன்று!

அலைபேசி இல்லாமலும் வாழ்க்கை நடக்கும் அன்று;
அலைபேசி இல்லையேல் வாழ்க்கை இல்லை இன்று!

வாழ்க வளமுடன்; நலமுடன்; அலைபேசியுடன்!
 
hi

எல்லாம் காலத்தின் கட்டாயம்......ஸ்மார்ட் போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை....சிலர் வீட்டில் அலைபேசி

வாங்க இயலாய்மையால் தற்கொலை செய்யுது கொண்டார்கள்....
 
குருவும், சனியும் இணைந்த நிமிடம் ...

பலசாலி கிரஹங்கள் குருவும், சனியும்;
பலன்கள் பல தரும் மனித குலத்திற்கு!

சூரியனை குரு சுற்ற பன்னிரு ஆண்டு;
சூரியனை சனி சுற்ற முப்பது ஆண்டு!

இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை
இரண்டும் அருகருகே தெரிந்தாலும்,

நம் பூமிக்கு அருகே வந்து இணைய,
எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிடுமாம்!

நாம் வாழும் காலத்தில் இது நிகழ்வது,
நாம் பெற்ற பேறுதான் என்றிடலாம்!

'கிருஸ்மஸ் நட்சத்திரம்', என்ற அழகிய
திரு நாமம் சொல்லி இதை அழைப்பர்!

நாசா வெளியிட்ட காணொளி ஒன்று;
நண்பரை அணைப்பதுபோலவே வந்த

சனி, குருவை ஒரு நிமிடத்திற்கு மேல்
இனிதே அணைத்து விலகியது கண்டு,

சிறு படமாய் அலைபேசியில் பதித்து,
சில முறை கண்டு ரசித்தேன் அன்று!

பகிர்ந்தால் மகிழ்ச்சி பெருகும் எனப்
பகர்வதால், இங்கு நான் பகிர்கிறேன்!


வாழ்க வளமுடன்; நலமுடன்!


 
Last edited:
மனசாட்சி மெல்ல மடிகிறதே!

காரிருளில், சில இரவில், மனசாட்சியைப்
பார்க்கிறேன் அதற்கு உள்ளதா உயிர் என;

அதுதான் சிறிது சிறிதாக, மரணத்தை நோக்கி
அனுதினம் செல்கிறதே! என் செய்வேன் நான்?

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

அஞ்சு நட்சத்திர உணவகத்தில் உண்ண,
அஞ்சாமல் செலவு செய்து, அது கதவருகில்

ஊழியம் செய்யும் காவலனின் ஒரு மாத
ஊதியமென்ற நினைப்பை உதறுகையில்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

காய்கறிக்காரனின் சின்ன மகன், கைகளால்
காய்களைப் புன்னகையுடன் எடை போட,

துள்ளி மகிழ்ந்து, திரிந்து விளையாடி, அவன்
பள்ளி செல்லவில்லையே என எண்ணாதபோது,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

உயர் ரக ஆடைகளை அணிந்து நான் செல்ல,
'உயிரினும் மேலான தனது மானம் காத்திட

இயலுமா?', எனக் கிழிந்த ஆடைகளால் ஒருத்தி
முயலும் காட்சியைக் காணாது செல்லுகையில்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

பணக் கற்றைகளை வீசி, பொம்மைகள் வாங்கி,
மன நிறைவுடன் நான் வர, அரைகுறை ஆடையில்,

பசியைப் பறை சாற்றும் கண்களுடன், சிறுவர்
பசி போக்க விற்கும் பொம்மையை வாங்கிடினும்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

உடல் நலம் குன்றிய பணிப்பெண், சிறு மகளை
உடல் தேறும் வரை பணிக்கு அனுப்ப, பள்ளியைப்

புறக்கணித்து வந்த அவள் பாத்திரம் தேய்ப்பது,
இரு நாட்கள்தானே என்று எண்ணிடும் சமயம்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

ஏதோ ஒரு பெண் மானபாங்கம் செய்யப்பட்டதும்,
ஏதோ ஒரு குழந்தை கொல்லப்பட்டதும், கேட்டதும்,

நல்லவன் போல் நான் கொஞ்சம் வருந்தினாலும்,
நல்ல வேளை, நம் பெண் அல்ல என நினைக்கையில்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

சாதி மத பேதங்களால், மக்கள் மாக்களாகி
மோதிடும் நேரம், எதுவும் செய்ய இயலாமல்,

என் தேசம் சீரழிவது ஊழல் அரசியல்வாதிகளால்
எனக் கூறி, என் கடமைகளை நான் மறக்கும் நேரம்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

நகரம் முழுதும் புகை மண்டி, மூச்சு விடமுடியாத
நரகமாய் மாறிய போதும், நான் ஒருவன் செல்லும்

மகிழ்வுந்தால் பெரிய சேதம் வராது என்று எண்ணி,
மகிழ்வுடன் என் பயணத்தைத் தொடரும் சமயம்,

மனசாட்சி மெல்ல மடிகிறதே!

கார் இருளில், ஓர் இரவில், என் மனசாட்சியைப்
பார்க்கிறேன் அதற்கு இன்னும் உள்ளதா உயிர் என,

அதன் உயிர் ஒட்டிக்கொண்டு உள்ளதே! நான்
அதனைச் சிறிது சிறிதாய்க் கொன்று புதைப்பினும்!


கருத்து: திரு. ராம் ஜெத்மலானி
ஆக்கம்: ராஜி ராம்

வாழ்க வளமுடன்; நலமுடன்!
 

Latest ads

Back
Top