எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 133

இடம் அறிந்துகொள்க!

இடம் தேர்ந்தெடுத்த பின்னர், பகைவரை எதிர்த்தால்,
திடமாக நம்பலாம், வெற்றிக் கனி கிட்டும் என்பதை!

நாம் ஈடுபடும் செயல் பெரிதல்ல, என்று அலட்சியமாக
நாம் எண்ணிவிடாது, இடனறிந்து செயல் புரிதல், நலம்.

'தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது', என்று எச்சரிக்கிறார்!

வரும் பகையை வெல்லும் வலிமை இருந்தாலும், ஒரு
அரும் அரணும் இருந்தால், பெரும் பயன் கிடைத்திடும்.

'முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்', என அறிவுறுத்துகிறார் குறளில்.

தக்க இடம் பகைவரைக் தாக்கத் தேர்வு செய்துவிட்டு,
தம்மைக் காத்துக் கொண்டால், வலிமை பெருகிவிடும்.

வலிமை பெருகிவிடுவதால், பகைவரை வெல்லுவதும்,
எளிய செயல் போல மாறி, வெற்றியும் கிடைத்துவிடும்!

இடம் தேர்வு செய்து கொள்ளும், வெற்றிக்கு வழியை, நம்-
மிடம் உரைக்கின்றார் திருவள்ளுவர், குறளமுதத்தில்!


:first:
 
Last edited:
போகும் இடமெல்லாம்....

அரசை வெற்றிப் பாதையில் செலுத்திவிட,
வரிசையான உபதேசங்கள், வள்ளுவத்தில்!

இடம் தேர்வு செய்து மோதினால், எளிதில் தம்-
மிடம் வெற்றி வரும், என உரைக்கிறார் அவர்.

இடம் தேர்வு தேவையில்லை என்று, போகும்
இடமெல்லாம் சிலர் பகை வளர்ப்பது விந்தை!

அரசராகத் தம்மை, படையாக நண்பரை, போர்க்
கருவியாகச் சொற்களை பாவித்து, தாக்குவார்!

:fencing: . . . :nono:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 134

இடம் அறிதல்...

எந்தச் செயலை ஒருவர் ஆற்றினாலும், அதற்கு வேண்டிய
தகுந்த இடம் தெரிந்து தெளிதல், மிகவும் தேவையாகும்.

கடலில் தேர் ஓடாது என்பதுடன் அறியவேண்டும், அந்தக்
கடலில் போகும் கப்பல், நிலத்தில் போகாது என்பதையும்!

'கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து', என்பது அந்தக் குறள்.

இரண்டு விலங்குகளை உதாரணம் காட்டி, உலகினருக்கு,
நிறைந்த அறிவுரைகளைக் கூறுகின்றார், குறட்பாக்களில்.

நீரில் உள்ளவரைதான் முதலைக்கு பலம் இருக்கும். அது
நீரில் இருந்து வெளிவந்தால், சிறு விலங்குகூட விரட்டும்!

'நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற', என்று எச்சரிக்கிறார் அவர்!

யானை மிகவும் பலம் படைத்தது; வேல் பிடித்த பலமான
சேனை வீரரையும் வீழ்த்திவிடும்; ஆனால், அந்த யானை

சேற்றில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சமயத்தில், வரும்
ஏற்றம் இல்லா நரிக் கூட்டமும், கொன்றுவிடும் எளிதாக!

'காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு', என்பது குறள்.

பலம் மிகுந்த விலங்குகளும், இடம் மாறினால் இடருறும்;
தினம் இதை நினைவில் கொண்டு, நாம் அறிவோம் இடம்!

:decision: . . :nod:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 135

சிறந்த நான்கு...

ஆராயாது ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தவறு;
ஆராய வேண்டிய நான்கினை, வள்ளுவர் கூறுகிறார்.

அறவழியில் உறுதி, பொருள் வகையில் நாணயம்,
பெறும் இன்பத்தில் மயக்கம் கொள்ளாது இருத்தல்,

மேலும் தன் உயிருக்கு அஞ்சாமை, ஆகியவை அவை;
மேலான இக்குணங்களே, நம்பிக்கை வைக்கத் தேவை.

'அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்', என்று அறிவுரை.

எந்த ஒருவரிடமும், நற்குணங்களே முழுதும் இராது;
எந்த ஒருவரிடமும், தீய குணங்களே முழுதும் இராது.

நல்ல குணங்கள் நிறைந்திருந்தால், தோழமை நலமே;
அல்ல குணங்கள் நிறைந்திருந்தால், விலகுதல் நலமே.

'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்', என்கிறார் அவர்.

நல்ல குணம் கொண்டவருடன் நாம் நட்புக் கொள்வோம்;
நல்ல நட்பால், நல்ல துணை பெற்று, வாழ்வில் உய்வோம்!

:grouphug: .. :first:
 
தேர்ந்தெடுத்தல்...

அரசன் தனக்கு அருகிலிருப்பவரைத் தேர்வு செய்ய
அழகான வழிகளை வள்ளுவர் உரைக்கின்றார்! இதை

வரும் தேர்தலில் நாட்டை ஆள்பவரைத் தேர்ந்தெடுக்க,
அரும் வழிகளாகவே நாமும் எடுத்துக் கொள்ளலாமே!

:director: . . :becky:

ஒரு சந்தேகம்!

ஒருவேளை ஓட்டுப் பெறும் தகுதியில்
ஒருவரும் இல்லாது போய்விட்டால்? :noidea:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 136

தெரிந்து தெளிதல்

தரமான தங்கத்தை அறிந்துகொள்ளத் தேவை, உரைகல்;
தரமான மனிதரை அறியத் தேவை, அவரின் செயல்கள்!

பெருமை ஒருவருக்குச் சேரும், நற்செயல்கள் புரிவதால்;
சிறுமை ஒருவருக்குச் சேரும், தீய செயல்கள் புரிவதால்.

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்', என்பது அந்தக் குறள்.

அன்பு காரணமாக அறிவற்றவரைத் தேர்வு செய்து, அவரை
நம்புவது அறியாமை மட்டுமல்ல; எந்தப் பயனும் தராது!

'காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்', என எச்சரிக்கை!

தீராத் துன்பமே, ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வது;
தீராத் துன்பமே, ஆராய்ந்து எடுத்தவரைச் சந்தேகப்படுவது!

'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்', என்கின்றார் வள்ளுவர்.

வள்ளுவர் காட்டிய வழியில், தேர்வு செய்தல் அறிவோம்;
கொள்ளும் அன்பால், தேர்தலில் தவறு செய்யாதிருப்போம்!

:decision: ==> :suspicious: ... <= :nono:
 
அன்பு, அன்பளிப்பு

அன்பளிப்புத் தந்து, வேட்பாளர் ஆகி நிற்போரை,
அன்பை நாம் தலைவரிடம் வைத்துவிட்டதால்,

கண்மூடித்தனமாக வெற்றிபெறச் செய்துவிட்டு,
பின் விளைவுகளால், அல்லல்படுவதை விட்டு,

விழிப்போடு நல்ல நட்பையும், ஆளுபவரையும்,
குறிப்பிட்டுத் தேர்வு செய்யவே அறிந்திடுவோம்!

சரியான நட்பால், சுற்றத்தை மேம்படுத்துவோம்!
சரியான தேர்தலால், நாட்டை பலப்படுத்துவோம்!

:grouphug: . . . :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 137

செயலாற்றும் திறம்

ஆற்றலுடன் செயல் புரிபவரைத் தேர்வு செய்தால்
ஆற்றலுடன் செவ்வனே பணிகளை முடித்திடுவார்.

நன்மையும், தீமையும் ஆராய்ந்து அறிந்து, தேர்ந்து,
நன்மை புரிபவர், எப்பணியையும் நன்கு ஆற்றுவார்.

'நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்', என்கின்றார்.

வருமானம் பெருக்கும் வழிகளைக் கண்டு, அறிந்து,
பெறுகின்ற வளங்களைப் பெருக்கி, இடையில் வந்து

சேரும் இடையூறுகளை, ஆராய்ந்து நீக்க முடிபவரே,
பெரும் செயல்கள் செய்வதில் வல்லவராக இருப்பார்.

'வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை', என்பது குறள்.

நன்கு செயலைச் செய்வோரைத் தேர்ந்தெடுக்க, இந்த
நான்கு குணங்களைக் குறிப்பிடுகிறார், திருவள்ளுவர்.

அன்பு, அறிவு, செயலை நன்கு ஆற்றும் திறமை, நல்ல
பண்பாகிய பேராசை இல்லாமை ஆகியவையே அவை!

'அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு', என்று பட்டியல்.

வள்ளுவர் வழியைப் பின்பற்றி, நன்கு செயல் செய்யும்
வல்லவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை அறிவோம்!

:decision: . . :first:
 
நன்றி சார்! ஆனால், 'குருவி தலையில் பனங்காய்'?? :noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 138

சரியானவர் தேர்வு...

எந்தச் செயலும் நன்கு ஆற்ற வேண்டின், அதற்குத்
தகுந்த ஒருவரை அறிந்து, தேர்வு செய்தல் தேவை.

செய்கின்றவரின் தன்மையும், செயலின் தன்மையும்,
செய்யும் காலத்தையும் ஆராய்ந்து, செய்யவேண்டும்.

'செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்', என்று அறிவுறுத்தல்.

எந்தச் செயலும் ஒருவர் முடிப்பரா என்று ஆராய்ந்து,
அந்தச் செயலை, அவரையே செய்வித்தல் நலமாகும்.

'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்', என வழி காட்டுகிறார்.

செயலில் ஈடுபடத் தகுதி உடையவரையே அறிந்து,
செயலை அவர் செய்வதற்கு ஈடுபடுத்த வேண்டும்.

'வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்', என்று கூறுகிறார்.

திருவள்ளுவர் காட்டும் வழிகளை அறிந்துகொண்டு,
திருத்தமாகச் செயல்களைச் செய்ய அறிந்திடுவோம்!

:first: . . . :peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 139

நல்ல சுற்றம் ...

நம்மைச் சுற்றி வருவோரைச் சுற்றத்தார் எனலாம்;
நம் அருகில் இருந்தாலும், வேறு ஊரில் இருந்தாலும்!

செல்வம் கொழிக்கும் காலத்தில் மட்டுமே, சுற்றலாம்;
செல்வம் குறையும் காலத்தில், விலகிச் செல்லலாம்!

வறுமை வந்த நேரத்திலும், உறவைப் பாராட்டுவோரே,
அருமையான சுற்றமாகும், என்கின்றார் திருவள்ளுவர்!

'பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள', என்பது குறட்பா.

இதுபோன்ற நல்ல சுற்றம் அமையப் பெற்றால், நமக்கு
அதுபோன்ற ஆக்கம் தருவது வேறு ஒன்றும் இல்லை!

'விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்', என்று உரைக்கிறார்.

கரை இல்லாக் குளத்தில் நிறைந்த நீரால் பயனில்லை;
நிறைவான நல்ல மனத்துடன், தன் சுற்றத்துடன் கூடி,

அன்புதனைக் காட்டி வாழாவிட்டால், பயனே இல்லை;
என்பதனை அழகிய குறளாக வடிக்கிறார் வள்ளுவர்.

'அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று', என அந்தக் குறள்.

அன்பு காட்டும் மனத்தால் சுற்றம் போற்ற அறிவோம்;
அன்பு காட்டும் சுற்றத்தால், இன்பம் பெற்று உய்வோம்!

:grouphug: . . :dance:
 
பணமும், குணமும் ...

'பணம் என்ன செய்யும்; ஒரு மனிதனுக்குத் தேவை
குணம்', என்பது பொதுவாக உரைத்திடும் வாசகம்.

குணம் சிறப்பாகக் கொண்டவன் கணவனே ஆயினும்,
பணம் கொடுக்காவிட்டால், மனைவி வெறுப்பாள்!

பணம் தேவை உலக வாழ்வில் சிறப்பதற்கு; ஆனால்
குணம் நன்கு இருந்தாலே, பகிர்ந்திடும் மனம் வரும்!

பணம் நிறைந்து, பகிர்ந்திடும் நல்ல மனம் இருந்தால்,
குணம் நிறைந்தவராய், சுற்றத்துடன் கூடி மகிழலாம்!

:grouphug: . :clap2:
 
நன்றி..

என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளிக்கும்,
என் நண்பர் வட்டத்துக்கு, நன்றிகள் பல!

தங்கள் ஊக்கமே என் ஆக்கம் :thumb:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 140

செல்வத்தின் பயன்...

தம் இனத்தார் அன்புடன் சூழ்ந்திருக்க வாழுவதே
தம் செல்வத்தின் பயனாக ஒருவர் கருதவேண்டும்.

'சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றதால் பெற்ற பயன்', என்று அறிவுறுத்தல்.

அரிய வள்ளல் தன்மையுடன் அள்ளித் தந்து, தமது
இனிய சொற்களால் அன்பு பாராட்டினால், அவரை

அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொள்வார், என
எடுத்து உரைக்கின்றார், இன்னொரு குறட்பாவில்.

'கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்', என்பது அக்குறளாகும்.

கொடைத் தன்மையுடன், சீற்றமே இல்லாத குணம்
உடையவன் சுற்றம்போல, உலகில் வேறு இல்லை!

'பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்தில் இல்', எனக் கூறுகிறார்.

தான் எந்த உணவைக் கண்டாலும், மறைத்துவிடாது,
தான் கரைந்து தன் சுற்றத்தை அழைக்கும், காக்கை!

தான் பெற்றதைப் பகிர்ந்து, சுற்றத்துடன் மகிழ்வோர்-
தான், உலகில் நல்ல பெயரான ஆக்கத்தைப் பெறுவர்!

'காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள'. இது அவர் வாக்காகும்.

செல்லும் தன்மை உடைய செல்வத்தின் பயனைச்
சொல்லும் வள்ளுவத்தின் வழிகள் ஏற்றிடுவோம்!

:angel: . . :first:
 
இன்சொல்லும், ஈகையும்...

ஒரு அரசனுக்குத் தான் ஆளும் மக்கள் சுற்றம் ஆவார்;
ஒரு இல்லத்தரசனுக்கு, உறவினர்கள் சுற்றம் ஆவார்.

இன்சொல் பேசி, ஈகை குணம் உள்ள அரசனை, என்றும்
இணையில்லாத் தலைவனாக மக்கள் கொண்டாடுவார்.

இன்சொல் பேசி, உதவும் ஒருவனை, அவன் சுற்றத்தார்,
இணையில்லாத உறவாக மதித்துக் கொண்டாடுவார்.

சுற்றம் சுற்றிவர, செல்வமும், இன்சொல்லும் வேண்டும்.
நித்தம் இதை உணர்ந்து, நல்வழியில் வாழ்ந்திடுவோம்!

:high5: . . :dance:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 141

உறவும், பிரிவும்...

உறவு உள்ளவர்கள் ஏதோ காரணம் காட்டிவிட்டுப்
பிரிவு கொள்வதும், சேர்வதும் உலகில் நிகழ்வதே.

இவ்வாறு சூழ்நிலை வருவது ஏன் எனவும், அதனை
எவ்வாறு எதிர்கொள்வது எனவும் உரைக்கின்றார்.

எக்காரணத்தையாவது காட்டிப் பிரிந்து சென்றவர்,
அக்காரணம் சரியல்ல என உணர்ந்தால், கூடுவார்!

'தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்', என்கின்றார் அவர்.

தாம் உதவி செய்ய வேண்டியபோது விலகிவிட்டு,
தாம் உதவி கோரும்போது கூடுபவர் சரியல்லவே!

மீண்டும் வந்து சேரும் சுற்றம், சேரும் காரணத்தை,
வேண்டும் ஆராய்தல், என்றும் அறிவுறுத்துகின்றார்.

'உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்', எனக் குறட்பா.

சுற்றத்தை நாம் தாங்குதல் தேவையே எனினும், அச்
சுற்றத்தின் தன்மை அறிந்து கொள்வது, மிகத் தேவை!

குறிப்பு:

குறட்பா, வேந்தனை முன்வைத்து எழுதியதே எனினும்,
குறட்பா, சராசரி மனிதருக்கும் நன்கு பொருந்துகிறதே! :thumb:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 142

மறதி வசதி இல்லை!

மிகுந்து போகும் மகிழ்ச்சியால், கடமைகளைச் செய்யாது
மறந்து போவது, எள்ளளவும் நன்மையைத் தந்துவிடாது!

மிகுந்த சினம் தீயதே; அளவற்ற மகிழ்ச்சியால் கடமைகள்
மறந்து போவது, அதைவிடத் தீயதாகும். இதன் குறட்பா:

'இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு'.

எவருக்கு மறவாமை என்ற தன்மை தவறாமல் இருக்குமோ,
அவருக்கு அதைவிட நன்மை தருவது வேறு ஒன்றுமில்லை.

'இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்', என்கிறார் குறளில்.

கடமைகளை மறந்தவர், என்றும் சிறப்புற வாழ்வதில்லை.
கடமைகளை, மமதையால் மறக்கும் குணம் உள்ளவர்கள்,

அவ்வாறு இருந்த குணத்தால் அழிந்தவர்களை, மனத்தில்
எவ்வாறேனும் நினைத்துப் பார்த்துத் திருந்த வேண்டும்.

'இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து', என்கிறார்.

மறவாமையின் சிறப்பை அறிந்து, நம் கடமைகளையும்
மறவாமல் செய்து, உலகில் நல்ல மேன்மை பெறுவோம்!

:peace:
 
தீயவை மறப்போம்..

வாழ்வில் பெற்ற இன்ப நிமிடங்களை, நினைவில் கொண்டு,
வாழ்வில் பெற்ற துன்பங்களை, மறந்திடப் பழகிக் கொண்டு,

ஆற்ற வேண்டிய கடமைகளைச் சுமையாக எண்ணாது, எவர்
ஆற்ற முனைகிராரோ, அவரே வெற்றிப் படிகளில் ஏறுவார்!

மற்றவர் நம்மிடம் அதிகமாக எதிர்பார்த்தால், நாம் திறமை
பெற்றவர் என்பதை நம்புவதாக எண்ணுதல், மனநலம் தரும்!

இறைவன் அளித்த நன்மைகளை மட்டும் கூட்டி வைப்போம்;
குறைகள் மறந்து, நிறைகள் நினைத்து, நிம்மதி பெறுவோம்!

:peace: . . . :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 143

செங்கோல் ஆட்சி ...

நல்ல செங்கோல் ஆட்சி, உலகம் செழித்திடத் தேவை என்று
தெள்ளத் தெளிவாகக் கூற, ஒரு அதிகாரமே அமைத்துள்ளார்.

குற்றம் என்னவென்று ஆராய்ந்து, தெளிந்த பின், ஒரு புறமும்
உற்றவர் என்பதால் சாயாது, நடுவுநிலைமை காப்பதுதான் நீதி!

'ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை', என்பது அந்தக் குறள்.

உலகில் அனைத்து உயிர்களும் வாழ, வான்மழை தேவையாகும்;
நாட்டில் உள்ள குடிமக்கள் நன்கு வாழ, நல்லாட்சி தேவையாகும்.

'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி', என்று உரைக்கிறார்.

அறவழி நிற்போரின் நூல்களுக்கும், அறவழிச் செயல்களுக்கும்,
சிறப்பான செங்கோல் ஆட்சியே, அடிப்படையாக அமைந்திடும்.

'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்', என்பது குறட்பா.

செங்கோல் தவறாத ஆட்சி மலர்ந்து, உலகு மேன்மை பெற்றிட,
எங்கும் நிறைந்த இறையின் மலர்த்தாள் பற்றி வேண்டுவோம்!

:hail: . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 144

நல்ல அரசு ...

வேந்தனுக்கு அவனது வேல் வெற்றி தருவது, இல்லை;
வேந்தனின் வளையாத செங்கோல்தான் வெற்றி தரும்.

வளையாத செங்கோல் ஆட்சி நடந்தாலே, மக்களுக்கு
நிலையான அமைதியும் இன்பமும் கிடைத்துவிடும்.

'வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்', என்கிறார்.

குடிமக்களைப் பாதுகாப்பதுடன் நில்லாது, நல்ல அரசு,
குற்றம் செய்வது எவராயினும் தண்டித்திட வேண்டும்.

தன் மக்களே ஆயினும், குற்றங்கடிதல் அரசின் கடமை;
தன் மக்களையே தண்டித்தார் என்ற இழுக்கும் வராது.

'குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்'. இது குறள்.

செழிப்பாகப் பயிர்கள் வளர, அதன் ஊடே வரும் களைகள்
ஒழிப்பது தவறாது செய்ய வேண்டும்; அதைப் போலவே,

குடிமக்கள் அமைதியாக வாழ, கொலை முதலான அந்தக்
கொடிய செயல் புரிவோரை, தண்டித்தல் மிகத் தேவையே!

'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்', என்று அறிவுறுத்துகின்றார்.

நல்ல அரசுக்கு இன்றியமையாதவை எவை எவை என்று,
நல்ல வழி காட்டும் வள்ளுவத்தை, அரசுகள் ஏற்கட்டும்.

:evil: <== :whip:
 
வேண்டியவர், வேண்டாதவர்...

தன் சுற்றம் குற்றம் புரியும்போது,
தன் கண், காதுகளை மூடுவது,

இந்நாளின் அரசியலாக ஆனது!
எந்நாளில் நிலைமை மாறுமோ?

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 145

கொடிய அரசு...

கொலை செய்வது மாபாதகச் செயல் ஆகும்; அதைவிடக்
கொடியது குடிமக்களைத் துன்புறுத்தும் தீவழி அரசாகும்!

'கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து', என்று உரைக்கின்றார்.

கையில் வேல் ஏந்திய கொள்ளையர், பொருள் சேருவதற்கு,
பையில் வழிப்போக்கர் வைத்த பணம் பறிக்க, மிரட்டுவார்.

கோல் ஏந்திய அரசன், தன் குடிமக்களிடம் பணம் பறித்தல்,
வேல் ஏந்திய கொள்ளையரின் மிரட்டல் போன்றதே ஆகும்.

'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு', என்று ஒப்பீடு!

நாட்டு நிலைமை ஆராயாது கொடுங்கோல் புரியும் அரசு,
நல்ல நிதி நிலையும், மக்கள் மதிப்பும் ஒருசேர இழக்கும்.

'கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு', என்பது அந்தக் குறள்.

கொடுங்கோல் ஆட்சிகள் நடந்து துன்புறுத்தாது, உலகில்
செங்கோல் ஆட்சிகள் மலர, வேண்டி வணங்கிடுவோம்!

:pray2:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 145

கொடிய அரசு...

கொலை செய்வது மாபாதகச் செயல் ஆகும்; அதைவிடக்
கொடியது குடிமக்களைத் துன்புறுத்தும் தீவழி அரசாகும்!

'கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து', என்று உரைக்கின்றார்.

கையில் வேல் ஏந்திய கொள்ளையர், பொருள் சேருவதற்கு,
பையில் வழிப்போக்கர் வைத்த பணம் பறிக்க, மிரட்டுவார்.

கோல் ஏந்திய அரசன், தன் குடிமக்களிடம் பணம் பறித்தல்,
வேல் ஏந்திய கொள்ளையரின் மிரட்டல் போன்றதே ஆகும்.

'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு', என்று ஒப்பீடு!

நாட்டு நிலைமை ஆராயாது கொடுங்கோல் புரியும் அரசு,
நல்ல நிதி நிலையும், மக்கள் மதிப்பும் ஒருசேர இழக்கும்.

'கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு', என்பது அந்தக் குறள்.

கொடுங்கோல் ஆட்சிகள் நடந்து துன்புறுத்தாது, உலகில்
செங்கோல் ஆட்சிகள் மலர, வேண்டி வணங்கிடுவோம்!

:pray2:

வள்ளுவரை குறிப்பிடும்பொழுது
அய்யன் வள்ளுவன் என்று குறிப்பிட்டால்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

பதிவுக்கு நன்றி
 
பெறும் பொருள்...

பெறும் பொருள், பெரும் பொருளாக,
அரும் வகைகள் பலர் கண்டுள்ளார்!

கண்துடைப்பு செய்ய வழிகள்; அதில்
விண்ணளவு கிட்டிடும் வருமானம்!

எங்கிருந்தோ வந்தும், செல்வந்தராய்
எப்படியோ உயரும் மார்க்கங்கள் பல!

திருவள்ளுவர் என்ன எண்ணுவாரோ,
திருவாளர்கள் செய்யும் செயல்களால்?

:noidea:
 
Back
Top