எண்ண அலைகள்....

வள்ளுவரை குறிப்பிடும்பொழுது
அய்யன் வள்ளுவன் என்று குறிப்பிட்டால்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

பதிவுக்கு நன்றி
அய்யன் வள்ளுவர் என்று சிலர் பதிவு செய்துவிட்டதால், தவிர்த்தேன்!
ஐயமின்றி அறிந்துகொள்ளுங்கள், அவரிடம் எனக்கு வானளவு மதிப்பு! :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 146

கொடுங்கோல் ஆட்சி...

கொடுங்கோல் ஆட்சியினால், மனம் வருந்திய மக்கள்
விடும் கண்ணீரே போதுமான படை, ஆட்சியை அழிக்க.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை', என்கின்றார்.

வறுமை கொடிதுதான்; கொடுங்கோல் அரசனின் கீழ்
செழுமை அதனினும் கொடியதாகவே தோன்றிவிடும்.

'இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ் படின்', என்பது எச்சரிக்கை.

முறை தவறி ஆட்சி நடந்தால், வானம் தரும் மழையும்
முறையாகப் பெய்யாது, பூமியே வறண்டு போய்விடும்.

நீரின்றி அமையாது உலகு; எனவே அந்த ஆட்சியின் கீழ்
நீரின்றி, அதனால் வளமின்றி, குடிமக்களும் துன்புறுவர்.

'முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்', என்று உரைக்கின்றார்.

கொடுங்கோல் ஆட்சியில் பருவ மழையும் தவறும், எனவே
செங்கோல் ஆட்சி மலர, ஆவன செய்ய முயன்றிடுவோம்!

:decision: . . . :angel:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 147

கொடுங்கோல் அழியும்.....

குடிமக்கள் நடுங்குமாறு ஆளும் கொடுங்கோல் ஆட்சி,
நெடிது நில்லாது, மிக விரைவிலேயே அழிந்துவிடும்.

'வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்', என்று எச்சரிக்கை.

கொடிய சொற்களைப் பேசும் அரசன், தன் பெருமை
முடியும் நாள் அருகில், என்று உணர்தல் வேண்டும்.

'இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்', எனவும் அறிவுறுத்தல்.

எளிதில் காண முடியாதவனாக, கடுகடுத்த முகத்துடன்,
எவன் பெருஞ்செல்வம் வைத்திருந்தாலும், அச் செல்வம்,

பேயைக் கண்டதுபோன்ற அச்சத்தைத் தரும், கொடிய
பேய்த் தோற்றமாகவே இருக்கும், என உரைக்கின்றார்.

'அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து', என்பது அந்தக் குறட்பா.

செல்வம் சேர்ப்பதை நல்லவர் செய்யவேண்டும்; பெருஞ்
செல்வம் கொடியவர் சேர்த்தால், யாருக்கு என்ன பயன்?

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 148

எது அழியும்?

கடும் சொல்லும், கருணையற்ற உள்ளம் கொண்டவரின்
பெரும் செல்வமும், நிலைக்காது அழிந்து போய்விடும்.

'கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்', என்று எச்சரிக்கை செய்கிறார்.

கடும் சொல்லின் கேடுகளை, இன்னும் உரைக்கின்றார்;
கடும் சொற்களைச் சொல்லுவது மட்டுமல்லாது, முறை

இல்லாத தண்டனை அளிப்பதும், அரசின் வலிமையை
இல்லாது அறுத்துவிடும் அரம் போன்றது, என்கின்றார்.

'கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்', என்பது குறட்பா.

தன் நல்ல அமைச்சர் முதலானோருடன் ஆலோசிக்காது,
தன் சினத்தை முன் வைத்து, தீயவழி நடக்கும் அரசனின்

பெருமையும், செல்வமும் குறைந்து அழியும் என்பதை,
அருமையான குறட்பாவாக அமைக்கின்றார், வள்ளுவர்.

'இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு', என எச்சரிக்கின்றார் அவர்.

கொடுமையான சொல்லும், சினமும் தீயதே செய்யும்;
கொடுமையான இவற்றை விலக்கி, சிறப்புறுவோம்!

:mad2: <-- :nono:

 
நல்லவை தட்டேழுதுவோம்!

கோபம் தீயது; மன ஆரோக்கியத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும்!
கோபம் கொள்ளாதிருக்க எவ்வளவு வலியுறுத்தல்கள்! இருந்தும்கூட,

கோபம் கொள்ளுவதே, மதிப்பை நமக்கு உயர்த்தும் என எண்ணி, தன்
கோபத்தைக் கேடயம்போலவே வைக்கிறாரே, கொஞ்சம் மனிதர்கள்!

'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்', எனக் கூறிவிட்டு,
கோபம் இருப்பதையே அரும் குணமாக எண்ணி, ஆனந்திக்கின்றாரே!

'அடிக்கிற கைதான் அணைக்கும்', என்று தத்துவம்போலப் பேசிவிட்டு,
அடிக்கிற குணத்தையே தாம் வளர்த்துக் கொண்டு, மகிழ்கின்றாரே!

தீயினால் சுட்ட புண் ஆறும், நாவினால் சுட்ட வடு ஆறாது, என்பதால்,
தீயைப் போன்ற சொற்களைப் பேசாது, கணினி வழி அனுப்புகின்றாரே!

மனம், வாக்கு, காயத்தால் தீங்கு நினையாது, சொல்லாது, செய்யாது,
தினம் இருப்பதுடன், கணினியில் நல்லவை தட்டேழுதுவோம், இனி!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 149

கண்ணோட்டம்.

கண்ணோட்டம் என்று திருவள்ளுவர் குறிப்பது
அன்பும், இரக்கமும் கொண்ட கண்ணோட்டத்தை.

கண்ணோட்டம் என்கிற பேரழகு இருப்பதாலேதான்
மண்ணுலகே அழியாமல் இருக்கிறது, என்கின்றார்.

'கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு', என்பது குறள்.

உலகிற்கு பாரமாக இருப்பவர் எவரென்று காட்ட,
உலகிற்கு அளித்த குறட்பாக்கள் இவை இரண்டு.

நல்ல கண்ணோட்டம் என்ற உலகியலுக்கு மாறாக
உள்ள எவரும் இருப்பதே, இப்பூமிக்குப் பாரமாகும்.

'கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை', என்கிறார் அவர்.

கல்லார் அரசுக்கு நல்வழியைக் காட்டுவது இயலாது;
கல்லார் துணை நின்றால், அரசின் நிலை என்னாகும்?

கொடுங்கோல் அரசு, கல்லாதவரையே துணையாகக்
கொள்ளும்; அதுபோல பூமிக்கு பாரம் வேறு இல்லை!

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை', என்கிறார் மீண்டும்.

நல்ல கண்ணோட்டத்தின் அவசியத்தைக் கூறி
நல்ல உலக வாழ்வுக்கு, வழி காட்டுகிறார் அவர்.

:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 150

கண்ணான கண்...

எண்சாண் உடலுக்கு, நம் தலைதான் முதன்மை ஆகும்;
கண்தான் முகத்தில் மிகவும் பெருமை வாய்ந்தது ஆகும்.

எதை ஒருவர் போற்றிப் பாதுக்காக வேண்டுமாயினும்,
அதைக் கண்ணெனப் போற்றுவதாகச் சொல்லுவதுண்டு!

திருவள்ளுவரைப் பொறுத்தவரை, உலகில் மனிதருக்கு
இரு கண்கள் இருப்பது, அன்புடன் பிறரை நோக்கத்தான்.

கண்ணோட்டம் என்ற அதிகாரத்தில், இந்த எண்ணத்தையே,
கண்ணான சில குறட்பாக்களாக அமைத்து வைத்துள்ளார்.

பாடலோடு பொருந்திவராத இசையால், ஒரு பயனில்லை;
பாடலின் பொருளுக்கேற்ற இசையே, பயனுடையது ஆகும்.

கண்ணும் அதுபோலவே; அன்புடன் நோக்கும் நற்குணமே
கண்ணுக்குத் தேவை; இல்லையேல், ஒரு பயனும் இல்லை.

'பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்', என்று வரையறுக்கின்றார்.

கண்ணைக் காண்பதற்கு மட்டும் பயன்படுத்தாது, அன்பான
எண்ணங்களை வெளிப்படுத்தும், நல்ல கருவி ஆக்குவோம்!

:yo:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 150

கண்ணான கண்...
.........................
'பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்.......

இசை அறிவு...

இலக்கண, இலக்கிய அறிவு நிறைந்த திருவள்ளுவர்,
இலட்சணமான இசையின் பெருமையும் அறிவார்!

பண் என்று தமிழிசை கூறும், ஒவ்வொரு ராகமும்,
தன் வசம் கொண்டது, வெவ்வேறு உணர்ச்சிகளை.

ஒரு உணர்ச்சியையே கொண்ட பண்கள் பல உண்டு;
ஒரு சில உணர்ச்சிகளைக் கொண்டவைகள் உண்டு!

இன்ப நிலை வெளிப்படுத்தும் ராகத்தில், மனதின்
துன்பம் உரைக்கும் பாடலை இசைத்தாலும், சோக

உணர்வை வெளிப்படுத்தும் ராகம் ஒன்றில், கோப
உணர்வைக் கூற முனைந்தாலும், சிறப்புறாது! இந்த

நுணுக்கமான கருத்தை, ஒரு குறு வரியில், எத்தனை
நுணுக்கமாக ஒப்பீடாக உரைத்துள்ளார், அந்த மேதை!

வள்ளுவம் வாழ்க! :hail:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 151

நல்ல கண்கள்...

இரு கண்கள், ஆண்டவன் படைப்பால் முகத்தில் உள்ளன;
இரு கண்களும் எப்போது பயனுள்ளதாக இருக்கின்றன?

அகத்தில் அன்பும் கருணையும் சுரக்கச் செய்யாத கண்கள்,
முகத்தில் உள்ளது போல் தோன்றும்; வேறு பயனில்லை.

'உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்', என்கிறார் அவர்.

கண் இருந்தால் கருணை தவழ வேண்டும்; இல்லையேல்
புண் இருப்பதுபோலவே அது உணரப்படும், என்கின்றார்.

'கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்', என்பதே ஒரு எச்சரிக்கை!

கண்கள் இருப்பவர்களுக்கு இரக்கம் இல்லையேல், அவர்கள்
மண்ணில் விளையும் மரத்திற்குத்தான் ஒப்பானவர் ஆவார்.

'மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோட
டியைந்துகண் ணோடா தவர்', என்பது குறட்பா.

பார்வைக்குக் கண்களைப் பெற்றாலும், அருள் இல்லையேல்,
பார்வை அற்றவரைப் போலவே அவர்கள் கருதப்படுவார்கள்.

'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்', என்று உரைக்கிறார்.

கருணை நோக்கு வேண்டும் என்பதை வலியுறுத்துச் சொல்ல,
அருமையான எத்தனை குறட்பாக்கள்? அறிந்து போற்றுவோம்!

:clap2:
 
கண்களைக் கண்களாக்குவோம்!

ஆண்டவன் அருளால் நமக்கு இரு கண்கள்;
வேண்டும் அவற்றில், அருட் பார்வைகள்.

தோற்றத்துக் மட்டும் அவை தெரியும் எனாது,
ஏற்றமான அருளை, பார்வையில் வைப்போம்!

கண்களைப் புண்ணுக்கு நிகர் ஆக்கிவிடாது,
கண்களால் கருணைப் பார்வை காட்டுவோம்!

உலக வாழ்வில், மரமாக நாம் நின்றுவிடாது,
உலக மக்களிடம் அன்பு காட்ட அறிவோம்!

கண்ணிருந்தும் அந்தகர்போல வாழ்ந்திடாது,
கண்ணில் நல்ல கண்ணோட்டம் கொள்வோம்!

வள்ளுவம் காட்டும் நல்வழிகள் அறிந்து, நாம்
செல்லுவோம் நல்ல அறவழிப் பாதையில்!

வள்ளுவம் வாழ்க! :hail:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 152

கருணையின் எல்லை...

கருணை கண்களுக்கு வேண்டுமென வலியுறுத்தியவர்,
கருணையின் எல்லையையும் வரையறுத்துக் கூறுகிறார்.

உயர்ந்த பண்பாடு எது என்று உரைக்கும்போது, எவரேனும்
துயர் தந்தாலும், அவரைப் பொறுத்தல் என்பதே, என்கிறார்!

நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகளிடமும், பொறுமையை
நாம் காட்டுவதே உயர்ந்த கண்ணோட்டம், என்கிறார் அவர்.

'ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை', என்பது குறட்பா.

உயிரை துச்சமாக மதிப்பவரைக் காணுதல் மிக அரிது; அந்த
உயிரைக் கொடுப்பதிலும், கருணை உள்ளவர் களிப்பாராம்!

தம்மிடம் நெருங்கி அன்புடன் பழகியவர், என்றாவது வந்து,
தம்மிடம் நஞ்சைக் கொடுப்பினும், பண்பாளர் அருந்துவாராம்!

'பெயக்கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்', என்று கூறுகின்றார்.

நஞ்சு உண்ணும் அளவுக்கு நாம் போகாவிட்டாலும், நல்ல
நெஞ்சு கொண்டு, பொறுமை காக்க அறிந்துகொள்வோம்!

:tea:
 
நஞ்சு தருவாரா?

தம்மிடம் அன்புடன் பழகியவர், நஞ்சு கொணர்ந்து
தம்மிடம் தந்தால், பண்பாளர் அதை அருந்துவார்.

இவ்வாறு வள்ளுவம் உரைத்தாலும், அன்புள்ளவர்
எவ்வாறு நஞ்சு தரும் ஒரு இழி நிலைக்கு வருவார்?

நஞ்சால் தம் உயிர் மாய்க்க நினைப்பவரிடம், தம்
நெஞ்சில் பண்புள்ளவர், எவ்வாறு நெருங்கினார்?

நடக்க இயலாத இவைகள் நடந்தாலும், பண்புடன்
நடக்க, வழியை வள்ளுவம் கூற முயலுகிறதோ?

:noidea:
 
சினம் வேண்டாம்!

சினம் கொள்ளுதல் என்பதை, எவர்
தினம் செய்தாலும், தீயதே! தனது

மனம் கெடுவது மட்டுமின்றி, பிறர்
மனம் கெடவும், வழி வகுக்கும் அது!

சினம் அதிகமானால், நினைப்பதும்
சுடும் சொற்களாகத் தோன்றிவிடும்.

கொதிக்கும் சொற்களே, வெளி வரும்;
கொதிக்கும் குருதியை, உடல் பெறும்!

சுற்றத்தின் குற்றம் காண வைக்கும்;
உற்றாரே இல்லாதும் செய்துவிடும்.

சேர்ந்தாரைக் கொல்லியாக இருக்கும்;
சோர்ந்து மனம் போகவும் வைக்கும்.

அருகில் வரவே அஞ்சவும் வைக்கும்;
எளிதில் போகாது, மிஞ்சியே நிற்கும்!

நல்ல இன்பம் இழந்து, சுற்றத்தையும்
அல்லல் படுத்தும், சினம் வேண்டாம்!

:mad2: <==== :nono:

சினம் வேண்டாம் என வள்ளுவம் வலியுறுத்தும். :director:
 
பாடலுக்கேற்ற இசை...

பாடலுக்கேற்ற இசை பற்றி வள்ளுவர் குறிப்பிடுவதால்,
பாடல் ஒன்றின் இசை வடிவை, இங்கு ஆராதிக்கிறேன்!

பாரதமே புகழும் 'சின்னச்சிறு கிளியே', என்ற பாடலுக்கு
பாரதியார் தந்தார், பைரவி ராகத்தில் ஒரு எளிய மெட்டு!

திரை இசை மேதையான C R சுப்புராமன் புதிய வடிவில்,
நிறைவான ராக மாலிகையாகக் கொடுத்தார், 1951 இல்!

அறுபது ஆண்டுகளாக நிலைக்கும் இனிய மெட்டு, சிறப்-
புறுவது தேர்ந்தெடுத்த ராக அமைப்பினாலேயே ஆகும்!

செல்லம் கொஞ்சும் முதல் இரு கண்ணிகள் காபி ராகம்;
செல்லப் பெண் ஓடிவரும் கண்ணி, ஆடுவோமே பள்ளுப்

பாடுவோமே அமைந்த, துள்ளோட்டமான மாண்ட் ராகம்.
பாடுவதிலே உச்சி முகர்ந்து, ஊர் மெச்சுவதில் ஆனந்திக்க,

உயர்ந்த கம்பீரமான வசந்தா ராகம்; கள் வெறி கொள்ளும்
உன்மத்த நிலைமை காட்ட, இனிமையான திலங் ராகம்.

நெஞ்சில் உதிரம் கொட்டும் துன்பம் பரிமளிக்க, கேட்டதும்
நெஞ்சை உருக்கும் நீலமணி ராகம், என அமைத்தார் அவர்!

திரை இசை ஆனாலும், எல்லா முன்வரிசைக் கலைஞரும்
நிறைவாகக் கச்சேரி முடிக்க, இதைத்தானே நாடுகின்றார்!

காலத்தை வென்ற இந்த இசையைப் போற்றுவோம்; இந்த
ஞாலத்தை மேம்படுத்த, இனிய இசை தேவை; அறிவோம்!

இனிய இசை வளர்க! வாழ்க! :cheer2:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 153

அரசுக்கு ஒற்றர் தேவை...

நேர்மையும், திறமையும் கொண்ட நல்ல ஒற்றர்களும்,
நேர்மை வழி உரைக்கும் நூல்களும், அரசின் கண்களே.

'ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்', என்பது குறட்பா.

நண்பர், பகைவர், நடுநிலையாளர் எல்லோரிடமுள்ள
உண்மை எல்லாம், எல்லாக் காலங்களிலும் அறிந்திட,

நல்ல ஒற்றரை வைத்துக்கொள்ளுவது, ஒரு அரசனின்
நல்ல கடமையாகும் என்று அறிவுறுத்த, ஒரு குறட்பா.

'எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்', என அந்தக் குறள்.

நாட்டின் நிலவரங்களை ஒற்றர்களால் அறியாவிடில்,
நாட்டின் ஆட்சி தழைத்திட வழியில்லை, என்கின்றார்.

'ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்', என்பது குறட்பா.

ஒற்றர் தேவையை அரசுகள் அறிந்துகொண்டு, சிறந்த
கொற்றம் தழைக்கச் செய்ய, இறையை வேண்டுவோம்!

:hail:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 154

நேர்மையான ஒற்றர்

ஒரு அரசு நல்ல முறையில் நடந்திட, தேவையானவர்
ஒரு சில நேர்மையான ஒற்றர்களே ஆவர்; அதுபோன்ற

ஒரு நேர்மையான ஒற்றரின் குணங்களைக் கூறுகிறார்;
ஒருதலைப் பட்சமாக, தன் சுற்றம், தனக்கு வேண்டியவர்,

வேண்டாதவர் என எண்ணிப் பார்க்காது, எல்லோரிடமும்
வேண்டிய அனைத்தையும் ஆராய்பவரே, நல்ல ஒற்றராம்.

'வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று', என்று அறிவுறுத்தல்.

சந்தேகப்பட முடியாத தோற்றத்துடன், அஞ்சாது, தம்மை
சந்தேகப்படும் எவரையும் எதிர்கொள்ளுவதுடன், தனக்கு

என்ன நடந்தாலும், எவரிடமும் தன் மனத்தில் இருக்கும்
எந்த விஷயத்தையும் உரைக்காதவரே, நல்ல ஒற்றராம்.

'கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று', என்று கூறுகிறார்.

வல்லமையான அரசு அமைவதற்கு, நல்ல அமைச்சுடன்,
வல்லமையான ஒற்றரும் தேவை, என அறிந்திடுவோம்!

:decision:
 
இக்கால ஒற்றர்..

அன்பளிப்பு என்ற பெயரில், லஞ்ச ஊழல் தாண்டவம் ஆடும்
இன்றைய கால கட்டத்தில், ஒற்றர்களை அரசு நியமித்தால்,

தமது நாட்டு நடப்புக்களை அறிந்துகொண்டு, தாமே சென்று,
தமது எதிரியிடம் கூறுவாரோ, அன்பளிப்புப் பெற்றுக்கொண்டு!

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 155

உண்மை அறிதல்...

ஒரு ஒற்றர் தெரிந்து கொண்டு வந்த செய்தியை, வேறு
ஒரு ஒற்றர் மூலமும் அறிந்து கொண்டு, அதன் பின்னர்,

அந்தச் செய்தியின் உண்மையைத் தீர்மானிக்க வேண்டும்.
இந்தச் சிறந்த அறிவுரையை, ஒரு குறளில் உரைக்கிறார்.

'ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்', என்பது குறட்பா.

இரண்டு ஒற்றரும் போதாது; உண்மையை உறுதியாக்க,
மூன்று ஒற்றரின் செய்திகள், ஒன்றாக இருக்க வேண்டும்!

ஒருவரை ஒருவர் அறியாதபடி, மூவரை நியமித்து, அவர்
தருவதை ஆராய்ந்து, உண்மை உணர அறிவுறுத்துகிறார்.

'ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்', என்கிறார் அவர்.

ஒற்றரின் திறனை வியந்து, பிறர் அறியச் செய்துவிட்டால்,
ஒளிவு மறைவான பொருளை, வெளிப்படுத்தியது ஆகும்.

ஒளிவு மறைவாக விவரங்கள் சேகரிக்கும் ஒற்றனின் புகழ்,
ஒளிவு மறைவாகவே இருக்க வேண்டும், என்று கூறுகிறார்!

'சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை', என்பது குறட்பா.

கற்றறிந்த அறிஞரின் அறிவுரை மட்டும் அல்லாது, சிறந்த பல
ஒற்றரின் நேர்மையான உழைப்பும், நல்ல அரசுக்குத் தேவை!

:angel:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 156

ஊக்கத்தின் சிறப்பைப் பலவாறு வெளிப்படுத்தி, உலகில்
ஊக்கமே தலையாயது என, வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

ஊக்கம் பெற்ற ஒருவர்தான் எல்லாம் பெற்றவர் ஆவார்;
ஊக்கம் இல்லாதவர், எதுவும் பெறாதவரே ஆகிவிடுவார்.

'உடையர் எனப்படுவது ஊக்கம்அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று', என அறிவுரை.

நிலையான உடைமை ஊக்கம் ஒன்றே; மற்ற எல்லாமே
நிலையற்ற தன்மை உடையவையே, என்கின்றார் அவர்.

மனத்தில் ஊக்கம் இருந்தால், அது அழியாது நிலைக்கும்.
கணத்தில் பொருட்செல்வம் அழிவது, உண்மையே ஆகும்!

'உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்', என்று அறிவுறுத்துகிறார்.

உறுதியான ஊக்கம் கொண்டவரிடம், உயர்வு தானாகவே
உறுதியாகச் சென்று சேரும், என்றும் உரைக்கிறார் அவர்.

'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை', என்பது அந்தக் குறள்.

உயர்வைத் தரும் ஊக்கத்தை என்றும் மனதில் இருத்தி,
உயர்வை உலகில் பெற்று, சிறப்பாக வாழ்ந்திடுவோம்!

:first:
 
ஊக்கம்...

'ஊக்கம் உயர்ச்சி தரும்', என்று என் நண்பர்,
ஊக்கத்தையே கொள்கையாகக் கொள்வார்!

'உயர்ச்சி' என்பது மேன்மையான உயரமே;
உயர்ச்சி பெற, அனைவரும் உழைப்போம்!

:ballchain:====>:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 157

உள்ளத்தில் ஊக்கம்...

எந்நாளும், எவரும் ஊக்கத்தைக் கைவிடலாகாது;
அந்நாளில் வள்ளுவர் பெருமான் அறிவுறுத்தினார்!

தண்ணீரின் மேல்மட்டம் வரையில்தான், தாமரைத்
தண்டு நீண்டு வளரும்; இதை உவமையாக வைத்து,

எவ்வளவு ஊக்கம் ஒருவர் மனம் கொண்டிருக்குமோ,
அவ்வளவு உயர்வு, அவர் வாழ்வு பெறும், என்கிறார்!

'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு', என்பது குறட்பா.

நினைப்பது எல்லாமே நடந்துவிடாது; எனினும், நாம்
நினைப்பது எல்லாம், உயர்வாகவே இருக்கவேண்டும்.

உயர்வாக நினைப்பது கைகூடாவிட்டாலும், என்றுமே
உயர்வாக நினைப்பதை கைவிடக் கூடாது, என்கிறார்.

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து', எனபது குறள்.

உள்ளத்தில் ஊக்கம் கொள்ளுவதையே வலியுறுத்திய,
வள்ளுவத்தை அறிந்து, ஊக்கத்தை விடாதிருப்போம்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 158

யானை பற்றி...

யானையின் பலம், நாம் அனைவரும் அறிந்ததாகும்;
சேனையில் பலம் வாய்ந்தது, யானைப் படையாகும்.

இரு குறட்பாக்களில் யானையின் மாறுபட்டு உள்ள
இரு பண்புகளை உரைக்கின்றார், நம் திருவள்ளுவர்.

தன் உடல் முழுதும் அம்புகள் துளைத்தாலும், யானை
தன் உறுதியில் தளராமல் நிற்கும்; அதைப் போலவே,

தம் அழிவு நெருங்கி வந்தால்கூட, ஊக்கம் உடையவர்,
தம் நெஞ்சில் உறுதி கொள்வார்; கவலை கொள்ளார்.

'சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு', என்பது அந்தக் குறள்.

பெரிய உருவம் ஊக்கத்தைத் தராது; தாக்கும் புலியிடம்,
கூரிய கொம்புள்ள, பெரிய யானை, அச்சம் கொள்ளுமே!

'பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்', என்கின்றார்.

ஊக்கம் இருந்தால், எந்நிலையிலும் கவலை இல்லை;
ஊக்கம் கொண்டு, கவலையற்று உலகில் வாழ்வோம்!

:peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 159

மரத்துக்கு நிகரே....

மனிதருக்கு உயர்வு தரும் குணம் இல்லாதவரை,
மனித உருவில் உள்ள மரம் என்பார், வள்ளுவர்.

கண்ணோட்டம் நன்றாக இல்லாத மனிதர்களை,
மண்ணோடு இயைந்த மரம் என்று ஒப்பிட்டார்.

உயர்ந்த ஊக்கம் இல்லாத மனிதர்களை, மீண்டும்,
உயர்ந்து வளரும் மரத்திற்கு ஒப்பிடுகிறார், அவர்.

மனிதருக்கு வலிமையே ஊக்கம்; அது இல்லாதவர்
மனித உருவினால், மரத்திலிருந்து வேறுபட்டவர்!

'உரமொருவற் உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு', என்பது அந்தக் குறள்.

மனதில் ஊக்கம் மிகுதியாகக் கொண்டு, சிறப்புற்று,
உலகில் உயர்ந்த நிலையடைய, நாம் முனைவோம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 160

சோம்பலை ஒழிப்போம்!

ஒளி மிகுந்த விளக்கின் ஒளி மங்கிவிடும், அதன் மேல்
ஒளி மங்க வைக்கும் மாசு படிந்துவிட்டால்; அது போல,

உயர்ந்த குடிப் பெருமை என்னும் சிறந்த ஒளி விளக்கும்,
உயர்ந்த ஒளியை இழக்கும், சோம்பல் எனும் மாசினால்.

'குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்', என்று எச்சரிக்கின்றார்.

'மடி' என்றால் மலையாள மொழியிலும் சோம்பலாகும்;
'மடியன் மலை சுமப்பான்' என்பதாகப் பழமொழியுண்டு!

எந்த மொழியாயினும், சோம்பலைத் தாழ்வான குணமாக
அந்த மொழியில் சொல்லும் வழக்கம், நாம் காண்கிறோம்!

சோம்பலைச் சோம்பலாக எண்ணி, நல்ல முயற்சியுடன்,
சோம்பல் இல்லாது இருந்தால், குலம் பெருமை பெறும்!

'மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்', என்கிறார்!

உயர்ந்த குலப் பெருமை வேண்டினால், சோம்பல் இல்லாது,
உயர்ந்த இலக்குகளை அடைய, அயராது உழைத்திடுவோம்!

குறிப்பு:

எங்கள் முதுகலை முதல் வகுப்பில், பேராசிரியர் உரைத்த முதல் வாக்கியம்:

'Laziness begins with cobwebs but ends in iron chains!'


:spider:......:ballchain:
 
மடித் துணி!

மடி இல்லாமல், துவைத்து உலர்த்தி,

மடிக்காமல் கொடியில் விடுவதற்கு,

'மடியாத் துணி' எனப் பெயர் வராமல்,

'மடித் துணி' என்ற பெயர் ஏன் வந்தது?

மடி இல்லாமல், துணிந்து செய்வதாலா?

:biggrin1:
 
Back
Top