எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 118

பெரும் பேறு ...

பெரிய அறிஞர்களிடம் நட்புடன் பழகி, அவர்களைத் தன்
உயரிய சுற்றமாகக் கொள்வதற்கு வகை அறிய வேண்டும்!

அவர்களின் அண்மை கிடைப்பதால், நன்மை பெருகும்;
அவர்களின் அறிவுத் திறமும், நமக்கு என்றும் உதவும்!

'அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்', என்கிறார் அவர்.

வந்துள்ள துன்பங்களைக் களையவும், மேலும் துன்பம்
வந்துவிடாது தடுக்கவும் வல்லது, அறிஞர்களின் நட்பே!

'உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்', எனக் குறள்.

அரிய விஷயங்கள் பல உலகில் இருக்க, அவற்றில் மிக
அரிய ஒன்றாக இருப்பது, உயரிய அறிஞர்களின் உறவே!

'அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்', என்று மதிப்பீடு!

உயர்ந்த அரிய அறிஞர் பெருமக்களைத் தேடி, அவரின்
சிறந்த நட்பைப் பெற்று, நாமும் வாழ்வில் உய்வோம்!

:tea: . . . :angel:
 
தேவைகள்.....

ஆளும் பொறுப்பு ஏற்க, படிப்பும் அறிவுத் திறனுமா தேவை?
நாளும் அருகில் நின்று "ஓ" போடும் ஜால்ராக்கள் தேவை!

சொன்ன வேலை செய்ய, அஞ்சா நெஞ்சத் தொண்டர்கள்;
இன்னும் பணமூட்டை சேர்க்க, அடியாட்கள் குண்டர்கள்!

அறிஞரின் அண்மை வேண்டாம்; எதிர்ப்போரைத் தீர்க்க,
கொலைஞரின் அண்மை தேவை! இதுவே நாட்டின் நிலை!

வள்ளுவர் சொற்படி ஆட்சியாளர் எல்லாம் மாறிவிட்டால்,
கொள்ளுமே பாரதம், உலகில் உயர்ந்த மேன்மை நிலை!

உலகம் உய்ய வேண்டும், :hail:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 119

இடிப்பார் வேண்டும்!

தம் சுற்றிலும் உள்ளவர்கள் தம்மைப் புகழ வேண்டும்;
தம் சொற்களை அனைவரும் கேட்கவேண்டும், என்பது

மனிதரின் பொதுவான ஆசையே. இவ்வாறே இருந்தால்,
மனிதரின் குற்றங்களைக்கூட, எவரும் கூறவே மாட்டார்!

எல்லோரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்தபடி இருந்தால்,
சிலரேனும் தவறு செய்யவும் அஞ்சாதவராய் மாறுவார்!

இடித்துக் காட்ட நண்பர் இருப்பவர், தவறு செய்யமாட்டார்;
அடுத்து அவரைக் கெடுத்துவிடவும், யாரால்தான் முடியும்?

'இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்', என்பது கேள்வி!

தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர் இல்லாத மன்னனும்,
தவறுகள் செய்து, தானே அழிவைத் தேடிக்கொள்வான்!

அவனைக் கெடுக்க வேறு எவரும் தேவையில்லை;
அவனே தன் செயல்களால் அழிவான், என்கின்றார்!

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்', எனக் குறள்.

:boink: :bump2:
 
அறத்துப்பால் குறட்பாக்களை எழுதும்போது, பொருட்பாலில் என்ன எழுதுவது என வியந்தேன்!

அறத்துப்பாலுக்கு மேலாகவே பொருட்பாலில் கருத்துகள் உள்ளதை அறிந்துகொண்டேன்!

எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் வடித்த திருக்குறள் அமுதம்,

இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னும், வாழ்வுக்குப் பொருந்துவது அதிசயம்!

வள்ளுவரைப் போற்றும், :hail:
ராஜி ராம்
 
இடிப்பார் இல்லையே!

தலைவன் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாகத்
தலை வணங்கும், ஒரு பெரிய தொண்டர் கூட்டம்!

தலைவனை எதிர்ப்போர் இருந்தால், அவர்களின்
தலையை வாங்கும், ஒரு பெரிய குண்டர் கூட்டம்!

இடிப்பார் இல்லாது, தான்தோன்றித் தலைவர்கள்,
கெடுப்பார்; நாட்டை அழிவுப் பாதையில் சேர்ப்பார்!

வள்ளுவன் காட்டிய அறவழியைக் கொஞ்சம் ஏற்றுக்
கொள்ளும் மன நிலை, தலைவர்களுக்கு வருமா?

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 120

பெரியோர் நட்பு...

நம் வாழ்வு உலகில் சிறக்க, அறிவுடைய பெரியோர்
தம் அண்மையும், நல்ல நட்பும் நமக்குத் தேவையே!

சிறிதும் பொருள் முதலீடு செய்யாத எவருக்கும்
எளிதில் வாணிபத்தால் லாபம் வராது; அதுபோல

தம்மைத் தாங்க, நல்ல அறிவுடையோர் இல்லாதவர்,
தம் வாழ்வில் உயர்வை என்றும் எட்டவே இயலாது!

'முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை', என்பது குறள்.

நல்லோரின் நட்பு விடுத்துச் செல்லுவது என்பது,
பல்லோரின் பகைமை கொள்வதைவிடத் தீயது!

பகைவர் பலர் சூழ்ந்தாலும், நல்லோரின் அண்மை,
பகைவரை வெல்லும் ஆற்றல் அளிக்கும், உண்மை!

'பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்', என எச்சரிக்கை!

இறைவன் அளித்த மனித வாழ்வில் மேம்பட, என்றும்
நிறைவான அறிஞரின் தோழமை போற்றி, உய்வோம்!

:grouphug: . . . :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 121

சிற்றினம் தவிர்ப்போம்...

மக்களுடன் மாக்களும் மனித உருவில் வருவார், வலம்!
மாக்களைப் பிரித்து, அறிந்து ஒதுக்குதலே, என்றும் நலம்!

மனிதரில் மாக்களா என்று வியக்க வேண்டாம்! அவர்கள்
மனிதப் பண்பின்றி, விலங்கின் குணம் கொண்டோராவர்!

பெரியோர், அந்தச் சிற்றினம் அஞ்சி ஒதுக்குவார், என்றும்;
சிறியோர், இனம் இனத்தோடு என, கூடி மகிழ்வார், என்றும்!

'சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்', என ஒரு கணிப்பு!

தான் இருக்கும் நிலத்தின் தன்மையே, நீரின் தன்மை ஆகும்!
தான் கூடும் இனத்தின் தன்மையே, அவனின் தன்மை ஆகும்!

நல்லோருடன் நட்புக் கொண்டாலே, நல்லறிவு வந்துவிடும்;
அல்லோருடன் நட்புக் கொண்டால், தீயகுணங்கள் பெருகிடும்!

'நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு', என்று எச்சரிக்கை!

நல்லோர் துணை நாடி, அவரது நட்பால் உயர்ந்திடுவோம்;
அல்லோர் அண்மை தவிர்த்து, வாழ்வில் உய்ந்திடுவோம்!

:tea: . . . :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 122

மனத் தூய்மை...

மனமும், வாக்கும் நன்றாக இருக்க வேண்டுமானால், சேரும்
இனமும் நன்றாக அமைய வேண்டியது, இன்றியமையாதது!

நல்ல இனத்துடன் சேர்ந்துவிட்டால், தவறாது கிடைத்துவிடும்
நல்ல பெயரும், புகழும்; நல்ல மனம், சொற்கள் இருப்பதால்!

'மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்', என்று அறிவுரை!

மனம் தூய்மை உள்ளவர்களுக்கு, நற்பெயர் கிடைக்கும்; சேரும்
இனம் நன்றாக அமைந்தால், நன்றாகாத செயலே இருக்காது!

'மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை', என்கிறார் வள்ளுவர்.

நன்மக்கள் இனத்தில் சேர்ந்து, திருவள்ளுவரின் வாக்கின்படி,
நல்வாழ்வு, நற்பெயர் பெற்று, செல்லுவோம் உயர்வை நாடி!

:first: . . . :high5:
 
தீமை விலகிப் போகும்.....

மனம் தூயதாய் இருந்தால், சொற்கள் தூயதாய் ஆகும்;

சொற்கள் தூயதாய் இருந்தால், நல்ல நட்பு வந்து சேரும்;

நல்ல நட்பு வந்து சேர்ந்தால், வாழ்வில் இனிமை வரும்;

வாழ்வில் இனிமை இருந்தால், தீமை விலகிப் போகும்!

:director:
 
தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும்
தீயோர்கள் நிறைந்த உலகம் இது.

வரம் தந்தவர் தலையிலேயே கை
வைக்கும் விருகர் உள்ளனர் காண்!

'வைகைப் புயல்'களுக்கும் இந்த
வையகத்தில் பஞ்சம் இல்லை!

எச்சரிக்கையாக இருக்கச்சொன்னேன்
என்னிடம் கோபம் கொள்ளவேண்டாம்.

'முத்தமிழ் கலைஞர்'களாக இங்குள்ள
'வித்தகர்'களிடம் தேவை எச்சரிக்கை.

துன்பம் நமக்கு என்றால் மட்டில்லா
இன்பம் பிறர்க்கு என்றாகிவிடும்.

ஊர் இரண்டு பட்டால் அங்குள்ள
'கூத்தாடி'களுக்குக் கொண்டாட்டம்.

எளிமைப் படுத்தும் போது கலை
மலினப்படுமே என்று சொன்னேன்.

விளம்பியது என்ன என்று நீயே
விரைவில் விளங்கிக்கொள்வாய்!

நன்மை விரும்பிகளை என்றும் நாம்
உண்மையாகப் புரிந்து கொள்வோம்.

வாழ்க வளமுடனும் எல்லா நலமுடனும்,
உன் அன்புச் சகோதரி, :hug:
விசாலாக்ஷி ரமணி.
 
நல்ல நட்பு!

நல்ல நட்பு எனும் இதம் தரும் தூய தென்றல் காற்று,
மெல்ல மலரவேண்டும்! இல்லையேல் சூறாவளியே! :scared:

அன்புடன்,
ராஜி ராம் :cool:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 123

'ஆழம் தெரியாமல் காலை விடாதே' எனப் பழமொழி;
நாளும் இதை நினைவு கொள்ளுதல், மிகவும் நலம்.

ஒரு செயலைச் செய்தால் வரும் அழிவையும், பின்
வருவதையும் தெரிந்து, முடிவில் கிடைக்கும் அந்த

ஆக்கத்தையும், நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னர்தான்,
ஊக்கத்துடன் அந்தச் செயலைத் தொடங்க வேண்டும்.

'அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்', என எச்சரிக்கை!

தெரிந்து எடுத்த நல்ல நண்பர்களுடன், ஆற்றும் செயலை
அறிந்து, ஆராய்ந்து, சிந்தித்துச் செய்தல், நலம் பயக்கும்.

இப்படிச் சிந்தித்துச் செயல்படுபவருக்கு, அரிய செயலும்
எப்படியும் வெற்றியாகவே முடிந்துவிடும், என்கின்றார்!

'தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்று மில்', என அறிவிக்கிறார்!

நல்ல நட்புடன் சேர்ந்து, செயல்களை ஆராய்ந்து தெளிந்து,
நல்ல விளைவுகளைப் பெற, நாளும் நாம் முயலுவோம்!

:grouphug: . . . :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 124

செய்வதும் செய்யாததும்

செய்யக் கூடாத செயல்களைச் செய்துவிட்டாலும் கேடு;
செய்யக் கூடிய செயல்களைச் செய்யாது விட்டாலும் கேடு!

'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்', எனக் குறள்.

எந்தச் செயலும், நன்கு சிந்தித்த பிறகே செய்யவேண்டும்;
அந்தச் செயல் செய்தபின் சிந்தித்தல் என்பது, தவறாகும்!

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு', என்கிறார்!

எண்ணிய பின் செய்தால் மட்டும் போதாது; ஒருவருடைய
பண்பைத் தீதென அறியாது உதவினால், தீமை விளையும்!

நன்மை செய்தல் என்பது உயர்ந்த குணமே; ஆனாலும்கூட,
நன்மை செய்வது எவருக்கு, என ஆராய்தலும் தேவைதான்!

'நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை', என எச்சரிக்கை!

செய்ய வேண்டிய நற்செயல்களை, ஆராய்ந்து செய்வோம்!
செய்யும் உதவியும், ஒருவரின் பண்பு அறிந்து செய்வோம்!

:decision: . . . :peace:

 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 125

வலிமை அறிவோம்!

மன்னர்களையும், அவர்தம் பகைவரையும் குறித்து
எண்ணும்படிக் குறட்பாக்களை அமைத்திருந்தாலும்,

மனிதரையும், அவரின் எதிரிகளையும் குறித்தும், நாம்
இனிய இந்தத் திருக்குறளை, எடுத்துக் கொள்ளலாம்!

வலிமை அறிந்து மோதினால் மட்டுமே, எவருக்கும்
எளிமையாய் வெற்றிக் கனி கிடைத்துவிடும். அதற்கு

நான்கு வித வலிமைகளை ஆராய்ந்தும், அறிந்தும்,
நன்கு செயல்படுதல், இன்றியமையாததாகும். அவை,

தாம் செய்யும் செயலின் வலிமை; தம்முடைய வலிமை;
தம் எதிராளியின் வலிமை; இரு புற நண்பரின் வலிமை.

'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்', என அறிவுரை!

ஒரு செயலைப் பற்றி அனைத்தும் ஆராய்ந்து செய்தால்,
ஒரு போதும் அந்த முயற்சியால் முடியாதது இருக்காது!

'ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்', என்கிறார்.

நான்கு வலிமைகளை ஆராய்ந்து, அறிந்து, முயன்று,
நல்ல வகையில் அரிய செயல்களையும் செய்வோம்!

:spy: . . :decision: . . :thumb:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 126

தன் வலிமை அறிக...

அனுமனுக்குத் தன் வலிமை தெரியாதாம்! நண்பர்
அணுகிச் சென்று, அவரிடம் உரைக்க வேண்டுமாம்!

நம் வலிமை அறிந்துதான், எந்த ஒரு செயலிலும்
நாம் இறங்க வேண்டுமென அறிகிறோம். ஆனால்,

வலிமை கொஞ்சமாக இருந்தும், தற்பெருமையால்
வலியவர் என எண்ணி, செயல்களில் இறங்கலாகாது!

அவ்வாறு செயலைச் செய்பவர்கள் பலர், அச்செயலை
எவ்வாறு முடிப்பதென அறியாது, கைவிட்டு உள்ளார்!

'உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்', என்பது குறள்.

மற்றவர்களை மதிக்காமல், தன் இயல்பை அறியாமல்,
ஏற்றமாகத் தன்னை நினைப்பவர், விரைவில் கெடுவார்!

'அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்', என்று எச்சரிக்கை!

தற்பெருமை விடுத்து, மற்றவர்களை மதித்து, இயன்ற
நற்செயல்களை மட்டும் செய்து, வாழ்வில் சிறப்போம்!

:angel: . . :clap2:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 127

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு', என்பார்
அளவு அறிந்து செயல் புரிதலை வலியுறுத்துவார்!

வண்டியின் பாரம் தாங்கும் திறம் ஒன்று உண்டு;
வண்டியில் பாரம் அதிகரித்தால், அச்சு முறியும்!

அந்த முறிக்கும் அளவு, பெரிதாக இருக்க வேண்டாம்;
அந்த அளவு, மயில் இறகின் அளவானாலும் போதும்!

'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்', என எச்சரிக்கை!

அளவறிதலுக்கு இன்னொரு உதாரணம் உரைக்கிறார்.
அளவறியாது, நுனிக்கொம்பையும் தாண்டி, மரத்தின்

மேலே ஏற முயன்றால், என்ன நேரும் என அறிவோம்!
மேலே உள்ள வானுலகு செல்லுவதற்கு, அது வழியாம்!

'நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்', என்பது உண்மை.

ஒருவர் தன் திறம் அறியாது, அதிகமாக முயன்றால்,
மரத்தின் நுனியைத் தாண்டுபவரின் கதியே கிட்டும்!

:twitch:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 128

செலவின் அளவு ...

வருவாய்க்கு ஏற்ற செலவு செய்பவரே, உலகில் உய்வர்;
வருவாய்க்கு மீறிய செலவு, துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

தன் பொருளைப் போற்றிக் காக்க வேண்டிய எவரும்,
தன் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் அவசியமாகும்.

தனக்கு மிஞ்சினால் தான தருமம் என்பர் பெரியோர்;
தனக்கு நன்மை வேண்டுபவர், இதை உணர வேண்டும்.

ஈகை செய்தல் நல்லறமே; என்றாலும், தன்னால் இயன்ற
ஈகை செய்தலே நலம்; ஈதலும் செலவே ஆகுமல்லவா?

'ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி', எனக் குறள்.

வருவாய் சிறியதாக இருந்தாலும், தவறே கிடையாது;
வருவாய்க்கு மிஞ்சிச் செலவுகள் பெருகவே கூடாது.

'ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை', என அறிவுரை!

நம் வருவாயின் அளவைச் சரியாக உணருவோம்;
நம் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து, உய்வோம்!

:decision: . . . :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 129

அளவு அறிக ...

தாம் ஈட்டிய செல்வத்தின் அளவும், எதிர் காலத்தில்
தாம் ஈட்டப் போகும் செல்வத்தின் அளவும் அறிந்து,

தம் வாழ்வின் திட்டங்கள் செய்தால், நலம் வரும்;
தம் வாழ்வும் சீராகவே செல்லும் வகையைத் தரும்!

இல்லையேல், செல்வம் நிறைந்தது போலத் தோன்றி,
இல்லாது அனைத்துமே கெட்டுவிடும், என்கின்றார்!

'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்', என்பது குறள்.

பிறருக்கு பொருளுதவி செய்தல் என்பது, உயர்ந்தது;
பிறருக்கு அளித்து, தாமே இல்லாதவர் ஆகக்கூடாது!

தம்மிடம் உள்ளதை ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல்,
தம்மிடம் உள்ளது அனைத்தும் அளிப்பதும், தவறே!

'உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்', என்கிறார்.

அளவறிந்து ஈதல் செய்வோம்; அளவறிந்து வாழ்வோம்;
அளவறிதலை என்றும் நினைவு கொண்டு, சிறப்போம்!

:decision: . . . :first:
 
அளவறிதல் எல்லாவற்றுக்கும் தேவை.

அளவு கடந்த உணவும்,
அளவு கடந்த உழைப்பும்,

அளவு கடந்த ஆசையும்,
அளவு கடந்த பாசமும்,

அளவு கடந்த ஒளியும்,
அளவு கடந்த ஒலியும்,

அளவு கடந்த நுகர்தலும்,
அளவு கடந்த பகர்தலும்,

எள்ளளவும் நன்மை பயக்காது!
. . . :nono:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 130

காலம் அறியவேண்டும்...

எந்தக் காலத்தில் எந்தச் செயலைச் செய்வது என்ற
அந்த விஷயத்தை அறிவதே, உய்யும் வழியாகும்.

ஒரு காகம், வலிய கூகையைப் பகலில் வெல்லும்;
ஒரு அரசனும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுத்து,

பகைவரை அடக்க முயன்றால், எத்துணை வலிய
பகைவரையும் வென்றுவிடலாம், என்பது உண்மை!

'பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது', என்பது அந்தக் குறள்.

இரவு நேரம் சென்று கொன்று குவித்ததால், அந்த ஓர்
இரவிலேயே, பாண்டவரின் வாரிசுகள் அழிந்தனவே!

அரிய செயல் என்று ஏதேனும் இருக்குமோ, காலம்
அறிந்து செயலைப் புரிந்தால்? இந்தக் கருத்தையே,

'அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்', எனக் கேட்கிறார்.

நாமும் காலம் அறிந்து செயல்களைச் செய்வதை
நாளும் அறிந்து, உணர்ந்து, வாழ்வில் உயர்வோம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 131

உலகை வெல்லலாம்!

இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுதல் வேண்டும்;
இடம், காலம் அறிந்து, செயல்கள் புரிதல் வேண்டும்!

சரியான இடமும், காலமும் தெரிந்து செயல் புரிபவர்,
பெரிதான உலகை வேண்டினும், அது கைகூடிவிடும்!

'ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்', என்கிறார்.

நல்ல காலத்தை எதிர்நோக்கி இருப்பவர், கலங்காது,
தெள்ளத் தெளிந்த மனத்துடன், பொறுமை காப்பார்.

உரிய நேரத்தில், சரியாகச் செயல் புரியும் அவர்கள்,
பெரிய உலகையேகூட வென்று காட்டிவிடுவார்கள்!

'காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்,' எனக் குறள்.

சிறு இரு வரிகளில், எத்தனை பெரிய அறிவுரையை,
சரியாக உணர்த்தியுள்ளார், வள்ளுவப் பெருந்தகை!

சரியான காலம் அறிவோம்; சரியாகத் திட்டமிடுவோம்;
அரிதான செயல்களையும், எளிதாகச் செய்திடுவோம்!

:decision: . . . :high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 132

சரியான காலம்

கிடைப்பதற்கு அரிய காலம் வரும்பொழுது, விடாது,
செய்வற்கு அரிய செயல்களைச் செய்திடவேண்டும்.

'அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும்', என
அதிர்ஷ்டம் பற்றி, பழமொழி உள்ளதை அறிவோமே!

'எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்', என அறிவுறுத்துகிறார்!

ஒற்றைக் காலில் அசையாது குளத்தில் நிற்கும் கொக்கு,
சற்றும் மனம் தளராது, மீன் வருதற்குக் காத்திருக்கும்.

தன் அருகில் வருகின்ற மீனைக் கண்டவுடன், தவறாது
தன் அலகால் கொத்தி எடுத்து, பசி தீர்த்துக் கொள்ளும்.

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து', என்பது குறள்.

சரியான காலம் வரும்வரை, பொறுமையாகக் காத்து,
சரியாக செயல்களைப் புரிய அறிந்து, உயர்ந்திடுவோம்!

:thumb:
 
நாளும் நன்மை பயக்கும்.

காலம் அறிந்து செய்த எந்தச் செயலும்,
நாளும் நன்மை பயக்கும்; அந்தச் செயல்,

நம் எதிரியை வெல்லும் செயலாயினும்,
நம் வாழ்வை உயர்த்தும் செயலாயினும்!

'சின்ன வயதில் வந்துவிடும் திருமணமும்,
சின்ன அம்மையும் நலம் தந்திடுமே!' - இது

ஆங்கிலத்தில் சொல்லும் பழமொழி, என்று
அன்றே எம் அன்புத் தந்தை சொல்லுவார்.

இறைவனின் கைப்பாவைகளாகவே, நாம்
இறக்கும் காலம் வரையில் ஆடினாலும்,

நம் செயல்கள் புரிய, சரியான காலத்தை
நாம் தேர்ந்தெடுக்க, முயற்சி செய்வோம்!

:decision: . . . :first:
 
'சின்ன வயதில் வந்துவிடும் திருமணமும்,
சின்ன அம்மையும் நலம் தந்திடுமே!' -
Please madam, this does not compute for this மர மண்டை, please elaborate, I will be thankful....
 
Dear Prof,

Your Q as expected by me!

Our father, a medical practitioner used to mention that there is a saying (may not be a proverb?):

'It is better to 'get married' and 'have chicken-pox' at your young age!'

Just to add fun, I wrote பழமொழி! (எழுத்தாளரின் உரிமை?)

N.B: It seems that if an adult has chicken-pox, the ill effects are more! Please do not ask me 'what all ill effects?'

I am not a medico!! :noidea:

Regards..........
 
Back
Top