ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 16
வண்டின் ரீங்காரத்தைப் போல வம்புகள் இருக்க,
வந்துவிட்டாள் மணமகள், நாத்தனார் உடனிருக்க!
ஜொலிக்கும் கற்கள் மிளிரும் ரவிக்கை; விடியோ
ஒளிக்கு மின்னும் கூறைப் புடவை; அவள் அழகியே!
பாரம்பரிய வழக்கப்படி, தந்தையின் மடியில், தனது
பாரம் முழுதும் விழாதபடி, நாசூக்காய் அவள் அமர,
'மாங்கல்யம் தந்துனானே' மந்திரம் முழங்க, திரு-
மாங்கல்யம் அவள் கழுத்தில் ஏற, பூமாரி சொரிய,
வண்ணக் காகிதத் துகள்களை இளசுகள் வெடிக்க,
இன்னும் ஒரு ஜோடி இல்வாழ்வினில் நுழைந்தது!
கரம் குலுக்கக் கொஞ்ச நேரத்திற்கு 144 என்பதால்,
கரைந்தது கூட்டம்; பசித்த சிலர் பந்திக்கு முந்தினர்!
திருமணச் சடங்குகள் இன்னும் தொடரும்; சப்தபதி,
அருந்ததி பார்த்தல், பொரியிடல் என்று நிகழ்வுகள்.
மணமகளின் கால் விரலை மணமகன் பற்றியதும்,
கணமும் தாமதிக்காது சாஸ்திரிகள் கலாய்த்தார்!
'அம்பீ! இப்பவே பழகிக்கோ!' என்று அவர் உரைத்திட,
அம்பியுடன் சேர்ந்து அனைவரும் சிரித்து மகிழ்ந்திட,
இனிதே வைபவங்கள் நிறைவேறின. சம்பந்திகளும்
இனிய பரிசுகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்!
தொடரும் ..........................