திருவிளையாடல்கள்.
முதற்பகுதி.
மதுரைக்காண்டம்.
# 11. உக்கிரவர்ம பாண்டியன்.
சோம சுந்தர பாண்டியன் காலத்தில்,
சோம குலத்தின் பெருமை தழைத்தது.
மகனை விழைந்த தடாதகை பிராட்டிக்கு,
மகனாக முருகனையே அளித்தார் சிவன்!
கர்ப்பம் தரித்தாள் தடாதகைப் பிராட்டி,
கர்ப்பிணிப் பெண்கள் பிறரைப் போலவே!
காலம் கனிந்தது அவள் குழந்தையைப் பெற,
ஞாலம் மகிழ்ந்தது திரு முருகனைப் பெற்று!
திங்கட் கிழமையில், சுப முஹூர்த்ததில்,
திருவாதிரை நட்சத்திரம் கூடிய வேளையில்,
திரு முருகனே வந்து உலகினில் பிறந்தான்
திருமகள் தடாதகையின் மணி வயிற்றில்!
இளம் சூரியனைப் போல் ஒளி வீசிடும்
தளிர் மேனி கொண்டு விளங்கினான்.
மதுராபுரியில் பொங்கியது மங்கல விழா,
மன்னர்கள், ஞானிகள், ரிஷிகள் கூடிப் புகழ!
பொன்னும் பொருளும் வழங்கப் பட்டது
மன்னனால் அவனது குடிமக்களுக்கு!
பனி நீரும், சந்தனமும், கஸ்தூரியும் கூடி,
இனியில்லை இதுபோன்ற சுவர்க்கம் என,
ஜாதகரணம் செய்தான் ஞானக் குமரனுக்கு,
நாமகரணம் செய்தான் உக்ரவர்மன் என்று!
ஐந்து வயதிலேயே பூணூலை அணிவித்து,
ஐயம் திரிபறக் கற்பித்தான் வேதசாஸ்திரம்.
படைகளப் பயிற்சி, அதில் நல்ல தேர்ச்சி!
பரியேற்றம், கரியேற்றம், தேரோட்டம்,
எட்டு வயதிலேயே கற்றுத் தேர்ந்தான்
எட்டெட்டுக் கலைகளையும் அக்குமரன்!
பாசுபதாஸ்திரம் மட்டும் கற்றான் தன்
பாசம் மிகுந்த தந்தையார் மன்னனிடமே!
வயதுக்குத் தகுந்த வளர்ச்சியும், வீரமும்,
வயதுக்கு மீறின வேகமும், விவேகமும்!
முப்பத்து இரண்டு லட்சணங்களும் கூடி
அப் பதினாறு வயதுக் குமரனிடம் மிளிர,
திருமணம் செய்வித்து முடிசூட்டிவிட
விருப்பம் கொண்டான் பாண்டியமன்னன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.



