திருவிளையாடல்கள். முதற்பகுதி.
மதுரைக்காண்டம்.
9. ஏழு கடலை அழைத்தது.
சோமசுந்தர பாண்டியனின் நல்லாட்சி
நேமம் தவறாமல் நடந்து வருகையில்;
ஞானிகள், முனிவர், அறவாழி அந்தணர்
ஞானக் கடலினைக் காண வருவதுண்டு!
பெருமானைக் கண்ட பின்னர் கௌதமர்
காணவிழைந்தார் காஞ்சனமாலையை;
பெருமாட்டி தவ சீலரிடம் வினவினாள்,
“பேண வேண்டியவை எவை பிறப்பறுக்க?”
“இறைவியின் தாயார் ஆவீர் நீவீர்!
இறைவனின் அருமை மாமியும் கூட!
நீர் அறியாதது என்று ஒன்று உண்டோ?
தெரிந்ததைக் கூறுகின்றேன் உங்களுக்கு!”
மனிதன் செய்யும் செயல்கள் எல்லாம்
மனம், மொழி, மெய்யென மூவகைப்படும்;
மனம், மொழி, மெய்களின் தூய்மையே
மண்ணுலகில் மாண்புடைய தவம் ஆகும்.
தானம், தருமம், பொறுமை, உண்மை,
தியானம், உயிர்களிடம் கொண்ட அன்பு,
புலனடக்கம் இவைகளே இவ்வுலகில்
புகழ் பெற்றவை ‘மானச தவம்’ என்று!
பஞ்சக்ஷரத்தை ஜெபித்தல், பாடல் பாடுதல்;
நெஞ்சார ருத்திரஜபம் செய்தல், செய்வித்தல்;
தருமத்தை உரைத்துக் கருமத்தை உணர்த்தல்,
பெருமை பெற்ற ‘வாசிக தவம்’ எனப்படும்!
கைகளால் பூசித்தல், கால்களால் வலம் வருதல்,
மெய் பணிந்து தொழுதல், தலை வணங்குதல்,
தீர்த்த யாத்திரை சென்று வருதல், மற்றும்
தீர்த்தங்களில் புனித நீராடுவது ‘காயிக தவம்’.
மானசம், வாசிகம், காயிகம் மூன்றிலும்
மாறாப் புகழ் வாய்ந்தது காயிகம் ஆகும்.
நதிகள் சங்கமிக்கும் கடலில் நீராடுதல்,
நதி நீராடலிலும் உத்தமமானது தாயே!”
காஞ்சனமாலையின் உள்ளத்தில் ஓராசை
பஞ்சில் நெருப்பெனப் பற்றிக்கொண்டது!
கடல் நீராடிக் கர்மங்களைத் தொலைத்திடும்
உடல் தவத்தை உடனே செய்ய வேண்டும்!
அருமை மகளிடம் தன் உள்ளக்கருத்தை
மறைக்காமல் எடுத்துக் கூறினாள் அன்னை.
மகளோ தன் மணாளனிடம் கூறி அன்னையின்
தகவுடைய கடலாடலை மிகவும் விழைந்தாள்.
“ஒரு கடல் என்ன? உன் அன்னைக்காக
எழச் செய்வோம் இங்கு ஏழு கடலையும்!”
இறைவன் விழைந்தால் எதுவும் நடக்குமே!
குறைவின்றி பொங்கியது கடல்நீர் அங்கே!
கிழக்கே அமைந்த ஒரு அற்புத வாவியில்
எழும்பிப் பொங்கின ஏழு கடல் நீரும்!
ஏழு வண்ணங்களில் பொங்கிய ஏழு கடல்
முழுவதும் கலந்து வெண்ணிறமடைந்தது.
வானவில்லின் வர்ண ஜாலம் அறிவோம்!
வாவியில் நிகழ்ந்தது மாற்று வர்ணஜாலம்.
புண்ணிய நதிகள் அனைத்தின் தன்மையும்,
தண்மையும் வாவியில் ஒன்றாய் விளங்கின!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.