திருவிளையாடல்கள். முதற்பகுதி. மதுரைக்காண்டம்.
# 1 இந்திரன் பழி தீர்ந்தது.
# 1 (c). கடம்பவனம்.
மீண்டும் தொடங்கித் தொடர்ந்தது அங்கே
சண்ட மாருதம் போன்ற ஒரு கடும் யுத்தம்.
திடீரெனக் கடலில் புகுந்துவிட்டான் வீரன்,
நொடியில் மறைந்து விட்டான் விருத்திரன்.
பிரமித்த இந்திரன் செய்வதறியாமலே
பிரமனையே நாடி ஓடினான் மீண்டும்!
“குறுமுனி அகத்தியர் பெருமானிடம் நீ
பெறுவாய் இத்துயர் தீர்க்கும் நல்லுதவி!”
குறுவடிவினர் ஆயினும் அருந்தவ முனிவர்,
பெருவலிவுடையவர், திருமால் போன்றவர்;
உள்ளங்கையில் அள்ளி எடுத்த முனிவர் அத்
தெள்ளிய கடல் நீரைப் பருகியே விட்டார்.
அலைகடலின் அடியினில் அமைந்த ஒரு
மலையின் உச்சியில் இருந்து தவம் செய்த,
விருத்திரன் தலையை அறுத்துத் தள்ளினான்
பெருமை மிகு வச்சிராயுதத்தால் இந்திரன்!
பற்றியது மீண்டும் பிரம்மஹத்தி தோஷம்!
வற்றியது இந்திரனின் வலிவும், பொலிவும்;
மறைந்தன அவன் அழகும், பெருமையும்,
கரைந்தன அவன் வடிவும், இளமையும்!
தன்னை மறைத்துக் கொண்டான் நாணத்தால்,
தண்டில், ஒரு தாமரையில், ஒரு நீர் நிலையில்.
எத்தனை காலம் உருண்டு ஓடியதோ அறியோம்!
எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தனவோ அறியோம்!
“மன்னன் இல்லாத நாடா?” என்று உருவாக்கினர்
மண்ணுலக நகுஷனை விண்ணுலக வேந்தனாக!
பெண்ணாசையால் மதியிழந்து குறுமுனிசாபத்தால்
மண்ணுலகில் மலைப்பாம்பாய் வீழ்ந்தான் நகுஷன்.
மனம் கனிந்த வியாழபகவான் அழைத்தார்.
மனம் வருந்திய இந்திரனுக்கு உரைத்தார்.
” பூவுலகம் செல்வாய்! ஈசனைப் பூசித்து
புதிய சக்தி பெற்று மீண்டும் வருவாய்!”
கயிலையில் துவங்கினான் பூசனையை;
காஞ்சி வந்து விட்டபோதும் மாற்றமில்லை!
பிரம்மஹத்தி தோஷம் விலகவும் இல்லை
அரனின் அருளாசிகள் கிடைக்கவும் இல்லை.
கடம்ப வனத்தை அடைந்தான் இந்திரன்;
அடைந்தபோதே நடந்தது ஓர் அற்புதம்!
பிரம்மஹத்தி தோஷம் விலகிச் செல்லவே
பிரமிக்க வைக்கும் ஒளியினை அடைந்தான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.