23. குமார தாரிகை
அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.
வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!
கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!
துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?
தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!
முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!
“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!
வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”
மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”
“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!
சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.
“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”
நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!
நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!
காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.
“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.
முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.