#15b. திருமணப் பேச்சு
"உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!
மஹா லக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;.
மஹா விஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.
சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்."
தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.
"கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.".
குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
"குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!
வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.
வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!
நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!"
பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.
ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.
நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்,
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.
பொன்னும் மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
"பின்னர் வரும் திருமணவோலை!" என்றாள்.
ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;
அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.
வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி