1. (# 20 a). கிரௌஞ்ச மலை.
படையுடன் சென்ற முருகனுக்குத்
தடையாக நின்றது கிரௌஞ்ச மலை.
சரியான சமயத்தில் வந்தார் அங்கே
திரிலோக சஞ்சாரியாகிய நாரதர்.
"குறுமுனி சாபம் பெற்றது இம்மலை.
நிறைந்த வஞ்சகம் கொண்டது இது.
தாரகன் என்னும் சூரன் தம்பி-மலைச்
சாரலில் உள்ளான் மாயாபுரியில்!
ஆனைமுகம் கொண்டவன், பலவான்,
ஆழிப்படையையே அணிந்திருப்பவன்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தாரகனை ஒழித்தால் சூரனை அழிக்கலாம்!"
நல்ல யோசனையைக் கூறினார் நாரதர்;
வெல்லும் வழியை வெளிச்சம் இட்டார்.
வீரபாகுவுக்குக் கந்தனின் ஆணை இது,
"சூரன் தம்பியை வென்று வருவாய்!"
நூறு ஆயிரத்து ஒன்பது வீரர்களுக்கும்
தேர்கள் செய்தான் தெய்வத் தச்சன்.
பூதங்கள் சென்று நுழைந்தன நகரில்,
பூதங்கள் பொருதனர் அவுணர்களுடன்!
தூதர்கள் விரைந்தனர் செய்தியுடன்,
தாரகனிடன் உரைத்தனர் விரிவாக.
செய்தி கேட்ட தாரகன் சீறினான்,
"மெய்யாகவே நம்மை வெல்லுவானா?"
ஆணை இட்டான் படைகளைத் திரட்ட.
ஆனை முகத்தான் ஏறினான் தேரினில்.
சுழன்றன குடைகள்,வெண்சாமரங்கள்;
ஒலித்தது வலம்புரியும், போர்முரசும்;
ஆனை, குதிரை, தேர், படைகளுடன்
ஆனைமுக அசுரன் நகர் நீங்கினான்.
கடலோடு கடல் கலந்தது போல அங்கு
படையோடு படை கலந்து பொருதது.
குருதியாறு பொங்கிப் பெருகியது!
பெருத்த சேதம் இரு படைகளுக்கும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.