யோகமாயையைக் கொண்டு வருவது.
ப4வந்தமயமுத்3வஹன் (39:1)
யதுகுல சிரேஷ்டரான வசுதேவர் தங்களை எடுத்துக்கொண்டு போகும்போது யமுனை நதி ஆகாயம் வரை உயர்ந்து எழுந்த ஜலப் பிரவாஹத்துடன் கூடி இருந்தது. ஆனால் அந்த ஜலப் பிரவாஹம் இந்திர ஜாலத்தால் தோன்றியது போன்றே அக்கணமே வெறும் கணுக்கால் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஆச்சரியம்!
ப்ரஸுப்த பசு'பாலிகாம் (39:2)
இந்த வசுதேவர், நன்கு நித்திரை செய்யும் கோப ஸ்த்ரீக்களையும், மெதுவாக அழுகின்ற பெண் குழந்தையையும், திறக்கப்பட்ட கதவுகளையும் உடைய நந்தகோபருடைய வீட்டுக்குச் சென்றார். தங்களைப் பிரசவப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்த கபடப் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டுமிக வேகமாகத் தம் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.
ததஸ்த்வத3னுஜாரவக்ஷபித (39:3)
தங்கள் தங்கையான யோகமாயையின் அழுகையால் நித்திரை கலைந்து, வேகமாக ஓடிய சேவக சமூஹம் கம்சனுக்குப் பிரசவ சமாச்சாரத்தை அறிவித்தது. வருத்தம் அடைந்தவனாக , தலை விரிகோலமாக கம்சன் ஓடிவந்தான். சந்தோஷம் அடையாத அவன் கண்டது இரங்கத் தக்க தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தையை.
த்4ருவம் கபடசா'லினோ (39:4)
இந்தக் கன்னிகை கபடசாலியாகிய மதுசூதனனின் மாயையாக இருக்கவேண்டும் என்று எண்ணிய கம்சன், இளம் தங்கை தன் கைகளால் அணைத்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தையை, தாமரைக் குளத்தின் நடுவில் இருக்கும் ஒரு தாமரைத் தண்டைப் பிடுங்கும் யானையைப் போல் பிடுங்கினான். உடனேயே ஒரு கற்பாறையில் மாயாதேவியை ஓங்கி அடித்தான்.
ததோ ப4வதுபாஸக: (39:5)
அப்போது தங்களை உபாசிக்கும் பக்தன் யமபாசத்தில் இருந்து விடுபடுவது போன்றே விரைவாக யோகமாயை கம்சனின் கைகளில் இருந்து விடுபட்டாள். பூமிக்கு வராமலேயே
வேறு ஒரு ரூபத்தை அடைந்தாள். எட்டுக் கரங்களையும் அவற்றில் விளங்கும் அற்புத ஆயுதங்களுடனும் அவள் ஆகாயத்தில் ஆச்சரியமயமாக விளங்கினாள்.
ந்ருச'ம்ஸதர கம்ஸ (39:6)
"மிகக் கொடியவனான ஹே கம்சனே! என்னைக் கொல்லுவதால் உனக்கு என்ன லாபம்?
உன்னைக் கொல்பவன் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்திருக்கிறான். உன்னுடைய நன்மையைப் பற்றிச் சிந்திப்பாய்!" துஷ்டனான கம்சனிடம் இவ்வாறு கூறிவிட்டு, தேவ கணங்களால் துதிக்கப்பட்டவளாக, அங்கிருந்து அகன்று அனேக ஆலயங்களைச் சென்று அடைந்தாள் யோக மாயை.
ப்ரகே3புனரகாத்மஜாவசன (39:7)
கம்சன் மறுநாள் காலையில் யோகமாயையின் வசனத்தை பிற அசுரர்களுக்குச் சொன்னான்.
துரபிமானம் உடைய பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள் தங்களைக் கொல்ல விரும்பி, பிற குழந்தைகளைக் கொன்று குவித்து, பயமற்று உலகில் திரிந்தனர். கருணை அற்றவர்களால் என்ன தான் செய்ய இயலாது?
தத: பசு'பமந்தி3ரே (39:8)
முக்தியளிக்கும் கண்ணனே! அதன் பிறகு நந்தகோபன் வீட்டில் நந்தனின் மனைவி யசோதையின் பிரசவப் படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை உதைத்துக் கொண்டு நீங்கள் அழுதீர்கள். நித்திரை விட்டு எழுந்த ஸ்திரீக்கள் புத்திரப் பேற்றை எல்லோருக்கும் எடுத்துக் கூற, கோகுலம் முழுவதுமே ஆனந்த வெள்ளத்தில் பரவசம் அடைந்தது அல்லவா?
அஹோ க2லு யசோத3யா (39:9)
புதுக் காயாம்பூ போல் மனத்தைக் கவருகின்ற தங்கள் மேனியை அருகில் முதல் முதலில் பார்த்து; தன் ஸ்தனங்களைப் பருகச் செய்து; சந்தோஷமாக உங்கள் மனோஹரமான சரீரத்தைத் தொடும் பாக்கியம் பெற்ற யசோதை; உலகில் உள்ள அத்தனை புண்ணிய சீலர்களையும் ஜெயித்துவிட்டாள் அல்லவா? என்ன ஆச்சரியம்!
ப4வத் குச'ல காம்யயா (39:10)
நந்த கோபரும் ஆனந்த பரவசத்தில் தங்களுடைய க்ஷேமத்தை விரும்பி பிராமணர்களுக்கு எதைத்தான் தரவில்லை? அவ்வண்ணமே மற்ற இடையர்களுக்கும் என்ன மங்கலத்தைத் தான் செய்யவில்லை. மூவுலகங்களிலும் மங்கலங்களைச் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணா காப்பாற்று!