கவிதை வடிவத்தில் சந்தம் தான் உயிரானது. சந்தம் இனிதாக அமையவேண்டுமானால் அசைகளும் சீர்களும் சரியாக இலக்கணவரம்புக்கு உட்பட்டு அமையவேண்டும். பாடப்படும் பொருளுக்குத்தக்கவாறு வல்லியல், மெல்லியல் எழுத்துக்கள் அமைந்திருக்கவேண்டும். நல்ல ஒரு கவிஞனுக்கு இவையெல்லாம் பெருமுயற்சி ஏதும் இன்றி இயற்கையாகவே எழுதும் கவிதைகளில் அமைந்து விடுகின்றன. இது கைவராதவர்கள் எழுதுவதெல்லாமே புதுக்கவிதை தான்.
ஊருக்கு வந்தேன் உன்னைக்கண்டேன், பெயரைக்கேட்டேன் என்னை இழந்தேன் என்ற இதை இரண்டாக வெட்டிப்போட்டு புதுக்கவிதை என்று பெயர் சூட்டி கவியரங்கத்தில் வாசிக்கலாம். அது உரைநடையில்லை என்று
சத்தியம் கூடச்செய்யலாம். தமிழறிந்தவர்களிடம் இது எடு படாது. "தானைத்தலைவரே! தகுதி சிறிதும் இல்லாத்தருக்கர் கூட்டத்தை இடுப்பொடித்துப்போட படைகளைக் கூட்டுங்கள்" என்று அடுக்குமொழியில் நீட்டி முழக்குவது போல எழுதுவதெல்லாம் கவிதையாகி விடாது. உரைநடையையே நயம்பட எழுதினால் அது தானே சந்தத்துடன் கூடிய ஒரு நல்ல கவிதையாகிவிடும்.
கவிஞன் தனிக்குறில், தனிக்குறில்+ஒற்று, தனி நெடில், தனி நெடில்+ஒற்று,காய்ச்சீர்,கனிச்சீர் என்று பிரித்துப்பார்த்து கவிதை எழுதுவதில்லை. அவன் சந்தத்தைமட்டும் மனதில் கொண்டு கருத்தைச் சொற்களாக்கும் போது அவை தானாகவே இலக்கணவரம்பு மீராத அழகிய கவிதையாக வடிவெடுத்து விடுகின்றன.
ஒருகைதேர்ந்த சைத்திரிகன் வரையும் கோடுகள் அளவுகோல்கொண்டு அளந்து வரையப்படுவதல்ல. ஆனால் அவை அளவாகவும் அழகாகவும் இயற்கையாகவே அமைந்து விடுகின்றன. இனிய சந்தத்துடன் ஆழமான கருத்தும் சேர்ந்திடும் போது கவிதை அழகாக அமைந்துவிடுகிறது. உரைநடை உரைநடையாகவே இருந்துவிட்டுப்போகலாம். அதைப்புதுக்கவிதை என்றபெயரில் வெளியிடும்போது அந்தக் "கவிஞன்" நான் ஒரு கவிஞன் என்று கூறிக்கொள்கிறானே தவிர இதோ என் கவிதை என்று கூறிக்கொள்வதாகத்தெறியவில்லை.
இது புதுக்கவிதைகள் பற்றிய என் கருத்து. இந்தத்தளத்தில் பதிவாகும் பல புதுக்கவிதைகளையும் பாரா பாராவாக என்னால் அப்படியே உரைநடையாக ச்சேர்த்து எழுத முடியும். அவற்றில் கவிதையைத் தேடத்தான் வேண்டும். ஒரு சீத்தலைச்சாத்தன் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்ட்டம் தான்.