14f. கணபதி
இந்திரன் புலம்பினான் துயர்களை
நொந்த உள்ளத்துடன் பிரமனிடம்.
நான்முகன் கூறினான் தேவர் துயரை
நாரணன் உள்ளத்தை உருக்கும்படி!
சென்றனர் அனைவரும் கயிலை மலை,
செப்பினர் தம் துயர்களைச் சிவனிடம்.
“வருந்த வேண்டாம் நீங்கள் எவரும்
பெருந்துயர் நீங்கும் என் திருமகனால்”
சிவனும் உமையும் சென்றனர் ஒருநாள்
சிறந்த ஓவியங்கள் உள்ள ஓர் இடத்துக்கு.
பிரணவ எழுத்துத் தோன்றியது தேவிக்கு
இரண்டுருவாக யானை வடிவாக இணைந்து!
திங்களணிச் சடையும், மூன்று கண்களும்,
தொங்கும் வாயும், ஐந்து கரங்களும் கொண்டு!
யானை முகப் புதல்வன் தோன்றி விட்டான்
ஏனைய தெய்வங்களுக்குத் தலைவனாக!
அறிவுக்கு அறிவாகி எங்கும் நிறைந்தவன்;
அறிவுக்கு அப்பாற்பட்டு என்றும் நிற்பவன்.
அருளே வடிவாகி உருவான ஒரு மகன்;
பொருள் ஆவான் நான்கு மறைகளுக்கும்!
சிவனையும், உமையையும் வணங்கிய
அவனை வாழ்த்தினர் தாய் தந்தையர்.
“எப்பணி இயற்றுமுன் எவ்வித இடையூறும்
அப்பனே உன்னை நினைந்தால் அகலட்டும்!
கணங்களுக்கும் தேவர்களுக்கும் நீயே
கணாதிபதியாக விளங்கி வருவாய்!
கரிமுக அவுணனை அழித்து விடு!
திருமால் சாபத்தை மாற்றி விடு!”
கோவிலில் எழுந்தருளினர் இருவரும்
கோவிலின் வாயிலில் இருந்தார் கணபதி.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.