எண்ண அலைகள்....

DSCN5856.jpg



This picture is a shot in my digicam, on the Full moon day, March 2011,

when the moon was nearest to the earth and appeared bigger! :photo:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 220

போற்றும் வகை நட்பு!

நட்பில் உரிமை மீறாது பழகுவது மிகவும் சிறந்தது;
நட்பின் பெருமைகளில் முதன்மையானது இதுவே!

உரிமை கெடாமல் தொன்று தொட்டுப் பழகிய நட்பு
உறவை, விடாது தொடர்பவரை, உலகம் போற்றும்.

'கேடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு', என்பது குறட்பா.

நீண்ட காலம் பழகிய நண்பர் தவறு செய்தாலும், தாம்
கொண்ட அன்பை நீக்காது உள்ளவர்கள் இருப்பார்கள்.

இத்தகைய தன்மை உள்ளவரை, நண்பர் மட்டுமல்லாது,
எத்தகைய பகை உள்ளவரும், பாராட்டவே விழைவார்!

'விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்', எனக் குறட்பா.

உலகமே போற்றும், பகைவரும்கூடப் போற்றும் நட்பை
உலகிலே நாம் கொண்டு, உயர்வு அடைய முயல்வோம்!

:tea: . . :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 221

பண்பிலார் நட்பு!

பண்பாளரின் நட்பை நாடச் சொல்லும் திருவள்ளுவர்,
பண்பில்லாதவரின் நட்பு தீயது என்று எச்சரிக்கின்றார்!

அன்பு மிகுதியால் மூழ்கடிப்பதுபோலத் தோன்றினும்,
பண்பு இல்லாதவர் நட்பு, பெருகாது குறைவதே இனிது!

'பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது', என அறிவுறுத்தல்.

தமக்குப் பயன் கிடைக்கும்போது நட்புடன் இருந்துவிட்டு,
தமக்குப் பயன் இல்லாத பொழுது, சிலர் பிரிந்துவிடுவார்!

இது போன்ற தன்மை கொண்டவர்கள் நட்பு, ஒருவருக்கு
இருந்தால் என்ன, இல்லாவிடில் என்ன, எனக் கேட்கிறார்.

'உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்', என்பது அந்த வினா!

மேலும், பண்பிலார் நட்பை மிகக் கடிந்து உரைப்பதற்கு,
மேலும் இரண்டு ஒப்புமைகளைக் கூறுகின்றார் அவர்.

தம் பயன் வேண்டி நட்புக் கொள்ளுபவர் நட்புக்கு இணை,
தம் உடல் விற்கும் மகளிரும், கள்வருமே என்கின்றார்!

'உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்' என்று,

பண்பிலார் நட்பின் சிறுமையைத் தெளிவாக்குகின்றார்!
பண்பிலார் நட்பை என்றும் நாடாது, உலகில் சிறப்போம்!

:thumb:
 
நெளிவு சுளிவுகள்!

நட்பை எத்தனை விரிவாக ஆராய்ந்து கூறுகின்றார், வள்ளுவர் அவர்கள்!

நட்பில் இத்தனை நெளிவு சுளிவுகள் உள்ளதை, இப்போதுதான் அறிந்தேன்!

:decision: . . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 222

இந்த வகை வேண்டாம்...

பண்பில்லாதவர் நட்பை நம்பிக்கொண்டு நம்முடைய
அன்பைக் காட்டுவது வீணான செயலே ஆகுமல்லவா?

போர்க்களத்தில் குதிரை வீரன் ஏறும் குதிரை, அந்தப்
போர் முடியும்வரையில், அவனைத் தாங்க வேண்டும்.

அறிவில்லாத அது, களத்திலே வீரனைக் கீழே தள்ளி,
தறி கெட்டுத் தன் உயிர் தப்ப ஓடினால், என்ன பயன்?

பண்பில்லாதவர் அதுபோல் நெருக்கடி நேரம் தப்புவார்;
அன்பில்லாத அவர் நட்பைவிடத் தனிமையே மேல்!

'அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை', என்பது அவர் வாக்கு!

நல்ல நண்பர் பாதுக்காப்புத் தரும் தன்மை உள்ளவர்;
நல்ல மனம் இல்லா நண்பர் பாதுகாப்பே தரமாட்டார்.

அத்தகைய நட்பை ஏற்பதைவிட, ஏற்காததே நலம் என,
அருமையான ஒரு குறளில் வள்ளுவர் உரைக்கின்றார்.

'செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று', என்பது அறிவுரை!

:decision: . . . :bump2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 223

கோடியும், பத்துக் கோடியும்!

அறிவில்லாதவர் நட்பு ஒருவகைத் துன்பம் எனின், நல்ல
அறிவுள்ளவரிடம் கொண்ட பகை, வேறு வகைத் துன்பம்!

ஒரு அறிவில்லாதவரின் நட்பைவிட, அறிவுள்ளவரிடம்
வரும் பகை, கோடி மடங்கு மேலானது என்கிறார், அவர்!

'பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்', என்பது அந்தக் குறள்.

சிலர் சிரித்துப் பேசியே நண்பராய் நடிப்பார்; இதை விட
சில பகைவரால் வருவன, பத்துக்கோடி நன்மையாகும்!

'நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்', என எச்சரிக்கை!

அறிவில்லாதவர் நட்பைப் பெற்றுப் பெரும் அல்லற்படாது,
திருவள்ளுவரின் வழிகாட்டலில் நடந்து, சிறப்புறுவோம்!

:ballchain: ... :nono:
 
கோடிகள்.....

கோடிகள் என்றால் மிகப் பெரிய தொகை என்றும், பத்துக்
கோடிகள் என்றால் மிக மிகப் பெரிய தொகை என்றும்,

இருந்திருக்கும் திருவள்ளுவர் காலத்தில்! ஆனால், இன்று
திருட்டுப் பணம் புழங்கும் காலத்தில், கோடிகள் 'ஜுஜுபி'!!

:pop2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 224

எவரை விட்டு விலகவேண்டும்?

எந்த வித நட்பைக் கைவிட வேண்டும் என்று உணர்த்த,
இந்த அதிகாரத்தில், மூன்று குறட்பாக்கள் அளிக்கிறார்!

நண்பர் நல்லவராயின், நம் செயல்களுக்கு உதவி புரியும்
தன்மை உடையவராக இருக்க வேண்டும்; ஆனால், நாம்

நிறைவேற்றக் கூடிய செயலையும், சிறந்த முறையில்
நிறைவேற்ற விடாது தடுக்கும் தீயவர் நட்பு, தீயதாகும்.

இதுபோன்ற நட்பைத் தொடராமல், அவரே அறியாமல்
மெதுவாக விட்டுவிட வேண்டும், என்கின்றார் அவர்!

'ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்', என்பது குறள்.

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவர் நட்பு,
எள்ளளவும் பயனின்றிக் கனவிலும் துன்பமே தரும்!

'கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு', என்கின்றார்.

தனியாகச் சந்திக்கும்போது, இனிமையாகப் பேசிவிட்டு,
இழிவாகப் பொது மன்றத்தில் பேசுவோரின் தீய நட்பு,

நம்மை அணுகாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்று
நம்மை எச்சரிக்க, இதோ ஒரு குறட்பாவைத் தருகிறார்!

'எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மற்றிற் பழிப்பார் தொடர்பு', என்பது அந்தக் குறள்.

:decision:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 225

உள்ளொன்று! புறமொன்று!

தீய நட்பைப் பற்றி உரைத்தது போதவில்லை என்பது போல,
கூடா நட்பைப் பற்றி அடுத்த அதிகாரத்தைப் படைக்கின்றார்!

தம் மனதார நட்புக் கொள்ளாது, வெளிவேடம் போடுபவர் நட்பு,
தக்க சமயம் இரும்பைத் துண்டாக்கும் பட்டடைக்கல் போன்றது!

'சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு', என எச்சரிக்கை!

உற்றாராக இல்லாமல், உற்றார்போல நடிப்பவர் நட்பு, நற்பண்பு
சற்றும் இல்லாது, நற்பண்பு உள்ளவர்போல் காட்டிக் கொள்ளும்

விலை மகளிரின் மனம் போலவே, உள்ளும், புறமும் வேறுபட்ட
நிலை கொண்டு இருக்கும் என்று, ஒப்புமையுடன் உரைக்கின்றார்!

'இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்', என்பது அந்தக் குறள்.

பகை உணர்வு மிகவும் கேடு தருவது ஆகும் என்று அறிவிக்கும்
வகையாக, இன்னொரு குறட்பாவைத் தருகின்றார், வள்ளுவர்.

அரிய நூல்கள் பல கற்றபோதிலும், பகை உணர்வு கொண்டவர்,
அரிதே நல்லவராக மாறுவது, என்றும் அவர் எச்சரிக்கின்றார்!

'பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணர்க்கு அரிது', எனக் குறள்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் அல்லவரை நாடாது,
வள்ளுவம் காட்டும் வழி நடந்து, வாழ்வில் நலம் பெறுவோம்!

:evil: . . :nono:
 
[video=youtube;oV0JLe1nwfc]http://www.youtube.com/watch?v=oV0JLe1nwfc[/video]
பாபநாசம் சிவன் பாட்டும் இது தானோ

வள்ளுவத்தின் வழிகாட்டல்!

நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறையின் தீர்ப்பு!

'நம்பினாரைக் கெடுக்காதீர்'; இது வள்ளுவத்தின் வழிகாட்டல்!

:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 226

நம்பாது இருப்போம்!

எதிரில் நம்மைக் காணும்போது சிரித்துப் பேசிவிட்டு,
எதிரிபோல அழிக்க நினைப்பவரிடம் அஞ்சவேண்டும்.

'முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்ச படும்', என எச்சரிக்கை!

தெளிவான முடிவு எடுக்க வேண்டுமென்றால் உள்ளத்
தெளிவு மிக்கவரை நாடுவது, நலத்தைத் தரும்; ஆனால்,

மனம் வேறு, செயல் வேறு என்ற தீயவரை நம்பினால்,
மனத் தெளிவுடன், எந்த முடிவும் எடுக்கவே இயலாது!

'மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று', என்கிறார்.

இனிமை மாறாது, நண்பர் போலப் பேசும் பகைவரின்
சிறுமை, விரைவிலேயே வெளிப்பட்டுவிடுவது உறுதி!

'நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்', என்று உறுதி அளிக்கின்றார்!

நட்பையே நாடகமாக ஆக்கும் தீயவரை அறிந்து, அவர்
நட்பையே நாடாது, உலக வாழ்வில் உயர்ந்திடுவோம்!

:evil: . . :bump2: . . :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 227

பகைவர் சொல்லும், செயலும்...

பகைவரின் தன்மைகள் பற்றி மேலும் ஆராய்ந்து கூறி, நாம்
பகைவரின் ஜாலங்களில் ஏமாறாதிருக்க வழி காட்டுகிறார்!

வணக்கம் செய்பவர் எவராயினும், அதை என்றும் நிஜமான
வணக்கம் என்று நம்பக் கூடாது என்கிறார்; இதைப் போன்ற

வணக்கம், வில்லின் வணக்கம் போலவே கொடியது ஆகும்;
வணங்கிய பின் தீங்கு தரும் தன்மையைக் கொண்டதாகும்!

'சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்', என்று நமக்கு அறிவுறுத்துகிறார்!

நம்மைத் தொழப் பகைவர் வந்தால், தன் கையில் மறைத்து
நம்மைத் தாக்க ஆயுதமும்கூட வைத்திருப்பார்; அது போல

அவர்கள் கண்ணில் நீர் மல்கி இருந்தாலும்கூட, மனத்தில்
அவர்கள் வஞ்சகமான எண்ணங்களையே வைத்திருப்பார்!

'தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து', என்பது எச்சரிக்கை!

பகைவரையும், நண்பரையும் சரியாக அறிந்து கொள்வோம்;
பகைவரை நம்பி ஏமாறாது, வாழ்வில் உயர்வு பெறுவோம்!

:suspicious: . :spy:
 
என்றும் உள்ளனர்!

அன்றும் வெளிவேடமிட்டு நல்லவர்போல் நடிப்பவர்
இன்று பரவலாய் உள்ளவதுபோலவே இருந்துள்ளார்!

வள்ளுவப் பெருந்தகை, இக்குணத்தை உலகினருக்குத்
தெள்ளத் தெளிவாகக் காட்டிடவே விழைந்துள்ளார்!

வள்ளுவம் வாழ்க! :hail:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 228

எப்படிப் பழகுவது?

பகைவர் நண்பரைப் போல வந்து ஏமாற்றும் தருணம்,
பகைவரிடம் எப்படிப் பழகுவது, என வழிகாட்டுகிறார்!

புறத்தில் நண்பரைப்போல நடந்து கொண்டாலும், தனது
அகத்தில் இகழ்ச்சியைக் கொண்டவரிடம் பழகும்போது,

நாமும் அதேபோல, புறத்தில் நகைத்து, அந்த நட்புச் சாக
ஆகும் வழிகளில் நடக்க வேண்டும் என்கின்றார், அவர்!

'மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று', என்பது குறள்.

பகைவருடன் பழகிடும் காலம் வரும்போது, அவரிடம்
நகை முகத்துடன் பேசி, அந்த நட்பையும் விடவேண்டும்!

'பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்', என்று அறிவுரை!

பகைவரை அணுகும் காலத்தில், வள்ளுவத்தை எண்ணி
பகைவரின் தீய தாக்கத்திலிருந்து தப்பித்து, உய்வோம்!

:evil: . . . :bolt: . . . :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 229

பேதைமை...

பேதைமை நீக்கும் வழி என்னவென்றால், நம்முடைய
பேதைமை என்னவென்று அறிந்து கொண்டுவிடுவதே!

பேதைமை என்பதன் தன்மையைக் கூற, திருவள்ளுவர்
மேதையாக அதன் இலக்கணத்தை வரையறுக்கின்றார்!

நன்மை தருவதையும், தீமை தருவதையும் ஆராயாமல்,
நன்மையை விட்டுத் தீமையை நாடுவதே பேதைமை!

'பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்', என்று தெளிவாகக் கூறுகிறார்!

தன்னால் செய்ய முடியாத செயல்களில் இறங்குவதே,
எந்நாளும் பேதைமையிலும் மிகப் பெரிய பேதைமை!

'பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்', என்று எச்சரிக்கிறார்!

வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப் படாமலும்,
தேடிப் பெற வேண்டியவற்றைத் தேடித் பெறாமலும்,

அன்பு காட்ட வேண்டியவரிடம் அன்பு காட்டாமலும்,
நன்கு பேண வேண்டியவற்றை, பேணிக் காக்காமலும்,

அறிவற்ற செயல்களைச் செய்து இருப்பவர்கள்தான்,
அறிவற்ற பேதைகள் எனத் தெளிவாக உரைக்கிறார்!

'நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்', என்பதே பட்டியல்!

பேதைமை பற்றி வள்ளுவம் கூறுவதை உணர்ந்து,
பேதையாக வாழாது, நாம் மேன்மை அடைவோம்!

:humble: . :nono:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 230

பேதையரின் தன்மைகள்...

நன் நூல்களைப் படித்தும், அவற்றின் பொருளை உணர்ந்தும்,
தன் திறத்தால் பிறருக்கு உரைக்கவும் முடிந்தவர்கள், தானே

அந்த வழிகளில் நடக்காமல் இருந்தால், அவர்களைவிடவும்
எந்தப் பேதையுமே இருக்க முடியாது என்கின்றார் வள்ளுவர்.

'ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையர் இல்', என்பது அந்தக் குறள்.

ஏழு பிறவியில் புகுந்து அழுந்தும் நரகத் துன்பத்தை, பேதை
ஒரு பிறவியிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்!

'ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமைக்கும்
தான்புக் கழுந்தும் அளறு', என்று எச்சரிக்கை!

மெய் வழி அறியாத பேதையர், தம் செயலை முடிக்காது
பொய்யாக்கி விட்டு, தம்மையும் தண்டித்துக் கொள்வார்!

'பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்', என்பது குறட்பா.

பேதைகளின் தன்மைகளை அறிந்துகொண்டு, என்றுமே
பேதையர் போலச் செயல் புரியாது, உலகில் சிறப்போம்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 231

பேதை பெறும் பொருள்...

பெரும் பொருட் செல்வம் பேதை பெற்றால், அதனைப்
பெறும் பேறு, அவனுக்குத் தொடர்பு இல்லாதவருக்கே!

அவனுடைய உற்ற சுற்றம் பசித்திருக்க, எவரெவரோ
அவனுடைய பொருளைச் சுருட்டிச் சென்றுவிடுவார்!

'ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை'.

பித்துப் பிடித்தவனின் ஆட்டமே தாங்க முடியாது; கள்
பிடித்து அவன் குடித்தால், எப்படி இருக்கும்? எந்த ஒரு

நல்லது கெட்டதும் அறியாப் பேதை, கையில் வைத்துக்
கொள்ள, ஒரு பொருள் கிடைத்தது போன்று இருக்கும்!

'மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்', எனக் குறள்.

பொருட் செல்வத்தைப் பேதைபோல வீணாக்காது, நம்
பொருட் செல்வத்தை, நன்கு செலவிட முனைவோம்!

:decision: . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 232

பேதையர் நட்பு நலமே!

பிரிவு என்பது நட்பில் கொடுமையே! நண்பர்களின்
பிரிவு, மனதைத் துயர் அடையச் செய்யும்; ஆனால்

பேதையர் நட்பு மிகவும் இனியது ஆகும்; ஏனெனில்
பேதையர் பிரிவு, மனத் துயரமே தராது இருப்பதால்!

'பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்', என்கிறார் வள்ளுவர்!

மேலும் பேதையரின் சிறுமையை வெளிப்படுத்திட,
மேலும் ஒரு குறட்பாவை இறுதியாக அளிக்கிறார்.

அறிஞர்கள் குழுவில் பேதை நுழைவு, அசுத்தத்தை
மிதித்த காலை, படுக்கையில் வைப்பது போன்றது!

'கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்', என உவமை கூறுகிறார்!

இதைவிடப் பேதைமையை விளக்கவும் இயலுமோ?
இதையறிந்து, மேதையாக உயர நாம் முயலுவோம்!

:amen:
 
அறிவாளி!

நம்மைப் பிரியும் நேரம் வரும்போது, நண்பர் கண்ணில்
தம்மையும் அறியாது நீர் பெருகினால், நாம் அறிவாளி!

பேதையாகத் திரிந்தால், நண்பர் கலங்க மாட்டாரென்று,
பேதையாகத் திரிய, என்றும் முடிவெடுக்க வேண்டாம்!

:humble: . . :nono:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 233

அறிவின்மை...

இல்லாத கொடுமை என்று இல்லாதவரைப் பார்த்துச்
சொல்லாத மனிதர்கள் மிகக் குறைவே, இவ்வுலகில்.

இல்லாத கொடுமைகளில் முதன்மையானது, அறிவு
இல்லாத தன்மையே, என உரைக்கின்றார் வள்ளுவர்!

உலகில், அறிவுப் பஞ்சமே மிகப் பெரிய பஞ்சமாகும்;
உலகம், மற்ற பஞ்சங்களை அவ்வளவாக எண்ணாது!

'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு', என்பது எச்சரிக்கை!

அறிவில்லாதவன் பொருளை யாருக்கு ஈவது என்பது
அறியாது, வள்ளல் போல வாரி வாரி வழங்கிடுவான்.

பெரும் மகிழ்வுடன் அவ்வாறு பொருளை வழங்குவது,
பெறுபவன் செய்த தவமே; வேறு காரணமே இல்லை!

'அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்', என்பது குறட்பா.

அறிவில்லா நிலை தரும் பல இன்னல்களில், மிகவும்
பெரிய இன்னலாக, ஒன்றை வள்ளுவர் காட்டுகின்றார்.

வேதனை எதிரிகள் தருவார்; ஆனால், அதைவிட அதிக
வேதனை, தமக்குத் தாமே ஏற்படுத்துவார், அறிவிலார்!

'அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது', என்கிறார்!

அறிவில்லாத நிலைமை தரும் கேடுகளை உணர்வோம்!
அறிவை மேம்படுத்தும் முயற்சிகளை நாம் செய்வோம்!

:ranger: . . :angel:
 
இதுவல்லவோ அறிவு!

இந்தியர் ஒருவர்; அமெரிக்கர் ஒருவர்; இருவருக்கும்
விந்தையான ஒரு விஷயமே, மிகவும் பிடித்ததாகும்!

சந்தித்த உடனே தெரிந்துகொண்டனர், தம் விருப்பமே
பந்தயம் கட்டிப் பணத்தைச் சேர்ப்பதில்தான் என்பதை!

'உன் கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால், தருவேன்
நான் உனக்கு ஐநூறு டாலர்கள்; இதைப் போலத்தான்,

'என் கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால், நீ தரணும்
எனக்கு ஐந்தே டாலர்கள்', என்று கூறிய அமெரிக்கர்,

'மூன்று கேள்விகளே மொத்தம்; நான் ஆரம்பிப்பேன்
முதல் கேள்வியை', என்றும் உரைத்தார், பணிவுடன்!

தன் அறிவுத் திறனில் மிக நம்பிக்கை கொண்டதால்,
தான் வெல்லுவது உறுதி என்பதை நம்பி இருந்தார்!

பந்தயத்தை ஏற்ற பின்னர், தொடங்கின கேள்விகள்;
'இந்த பூமிக்கும், நிலவுக்கும் என்ன வித்தியாசங்கள்?',

என்று முதல் கேள்விக் கணை வந்து விழ, 'அறியேன்',
என்று உரைத்த இந்தியர், அளித்தார் ஐந்து டாலர்கள்!

'ஒரு தலை விலங்கு ஒன்று, மலையில் ஏறிச் சென்று,
இரு தலை உடையதாகத் திரும்பி வந்தது! அது எது?'

என்ற கேள்வியை இந்தியர் கேட்க, மூளையே குழம்பி
நின்ற அமெரிக்கர், தன் ஐநூறு டாலர்களை நீட்டியபடி,

'எனக்குத் தெரியாத பதிலை, நீயே கூறு!' என்று கேட்க,
'எனக்கும் தெரியாது!' என்று, கொடுத்தார் டாலர் ஐந்து!

:couch2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 234

போலியான தோற்றமே...

புல்லறிவு என்பதன் இலக்கணத்தை, வள்ளுவர், நம்
நல்லறிவுக்கு எட்டும்படி, நயம்பட உரைக்கின்றார்!

தன்னைத் தானே மிகவும் சிறந்த அறிவாளி என்று
எண்ணிக் கொள்ளும் மமதைதான், புல்லறிவாகும்!

'வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு'. உண்மை!

எதைக் கசடறக் கற்று அறிந்தோமோ, நாம் என்றும்
அதைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்! எல்லாமே

அறிந்ததுபோலப் போலியாகக் காட்டினால், கசடற
அறிந்தவை பற்றியும், மற்றவர் ஐயமே கொள்வார்!

'கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதுஉம் ஐயம் தரும்', என எச்சரிக்கை!

நம் குற்றங்களை உணர்ந்து திருந்துவதே, சிறந்தது;
நம் குற்றங்களை, அப்படியே தக்க வைத்துக்கொண்டு,

உடலை மட்டும் மறைக்க, ஆடை அணிந்து கொள்வது,
மடமை என, உலகிற்கு வழிகாட்டுகிறார் வள்ளுவர்.

'அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி', என வழிகாட்டல்!

புல்லறிவு எதுவென அறிந்துகொண்டு, என்றும் நாம்
நல்லறிவு வளர, கற்பவை கற்றுச் சிறப்பெய்துவோம்!

:ranger: . . . :first:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 235

அறிவிலிகள்...

தனக்கும் தெரியாது; பிறர் சொல்லும் கேளாது, என்று
இருக்கும் ஒருவித ஜீவன்கள், உலகினில் உலவிடும்!

இது போன்று இருப்பது ஒரு நோய் என்று, தன் உலகப்
பொதுமறையில், தெளிவாக உரைக்கிறார் வள்ளுவர்!

'ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்', என எச்சரிக்கை!

அறிவு நிரம்பாதவனை, அறிவுள்ளவனாக மாற்றிட, ஓர்
அறிவுள்ளவன் முயன்றால், அவன் அறிவிலியாவான்!

அறிவு நிரம்ப இல்லாதவனோ, தான் அறிந்ததை வைத்து,
அறிவுடையவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளுவான்!

'காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு'. குறள் விந்தைதான்!

ஆதாரங்களைக் காட்டி, உண்மை என்று உரைப்பவற்றை
அதாரமே இல்லாது, பொய் என மறுப்பவர் இருப்பார்கள்!

உலகில் இதுபோல உலவுபவர்களை, 'பேய்' பட்டியலிலே
உலகம் வைக்கும் என்று உரைக்கின்றார், திருவள்ளுவர்!

'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்', என்பதும் எச்சரிக்கையே!

பேய்ப் பட்டியலில் நாமும் சேர்ந்து விடாது இருப்போம்;
பேரறிவாளர் நல்வழிகளை நாடி, உலகில் உயர்வோம்!

:scared: . . :nono:
 
Back
Top