Think or sink!

Whether by Theory or by practical...

We reap what we sow.

We receive what we had given.

Nothing ever disappears into NOTHING.

Nothing ever emerges from NOTHING.

Even Gods suffer for their wrong actions.

Every action, every word and every thought

is taken into one's account and

it is a dependable SWISS account!!! :high5:
 
We do not have to search far and wide for knowing

how certain actions, thoughts and words have backfired.

Those who had hurt others got more hurt by someone else

[or the same person in disguise. :spy:]

Those who bullied others got bullied by yet others -

God only knows whether by real or virtual personalities.

Those who called others names had their own quota of name calling.

The ball thrown on the wall comes back to us. :playball:

The same rule applies for everything for everyone. :peace:

Call it by any name Karmam or Dharmam or Marmam or Varmam! :bump2:
 
A series of poems explaining how, when and why our karma affects us.

ஜனமேஜயனின் ஐயங்கள்

“எல்லாம் அறிந்த வியாச முனிவரே! எனக்குச்
சொல்ல வேண்டும் சில அற்புத சரித்திரங்களை.

சிறந்த வசுதேவனையும், தேவகியையும்
சிறைப்படுத்தினான் கம்சன் எனும் கயவன்.

கொன்று தீர்த்தான் பிறந்த சிசுக்கள் அறுவரை!
சென்றாள் ஏழாவது குழந்தை வானில் பறந்து!

அஷ்ட புஜங்களுடன் ஒரு தெய்வீகக் கன்னியாகி
இஷ்ட தெய்வமாகிக் குடியேறினாள் கோவிலில்.

எட்டாவதாகப் பிறந்தவர் ஸ்ரீமன் மகாவிஷ்ணு;
விட்டுப் பிரிந்தார் தாயைப் பிறந்தவுடனேயே!

யாதவ குலத்தில் வளர்ந்தார் கண்ணனாக;
மாதவனாகப் புரிந்தான் லீலைகள் அநேகம்.

கர்ப்ப வாசம் செய்யும் அவலநிலை எப்படி
அற்பனைப் போல ஏற்பட்டது கண்ணனுக்கு?

தர்ம தேவதையின் இரு புத்திரர்கள் இவர்கள்;
தர்மத்தைக் காக்கும் விஷ்ணுவின் அம்சங்கள்.

நர, நாராயணர் என்னும் அற்புதத் தபஸ்விகள்;
பிறந்தனர் பார்த்தன், கிருஷ்ணனாக அடுத்து.

தன் குலஆசாரம் தவறாமல் வாழ்பவர்
தன் குலத்திலும் உயர்ந்ததில் ஜனிப்பர்.

பிராமணர்கள் ஆகிய நர, நாராயணர்கள்
பிறந்தது ஏன் க்ஷத்ரிய குலத்தில் சென்று?

யாதவ குலம் ஏன் நசித்தது சாபத்தால்?
மாதவன் ஏன் மாண்டான் சாபத்தால்?

கண்ணன் மீண்டும் வைகுண்டம் சென்றதும்
கண்ணன் மனைவியர் துயருற்றதும் ஏன்?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
ஜனமேஜயனின் ஐயங்கள் (2)

பூபாரத்தைத் தீர்க்க வந்தவர் கிருஷ்ணர்;
துவாரகை சென்றார் பகைவருக்கு அஞ்சி!

உத்தமர்களைக் கொன்றார் பாரதப் போரில்;
பத்தினிகளைக் கவர்ந்த கள்வர்களை அல்ல.

கிருஷ்ணனுக்கு மிகவும் நெருங்கியவர்கள்;
கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.

ராஜாசூய யாகம் செய்தவர்கள் பாண்டவர்கள்;
ராஜ்ஜியதைப் பாண்டவர்கள் இழந்தது ஏன்?

அல்லல் பட்டது ஏன் வனவாசம் சென்று?
அஞ்ஞாத வாசத்தில் ஒளிந்திருந்தது ஏன்?

அவதரித்தாள் திரௌபதி அக்கினியில்!
பத்தினியானாள் பஞ்சபாண்டவருக்கு!

பக்தி கொண்டிருந்தாள் கிருஷ்ணனிடம்;
இத்தனை இருந்தும் எத்தனை சோதனை?

இழுத்து வந்தனர் கூந்தலைப் பற்றி சபைக்கு!
இழுத்து ஆடையைச் செய்தனர் மானபங்கம்!

அரசியின் சேடியாக வாழ்ந்தாள் ஓராண்டு!
அரற்றினாள் கீசகன் தந்த இம்சையினால்!

அபகரித்துச் சென்றான் அவளை ஜயத்ரதன்!
அபலையை மீட்டனர் கணவர்கள் பாண்டவர்!

இத்தனை துயரம் அடைவதற்கு அவள்
எத்தனை பாவம் செய்திருந்தாள் முன்பு?

கௌரவ வம்சம் கண்ணனால் அழிந்தது ஏன்?
கௌரவமான பரீட்சித்தின் துர்மரணம் ஏன்?

இந்த ஐயங்கள் பந்தாடுகின்றன என் மனதை.
தந்தருள்வீர் மன அமைதியினை வியாசரே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
கர்மவினைப் பயன்கள்

வியாசர் கூறினார் தான் அறிந்தவற்றை;
விசனப்படும் மன்னன் ஜனமேஜயனுக்கு.

“வலிமை கொண்டது கர்மவினைகளின் பயன்;
பொலிவுறும் பிரம்மாண்டம் முக்குணங்களால்!

கட்டு படுத்தும் பிரம்மாண்டத்தை முக்குணங்கள்;
உட்படுத்தும் உயிரினங்களைக் கர்மவிதி நியதிக்கு.


கர்ம விதியினை அறிய இயலாது நம்மால் !
கர்ம விதியினை ஆராய இயலாது நம்மால்!

ஜீவன்கள் ஆதியந்தம் அற்றவைகள் – அந்த
ஜீவன்களின் உடல் கர்ம வினைப் பட்டவை.


உடல் எடுக்கின்றன பல யோனிகளில் பிறந்து!
உடல் எடுக்கின்றன பல யோக போகங்களுடன்!

இல்லை கர்ம வினைபயன்கள் என்றால் – அப்போது
இல்லை கர்ம வினைகளால் உண்டாகும் உடல்கள்!


நல்வினை தீவினை கலந்த புண்ணிய பாவங்கள்
சொல்லப்படும் மூன்று வகைப் பட்டவை என்று.

சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று
மிஞ்சிடும் பிறக்கும் உடல்களில் இவை.

தேவர்களும் உட்பட்டவர்கள் கர்ம வினைக்கு
தேவர்களுக்கும் உண்டு இன்ப, துன்பங்கள்


எந்த யோனியில் சென்று பிறந்தாலும் – உண்டு
அந்த யோனியில் உண்டாகும் குண விகாரங்கள்.

வலம் வருகின்றான் சூரியன் உலகினை;
வளர்ந்து தேய்கின்றான் சந்திரன் வானில்.

கர்மமும், மாயையும் நித்தியமானவைகள்;
கர்ம, மாயை வசப்பட்ட உலகம் அநித்தியம்.

கர்ம வினைகள் காரணம் ஆகும் உலகுக்கு;
கர்ம வினைகளின் காரியம் உலக உற்பத்தி!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
வியாசரின் பதில்

“தருமத்தை நிலை நாட்டிய மஹாவிஷ்ணு
விருப்பத்துடன் எடுத்தாரா அவதாரங்களை?

கர்ம வினைகளால் நிகழ்ந்தவை அவை !
கர்ம வினைகள் இன்றி அவதாரங்கள் ஏது?


ஜலக்ரீடை இன்பமாகச் செய்து கொண்டு,
மலர் செண்டுடன் விளையாடிக் கொண்டு

சொக்கட்டான் ஆடியபடி காலத்தைக் கழித்து;
சுக போகங்களை லக்ஷ்மியுடன் அனுபவித்து;

காலம் கழித்திருக்கலாம் வைகுந்தத்திலேயே.
கர்ப்ப வாசம் செய்வதற்கு அவசியம் என்ன?

கர்ப்ப வாசத்திலும் நரகம் வேறொன்று உண்டோ?
கர்ப்பத்தில் தலைகீழாக இருப்பதே ஒரு கொடுமை!

முடங்கிக் கிடக்க வேண்டும் சிறிய பையில்!
தொடங்கும் வாழ்க்கை கருப் பாதையிலிருந்து.

உண்டோ பிறந்த பின்னே வாழ்வில் சுகம்?
மண்டும் துயர்கள், நோய்கள், துன்பங்கள்!

தேவர்களுக்கும் உண்டு கர்ம பலன் – எனவே
தேவர்கள் பிறந்தனர் குரங்குளாக ஒருமுறை.


கிருஷ்ண அவதாரத்தின் பெருமை சொல்வேன்;
கிருஷ்ணன் ஆவான் விஷ்ணுவின் அவதாரம்.

வசுதேவராகப் பிறந்தார் காசியப முனிவர்;
பசு மேய்க்கும் தொழில் வந்தது சாபத்தால்.

மனைவி தேவகி அதிதியின் அவதாரம்;
மனைவி ரோஹிணி சுரசையின் அவதாரம்.

வருணன் தந்த சாபத்தால் வந்து பிறந்தனர்
வசுதேவரின் இரு மனைவிகளாக பூமியில்.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
ஜனமேஜயனின் கேள்விகள்

குறுக்கிட்டான் ஜனமேஜயன் இப்போது.
சிறந்த அறிவு படைத்த முனிவரே கூறுங்கள்!

எந்தப் பாவச் செயலைச் செய்தார் காசியபர்?
எந்த சாபத்தினால் அவர் பிறந்தார் வசுதேவராக?

விஷ்ணு ஏன் மானிடப் பிறவிகள் எடுத்தார்?
விஷ்ணு ஏன் அடைய வேண்டும் இன்னல்கள்?


துக்கமே கர்ப்பவாசம்; துக்கமே பிறப்பு;
துக்கம் அஞ்ஞானம், துக்கம் காம வேதனை.

ராமாவதாரத்தில் ராமன் துயருற்றது ஏன்?
ராஜ்ஜியமிழந்து வனவாசம் சென்றது ஏன்?

மனைவியைப் பறி கொடுத்துவிட்டு
மனம் கலங்கி புலம்பித் திரிந்தது ஏன்?

பிறந்தான் கண்ணன் க்ஷத்திரிய குலத்தில்,
வளர்ந்தான் கண்ணன் யாதவ குலத்தில்;

மாடு கன்றுகளை மேய்த்தான் இளமையில்;
கொடுங்கோலன் கம்ஸனைக் கொன்றான்.

அஞ்சி வெளியேறினான் மதுராபுரியிலிருந்து;
தஞ்சம் புகுந்தான் கண்ணன் த்வாரகாபுரியில்!

சம்சாரத் துக்கங்கள் விஷ்ணுவுக்கு எதற்காக?”
சம்சயங்களைத் தீர்க்கவேண்டும் குருதேவரே!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
சக்களத்திகள் பொறாமை

ஒருமுறை அபகரித்தார் காசியப முனிவர்
வருணனின் பசுவை யாகம் செய்வதற்கு.

வருத்தத்துடன் வந்து கேட்டான் வருணன்,
“திருப்பித் தாரும் முனிவரே என் பசுவை!

“எடுத்த பொருளைத் திருப்புவதாக இருந்தால்
எடுத்திருக்கவே மாட்டேனே!” என்றார் முனிவர்.

முறையிட்டான் குறையினை பிரமனிடம் வருணன்,
“பிறப்பாய் யாதவனாக!” எனச் சபித்தான் முனிவரை.

தணியவில்லை வருணனின் சினம் இன்னமும்,
துணைவியரைச் சபித்தான் புத்திரரைப் பிரிந்திட.

பிரமனும் கடிந்து கொண்டான் மகன் காசியபரை;
“பிறர் பொருளை அபகரிப்பது தவறு அல்லவா?

பூவுலகில் மனைவியரோடு சென்று பிறந்து
ஆவினங்கள் மேய்த்து வருவாய்!” என்றார்.

அதிதியிடம் கூறினார் பிரமன் அடுத்ததாக,
“கதி கலங்குவாய் குழந்தைகளைப் பிரிந்து!”

யாதவன் வாசுதேவனாகக் காசியபர் பிறக்க
மாதவன் பிறந்தான் எட்டாவது மகனாக.

அதிதி பிறந்தாள் மனைவி தேவகியாக
அதிதி பிரிந்தாள் பிறந்த குழந்தைகளை”

ஜனமேஜயன் கேட்டான் வியாசரிடம்,
“மனமே கலங்கும் கொடிய சாபத்தால்.

இந்திரனைப் பெற்ற அன்னை அதிதிக்கு
இந்தச் சாபம் வரக் காரணம் என்ன?”

வாழ்க வளமுடன்,விசாலாக்ஷி ரமணி
 
திதியும், அதிதியும்

தக்ஷனின் பெண்கள் திதியும், அதிதியும்,
தர்ம பத்தினிகள் காசியப முனிவருக்கு.

இணையற்றவன் அதிதி மகன் இந்திரன்;
இணையாகும் மகனை விழைந்தாள் திதி.

கோரினாள் வலிய மகனைக் கணவனிடம்;
கூறினார் கணவர் விரத விதிமுறைகளை.

“விரும்பும் மகன் வந்து பிறப்பான் – நீ இந்த
விரத விதிமுறைகளை மீறாமல் இருந்தால்.”

பால் அருந்தினாள்; உணவை விடுத்தாள்;
பரிசுத்தமாக உறங்கினாள் தரையில்.

பூர்த்தி ஆனது விரதம் ஒரு குறையுமின்றி.
பூர்த்தி ஆனது அவள் கோரிக்கையும் கூட.

கருவில் உருவானான் ஒரு வலிய மகன்!
கரு தந்தது திதிக்கு விரதத்தின் பொலிவை!

பொறாமை கொண்டாள் இது கண்ட அதிதி.
‘பெருமை சேரும் திதிக்கும், மகனுக்கும்.

சிறுமை சேரும் எனக்கும், இந்திரனுக்கும்!
சீரழிக்கவேண்டும் இவள் கருவை உடனே.

“உருவாகி வளர்கின்றான் உனக்குப் பகைவன்;
உன் சிற்றன்னை திதியின் வயிற்றில் இந்திரா!

உபாயம் சிந்திப்பாய் மகனே இந்திரா! உடனே
அபாயம் விளைவிப்பாய் அவள் கருவுக்கு!

பிறந்தால் குறைந்து விடும் உன் பெருமை.
பிறக்கும் முன்னர் அழிப்பது அறிவுடைமை.”

இந்திரன் மனத்தைக் கலைத்தாள் அதிதி.
இந்திரன் வெறுத்தான் தன் பகைவனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
இந்திரனின் வஞ்சகம்

போதனை கேட்டான் தாயிடம் இந்திரன்;
பேதலித்தான் மனம் துர்போதனைகளால்.

சென்றான் திதியிடம் நயவஞ்சகத்துடன்,
சொன்னான் அவளிடம் இனிய மொழிகளை.

“இளைத்து மெலிந்து விட்டாய் விரதத்தால்
களைத்து நலிந்து விட்டாய் விரதத்தால்.

பாத சேவை செய்யும் பாக்கியம் தருவாய்!
பேதமில்லை மனதில் உனக்கும், தாய்க்கும்!”

பாதங்களைத் தொடையில் வைத்துக் கொண்டு
பாத சேவை தொடர்ந்து செய்தான் இந்திரன்.

ஐயுறவில்லை திதி இந்திரனின் நோக்கத்தை;
அயர்ந்து உறங்கினாள் களைப்பின் மிகுதியால்.

வாய்த்தது இந்திரன் காத்திருந்த சந்தர்ப்பம்!
மாய்த்து விடலாம் எளிதில் உருவான கருவை!

வடிவெடுத்தான் யோகசக்தியால் நுட்பமாக;
குடிகெடுக்க நுழைந்தான் அவள் கர்ப்பத்தில்.

வெட்டினான் சிசுவை ஏழு துண்டுகளாக;
வெட்டப் பட்ட சிசு அழுதது ஓயாமல்!

வெட்டினான் ஒவ்வொன்றையும் ஏழாக!
வெட்டப் பட்டது சிசு நாற்பது ஒன்பதாக!

மரிக்கவில்லை அந்த சிசு அப்போதும்;
மருத்துக்களாக உருவெடுத்தன அவை.

கண் விழித்த திதி அதிர்ந்து போனாள் – இது
கண் மூடித் திறப்பதற்கு என்ன கொடுமை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
அதிதியும், திதியும்

சபித்தாள் திதி தந்திரன் இந்திரனை மனமார;
கோபித்தாள் நடத்திய நயவஞ்சக நாடகத்தை.

“திரிலோக அதிபதிப் பதவியை இழந்துவிட்டு
திரிவாய் அலைந்து, குலைந்து, மெலிந்து!”

அதிதியின் வஞ்சனையையும் அறிந்தாள்;
அதீத சினத்துடன் சபித்தாள் அவளையும்!

“பிறந்தவுடனே குழந்தைகள் கொல்லப்பட்டு
இறப்பதைக் கண்டு நெஞ்சு துடிதுடிப்பாய் நீ!”


அறிந்தார் காசியபர் நடந்த நிகழ்ச்சிகளை.
ஆறுதல் கூறினார் அன்புடன் திதி தேவிக்கு.

“மருத்துக்களாக விளங்குவர் மகன்கள்;
பொருந்துவர் இந்திரனுடன் தம் புகழில்.

சாபங்கள் பலன் தரும் துவாபரயுகத்தில்,
சதுர் யுகம் இருபது எட்டில் என்றறிவாய்

கிடைத்துள்ளது எனக்கும் பிரம்ம சாபம்;
கிடைத்துள்ளது எனக்கும் வருண சாபம்;

மானிடப் பிறவியை எடுப்போம் நாங்கள்;
மாளாத துயரை அனுபவிப்போம் நாங்கள்;

சாபம் தொடரும் பல ஜன்மங்களுக்கு;

தாபம் தீர்ந்து மன அமைதி கொள்வாய்!”

கோபம் மறைந்தது திதியின் மனத்தில்;
பாவம் செய்தால் உண்டு தண்டனை.

பிறந்தார் காசியபர் வசுதேவனாக;
பிறந்தாள் அதிதி வந்து தேவகியாக;

சாபங்கள் பலித்தன, பலனைத் தந்தன;
சாபங்கள் தொடரும் ஜன்மாந்திரமாக.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
No one has the freedom of choice to end even one's own life.

It is the greatest insult to God and the greatest sin possible

leading to more misery and more suffering in the future births.
 
Back
Top