• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

T.Janakiraman - a paen from his daughter Uma Shankari (Solvanam 50th edition 24/05/11

Status
Not open for further replies.

kunjuppu

Active member
I am so much into மோக முள் now, that i am re visiting all references to TJ in the web. one of mychoicest pieces re TJ, is this article written by his daughter Uma Shankari. Hearwarming, poignant and so much full of love....

i have highlighted some (what i thought) interesting pieces.

அப்பா – நல்ல அப்பா

நான் ஒரு ரிஷியும் இல்லை; ரிஷி பத்தினியும் இல்லை. முக்காலம் அறியாத, கால அலைகளால் இன்பத்திலும் துன்பத்திலும் தள்ளப்பட்டு, இவற்றிலிருந்து எப்போது, எப்படி விடுதலை கிடைக்கும் என்று ஏங்கும் ஒரு சாதாரண மனுஷி. அப்பா இறந்தபோது வெகுவாக துக்கத்தில் இருந்தேன். பல நாட்கள் எனது வலது கை இல்லாதது போல் ஒரு உணர்ச்சி!- அப்போதுதான் “வலது கை ஒடிஞ்சாப் போல” என்ற வாக்கியத்துக்குப்பின் ஒரு நிஜம் இருக்கிறது என்று அறிந்தேன். இன்று அவரது முகம்கூட மறந்தாற்போல், முயற்சி செய்து ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சிக்கல்; சந்தர்ப்பங்களும் சிக்கலானவை. இவற்றைச் சுருக்கி, நெருக்கி, ஒரு சில விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஞாபகப்படுத்திக் கொண்டு எழுதும்போது நாம் அந்த மனிதருக்கு நியாயம் செய்கிறோமா என்று மனசில் கேள்வி. “சுயசரிதை ஒரு பொய்; சரிதை (Biography) இன்னும் பெரிய பொய்,” என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் நிஜம் போலவும் இருக்கிறது; பொய் போலவும் இருக்கிறது.

என் குடும்பத்தில் நான் கடைசி குழந்தை. எனக்கு முன் இரண்டு அண்ணாக்கள். என்னை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள் என்றே நினைக்கிறேன். அப்பாவும் என்னை நிறைய தூக்கி, விளையாடி, கொண்டாடி வளர்த்தார். பிராம்மண குடும்பங்களில் அதைத் தொடாதே, இதைச் செய்யாதே, அங்கே நிற்காதே, இதைத் தொட்டால் கையலம்பணும், அதை மிதிச்சால் காலலம்பணும் என்று நூறு சட்டங்கள் சடங்குகள். அவற்றை நான் எதிர்த்து கேள்விகள் போட்டபோது அப்பாதான் எனக்கு துணை. சடங்குகளின் உள்ளர்த்தம், சாராம்சத்தை புரிஞ்சுக்கணும், கவனிக்கணும் என்று சொல்லிக் கொடுத்தார். அதற்காக முள்ளம்பன்றிபோல் நம் நம்பிக்கைகளைக் சாட்ட வேண்டியதில்லை; அடக்கமும் சாந்தமும் மனிதனுக்கு முக்கியம் என்பதை நான் அவர் மூலம் புரிந்து கொண்டேன். முன்கோபம், பல்வேறு பயங்கள், ஆசைகள், பலவீனங்கள், எல்லாம் அவருக்கும் இருந்தன. ஆனால் மொத்தமாகப் பார்த்தால் அடக்கமும் சாந்தமும் ஊறுகாய்க்கு மேலே எண்ணெய் போல தூக்கி இருக்கும்.

அடக்கமும் சாந்தமும் அவருக்கு எப்படி வந்தன? வேறொருவர் பிரக்ஞையில் தன்னை இருத்தி உலகத்தைக் காணல் அவருக்கு இயல்பாக வந்த கலை. அதனால்தான் கதைகளில் பாத்திரங்களை உயிரோடு நடமாடுவது போல் சித்தரிக்க முடிந்தது. மேலும் அவர் உள் மனதில் ஒரு கேள்வி ஆறு ஓடிக் கொண்டிருந்தது போலிருக்கிறது. அது அவருடைய நம்பிக்கைகளை அவ்வப்போது உடைத்து புது வெள்ளத்தை கொண்டு நிறைத்ததோ என்னவோ. தொடர்ந்து கேள்விகள், தொடந்து தீர்மானங்கள்- இவை நடுவில் அவருடைய வாழ்க்கை ஓடியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நம்மில் பல பேருக்கு அவ்வாறுதானே!

தடைகள் ஏதும் இல்லாவிட்டலும் எங்களுக்கு படிப்பில் பெரிய ஊக்குவித்தலோ வழிகாட்டுதலோ இருந்ததில்லை. ஒரு போதும் ஹோம் வொர்க்குக்கு உதவி செய்ததில்லை. நாங்கள் எந்த வகுப்பில் படிக்கிறோம் என்று யாராவது கேட்டால், “ஏம்மா, என்ன க்ளாஸ் நீ?” என்றுதான் எதிர்பார்க்க முடியும். பள்ளிக்கோ கல்லூரிக்கோ ஒரு முறைகூட வந்ததில்லை. மதராஸில் வருடா வருடம் புயல் வரும்போது அம்மா அப்பாக்கள் ஸ்கூலுக்கு வந்து குழந்தைகளை அழைத்துப் போவார்கள். என் அப்பா அம்மா வந்ததேயில்லை. எனக்கு அதைப்பற்றி கொஞ்சம் வருத்தம் கூட இருந்தது. அதே அப்பா டில்லிக்கு மாற்றலாகி நான் பள்ளியில் சேர்ந்து வரலாறும் ஷேக்ஸ்பியரும் படிக்க வேண்டி வந்தபோது, அவற்றையெல்லாம் எனக்குத் தெளிவாக அல்வா போல சொல்லிக் கொடுத்துவிட்டார். அப்பாவுக்கு எப்படி இங்கிலீஷில் எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிகிறது என்று எனக்கு ஆச்சிரியமாக இருக்கும்; அதே கேள்வியை இன்று என் மகள் கேட்கிறாள்.

வருஷா வருஷம் தீபாவளி வரும்போது எல்லார் வீட்டிலும் ஒரு மாதம் முன்பே ஸம்பரம் ஆரம்பித்து விடும். என் தோழிகள் பலர் வீடுகளில் தீபாவளிக்கு பட்டுப்பாவாடை வாங்குவது வழக்கம். அப்பா தீபாவளி மலர்களுக்கு நாலு கதைகள் எழுதி தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு வரும் ஊதியத்தில் எங்களுக்கு உடைகள் பட்டாசுகள் வாங்கப் போவார். அம்மாவுக்கு நூல் புடவை, எங்களுக்குக் கதர் உடுப்புகள், அவருக்கு கதர் வேஷ்டி, ஜிப்பா; இவற்றோடு பாட்டு வாத்தியார், குடும்ப வைத்தியர், நண்பர், வேலைக்காரி எல்லோருக்கும் கதர் / நூல் உடைகள். பட்டாசுக்கு மாத்திரம் குறைச்சலே கிடையாது!

அப்பா நிறைய பாடுவார். தலையில் எண்ணை தேய்த்து கொண்டு ஒரு மணி ஒன்றரை மணி நேரம் நடந்து கொண்டே பாடிக்கொண்டிருப்பார். கர்னாடக ஸங்கீதம்தான். தீட்சிதர் கிருதிகள் பலவற்றை ஸ்பெஷலாக பட்டமடை சுந்தரமய்யர் அவர்களிடம் பாடம் செய்தார். தியாகைய்யரின் பக்தி, அதற்கேற்ப ஸாஹித்யம், இசை அமைப்பு – இவற்றை பற்றி சொல்லிச் சொல்லி உருகுவார். ரேடியோவிலும் நேரிலும் நிறைய கச்சேரியும் கேட்பார். எங்கள் வீட்டில் விவிதபாரதி, ரேடியோ ஸிலோனெல்லாம் கேட்க முடியாது. மதுரை மணி, எம்.டி.ராமநாதன், ஜி.என்.பி, எம்எல்வி … காலை வேளைகளில் எப்பவும் ரேடியோ பாடிக் கொண்டிருக்கும்.

தான் சின்ன வயதில் இருக்கும்போது தனக்கு இரண்டு தொழில் பாதைகள் தெரிந்தன; ஒன்று பாட்டு; இன்னொன்று எழுத்து. தான் எழுத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், பாட்டை ஒரு ஸீரியஸ் ஹாபியாக வைத்துக் கொண்டதாகவும் கூறுவார். அக்காலத்தில் தபால்-தந்தி ஆபீஸில், இராணுவத்தில் நல்ல சம்பளத்துக்கு (நூறு ரூபாய்) வேலைகள் நிறைய இருந்தன. ஆனால் தனக்கு எழுதுவதற்கு போதிய ஓய்வு வேண்டும் என்று நாற்பது ரூபாய்க்கு பள்ளிக்கூட வாத்யாராக சேர்ந்து கொண்டேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

எனக்கு ஐந்து வயதிலிருந்து பாட்டு பயிற்சி ஆரம்பித்தது. பாட்டு கிளாஸில் அப்பாவே கொண்டு சேர்த்து விட்டார். ஆனால் நான் நன்றாகப் பாடுகிறேன் என்று ஒரு முறைகூட சொன்னதில்லை. எனக்கு அப்பாவின் முன்னால் பாடவே கொஞ்சம் பயம். அதனால் நான் பள்ளி முடித்தபோது பி.ஏ. மியூஸிக் சேர்ந்து படியேன் என்று அவர் சொன்னபோது எனக்கு ஆச்சரியம். காரணங்கள் சில சொல்லி நான் சமூகவியல் சேர்ந்தேன். அதற்கு அவர் ஆட்சேபணை ஒன்றும் சொல்லவில்லை.

ஆண் பெண் உறவு பற்றி அப்பா நிறைய எழுதினார்; அதை மிக நாசுக்காகவும், நுணுக்கமாகவும், இங்கிதமாகவும், பல கோணங்களிலிருந்தும் அணுகினார். வீட்டில் போர்னோகிராபி புத்தகங்கள் மருந்துக்குக் கூட இருக்காது. அப்பாவின் ஊக்குவிப்பில் நானும் என் அண்ணாக்களும் பல ஐரோப்பிய அமெரிக்க உலக இலக்கியங்களை ஆர்வமுடன் படித்தோம்.

அப்பா ஏன் ஆண்-பெண் உறவு பற்றி அவ்வளவு எழுதினார்? வாழ்க்கையில் அது ஒரு அடிப்படையான அம்சம்; அதை மறுத்துக் கொண்டே வாழ்வதில் அர்த்தம் இல்லை. பெண் விடுதலை என்பது உடை, உத்யோகம் அளவில் மட்டும் இல்லை; பாலியல் சுதந்திரம் (sexual freedom) பெண் விடுதலைக்கு அடிப்படையான ஒரு அம்சம் என்று அவர் நம்பினார். அதனால்தான் நான் ஒரு தெலுங்கு அப்பிராம்மணரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது, அதெல்லாம் நமக்கு சரி வராது என்று அவர் சொன்னபோது, எனக்கு ஆச்சரியமும் ஏமாற்றமுமாக இருந்தது. அதே அப்பா இரண்டு வருடம் கழித்து, அம்மாவின் பலத்த எதிர்ப்பை சமாளித்துக் கொண்டு, அம்மாவுக்குத் தெரியாமல், அண்ணாக்களை முன் வைத்து எனக்குக் கல்யாணம் செய்வித்தார். ஆனால் அம்மா மனது புண்படும் என்று அவர் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில மாதங்களிலேயே என் கணவர் எங்கள் குடும்பத்தார்க்கு (அம்மா உள்பட) நெருங்கிய நண்பர் ஆனார் என்பது வேறு ஒரு கதை.

அப்பா-அம்மா மணவாழ்க்கை ஒரு நீண்ட இனிய காதல் கதை என்று கூற முடியாது. நிறைய சண்டைகள் நடந்தன. அவை எங்களை வெகுவாக பாதித்தன. ஆனால் அம்மா இறந்துபோவதற்கு ஒரு வாரம் முன்பு ஒரு நாள் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பா தன்னை மிக மிக மரியாதையாகவும், மதிப்புடனும், அன்புடனும் நடத்தி வந்தார் என்று அம்மா சொன்னாள். அம்மா அப்பாவை முழுமையாக மன்னித்துவிட்டாள். நான் நெகிழ்ந்து போனேன்.

அப்பாவுடன் நிறைய சுற்றியிருக்கிறேன்- பாட்டுக் கச்சேரிகள், பொருட்காட்சிகள், கடற்கரை, பூங்காக்கள், மீட்டிங்குகள், திருவிழாக்கள், கோவில், குளம்… வீட்டில் தினமும் அப்பா, அம்மா, நான், அண்ணாக்களுடன் பேச்சுக் கச்சேரி நடக்கும்.. அரசியல், இலக்கியம், சினிமா, தத்துவம், விஞ்ஞானம், வம்பு எல்லாமே பேசிக்கொண்டிருப்போம். ஆனால் இலக்கியத்தில் அரசியல் பற்றி எழுதுவதை அவர் தவிர்த்தார். பிடிவாதமாக மறுத்தார். மனித வாழ்க்கை நல்லது கெட்டதுக்கு அப்பாலான சிக்கலான விஷயம். அதை நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும். நுணுக்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர் இலட்சியம். பிரசார இலக்கியத்துக்கும் அரசியல் இலக்கியத்துக்கும் அதிக தூரம் இல்லை என்று கூறுவார்.

தியான முறையில் சின்ன வயதிலேயே ஈடுபட்ட அப்பா தினமும் வெகு நேரம் தியானத்தில் உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பழகிப்போன ஒன்றாக இருந்தது. நானும் தியானம் செய்யத்தொடங்கினேன். இப்பவும் அந்த வழக்கம் தொடர்கிறது.

தூரப்பின்பார்வையில் அப்பாவின் வாழ்க்கை பனி போர்த்திய மாதிரி தெரிகிறது. இந்த கட்டுரை எழுதி கூட கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆகி விட்டன. ஞாபகபடுத்திக்கொண்டால் எழுதுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. ஆனால் எத்தனை எழுத முடியும்?

[B]சில வருடங்கள் முன்பு என் மகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கூறினாள், “அம்மா, நீ ஒரு மனிதரை மிகவும் நேசிக்கிறாய், ஆர்வத்துடன் ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறாய்; அவரைப் பற்றிப் பேசும்போது உன் முகமெல்லாம் பிரகாசமாகிப் பொலிகிறது. குரல் நெகிழ்கிறது. அது யார் தெரியுமா? உன் அப்பா!”[/B]

 
Last edited:
It's a privelege and honor to be the first one to respond to this thread.

Even I have many things to write about my human Father. He was such a great man, he possessed great potentials but sadly untapped, unharnessed. I could not have had a greater human Father. Words fail me to describe my human-Father. There is not Father who could match him. If not for my Heavenly Father, I would avoid the human prefix.
 
Status
Not open for further replies.
Back
Top