Quotable Quotes Part II


13. சாலோகம்

சிவனது உலகத்தை அடைவது சாலோக முக்தி.
அதை அடையும் விதம் இங்கு கூறப்படுகின்றது.


#1507 to #1508
#1507. சரியை சாலோகம் தரும்!

சாலோகம் ஆதி, சரியாதி யின் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையாம்
மாலோகம் சேரின் வழியாகும், சாரூபம்
பா லோகம் இல்லாப் பரன்உரு ஆமே.


சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்பவை நன்கு வகை முக்தி நெறிகள் ஆகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவை நான்கும் அவற்றை அடையும் வழிகளாகும். சரியை என்னும் நன்னெறியைப் பின்பற்றுபவர் இறைவன் வாழும் உலகத்தை அடைவார். அவன் அருகில் விளங்குவார். அவன் வடிவையும், ஒளியையும் பெறுவார். இவர் சிவபெருமானுடன் லயம் அடையாமல், அவன் வடிவைப் பெற்று, அவன் உலகில், அவன் அருகில் வாழ்வார்.


#1508. நான்கு செயல்கள்


சமயங் கிரியையில் தன்மனம் கோவில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாம்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.


சமயத்தைப் பற்றி நிற்பவர் இந்த நான்கு செயல்களைச் செய்ய வேண்டும்.

1. தான் வழிபடும் இறைவனைத் தன் மனக் கோவிலில் இருத்துவது முதல் செயல் ஆகும்.
2. இறைவனுக்கு உரிய மந்திரத்தை நினைப்பது சமயத்தில் விசேடம் என்னும் இரண்டாவது செயல் ஆகும்.
3. மூல மந்திரத்தில் தெளிவு பெறுவது மூன்றாவது செயலாகிய நிர்வாண தீட்சை எனப்படும்.
4. இறைவனை எண்ணியபடி அவனுடன் சமாதியில் கூடுதல் சமயாபிடேகம் என்னும் நான்காவது நெறியாகும்.


 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

14. சாமீபம்

இறைவனின் அருகில் தங்குவது சாமீபம்.


#1509. பாசம் பதியுடன் சேர்க்கும்

பாசம் பசுவானது ஆகும் சாலோகம்
பாசம் அருளான் அது ஆகும் சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இச்சாரூபம்
பாசம் கரைபதி சாயுச்சியமே.


சாலோக முக்தியில் பாசத் தன்மை கெடாது இருக்கும்.
சாமீபத்தில் பாசம் கட்டுப்படுத்தாத அருளாக மாறிவிடும்.
சாரூபத்தில் பாசத்தன்மை மேலும் மேன்மையைத் தரும்.
சாயுச்சியத்தில் பாசத்தன்மை குன்றி பதியுடன் இணையச் செய்யும்.



 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

15. சாரூபம்

தானும் இறைவனின் வடிவத்தைப் பெறுவது சாரூபம்.

#1510 & #1511


#1510. சாரூபம்

தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றிக் கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.


சாரூபம் என்னும் முக்தியை அட்டாங்க யோகத்தின் எட்டாவது உறுப்பாகிய சமாதியால் அடைய முடியும். ஞான நெறியைப் பற்றி நின்றவர்களே இதனை அடைய முடியும். இவர்களுக்குச் சித்தி கைகூடும் .யோகத்தால் இவர்களின் உடல் குற்றமற்றதாக மாற்றி அமைக்கப்படும்.

#1511. கயிலை இறைவனின் கதிர் வடிவம்

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவனின் கதிர்வடி வாமே.


மேருமலையைச் சார்ந்த உடனேயே பொருட்கள் அனைத்தும் மேருவின்
பொன்னிறத்தை அடைந்துவிடும். அதைப் போலவே அரனின் அன்பர்கள் அவன் நாதத் தத்துவத்தில் விளங்குகின்ற குரு மண்டலத்தை அடைந்தவுடனேயே கயிலை இறைவனின் கதிர் வடிவினைப் பெற்று விடுவர்.



 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

16. சாயுச்சியம்

16. சாயுச்சியம்
இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவது சாயுச்சிய முக்தி.

#1512 & #1513


#1512. சாயுச்சியமே சிவானந்தம்!

சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவன் தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சி யமே.


முதல் நிலை சைவம் என்பது சிவனுடன் பொருந்தி நிற்றல் ஆகும்.

இரண்டாம் நிலை சைவம் சிவதத்துவத்தை அறிந்து கொண்டு சிவபெருமானுடன் விளங்குதல்.

மூன்றாம் நிலை சைவம் என்பது சமாதியில் சிவனுடன் பொருந்தாமலேயே, சிவன் தன்னிடம் ஒளிர்வதை மட்டும் நன்றாக உணர்ந்து கொள்ளுதல்

நான்காவது நிலை சைவம் என்பது சமாதி நிலையில் முற்றிலுமாகச் சிவத்துடனேயே பொருந்திச் சிவானந்தப் பேற்றினை அடைவது.

இதுவே அனைத்திலும் உயர்ந்த சாயுச்சிய முக்தி எனப்படும்.

#1513. சாயுச்சியமே பேரின்பம்!

சாயுச்சியம் சாக்கிரதீதம் சாருதல்,
சாயுச்சியம் உபசாந்தத்துத் தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலாச்
சாயுச்சியம் மனத்து ஆனந்த சக்தியே.


தன்னை மறந்த சாக்கிர அதீத நிலையைச் சாருதல் சாயுச்சியம்.

விருப்பு வெறுப்புக்களைக் கடந்த நிலையை அடைவது சாயுச்சியம்.

சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றி விடுதல் சாயுச்சியம்.

எல்லை இல்லாப் பேரின்பத்தில் திளைப்பது சாயுச்சியம்.





 

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

17. சக்தி நிபாதம்

சக்தி நிபாதம் = சக்தி நன்கு பதிவது.


ஆன்மா விளக்கம் அடையாத வண்ணம் அதைக் கட்டுபடுத்தும் மலங்களை அழித்து அங்கு அருளைப் பெருக்கும் சக்திகள் பதிவது. அருள் பதிவதற்கு ஏற்ப அறிவு ஒளி வீசத் தொடங்கும். இது நான்கு வகை மனிதர்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.


1. மந்தம் = குறைந்த அறிவை உடையவன்


2. மந்தர தரம் = மந்தமாக இருந்தாலும் மந்திரங்களை உபாசிப்பவன்


3. தீவிரம் = யோகப் பயிற்சி செய்பவன்


4. தீவிர தரம் = ஞானநெறியைப் பின்பற்றுபவன்.


#1514 to #1517
#1514. மணம் புரிந்தாள்

இருட்டறை மூலை இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி
மருட்டியவனை மணம் புரிந்தாளே.


சுவாதிட்டானதுக்கும் கீழ இருக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி இருளாகிய அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆன்மாவுக்கு ஞானம் ஏற்படுத்த விரும்புவாள். ஆன்மாவின் அஞ்ஞானத்தை அகற்றிப் பசு, பதி, பாசம் இவற்றின் இயல்புகளை அறிந்து கொள்ளும் ஆவலை ஆன்மாவுக்கு ஏற்படுத்துவாள். சீவனைச் சிவத்துடன் சேர்க்க முயற்சி செய்வாள்.

#1515. பந்தம் தெளிவு இரண்டும் தரும்

தீம்புனல் ஆன திசைஅது சிந்திக்கில்
ஆம்புலனாய் அறிவார்க்கு அமுதாய் நிற்கும்,
தேம்புனலான தெளிவு அறிவார்கட்குக்
கோம்புனல் ஆடிய கொல்லையும் ஆமே.


சீவர்களுக்கு இன்பத்தைத் தருவது மூலாதாரம். அதுவே சிவனைச் சிந்தனை செய்பவர்களுக்கு அவனை அறியும் இடமாக மாறிவிடும். அதன் பின் அமுதம் போல இனிக்கும். தேன் புனல் போன்று அறிவில் தெளிவு பெற்றவர்களுக்கு மூலாதாரம் பசுக்கள் இன்பமாக மேயும் கொல்லைப் புறமாக மாறிவிடும்.

#1516. பொருள் நீங்கா இன்பம் பொருந்தும்

இருள் நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனொடும்
பொருள் நீங்கா இன்பம் புலம்பயில் தானே.


ஆணவம் என்னும் இருளால் சீவன் எடுக்கும் எண்ணற்ற பிறவிகளைக் கடக்க உதவுவாள் ஆதி சக்தி. அண்ணலின் திருவருள் சீவனிடமிருந்து என்றும் நீங்காத வண்ணம் அவள் காப்பாள். விண்ணவர்கள் ஆனபோதிலும் மருள் நீங்கப் பெறாத அமரர்களின் தலைவன் ஆன சிவத்துடன், சீவன் பொருந்தி விந்து கெடாமல் இன்பம் துய்க்கும் இடம் மூலாதாரம்.

#1517. அப்பனும் அம்மையும் அருளுவர்

இருள் சூழ் அறையில் இருந்தது நாடின்,
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தாற்போல்
மருள் சூழ் மயக்கத்து, மாமலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.


இருள் சூழ்ந்த அறையாகிய மூலாதாரத்தில் குண்டலினி சக்தி இருந்ததன் காரணத்தை ஆராய்ந்தால் அப்போது பொருள் சூழ்ந்த அறையில் விளக்கு எரிவது போல மாற்றங்கள் நிகழும். ஆணவம் என்ற இருள் சூழ்ந்த மயக்கம் தெளிந்து அம்மையும், அப்பனும் குரு மண்டலத்தில் அருளுடன் வெளிப்படுவர்.



 
#1518 to #1521
#1518. மந்த தரம்

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானமது புரிந்தாளே.

ஆன்மா ஆணவ மலத்தின் தொடர்பால் மயங்கி இருக்கும் நிலையைப் போக்குவாள் குண்டலினி சக்தி. வினைப்பயன்களை விலக்கி விடுவாள். இன்பம் விளைவிப்பாள். அறியாமையை அகற்றுவாள் சிவனின் அருட்குணங்களை விளங்கச் செய்வாள். ஆன்மா அருள் மயமான ஞான சக்தியாக விளங்கச் செய்வாள்.

#1519. பிறவிப் பிணி இல்லை

கன்னித் துறை படிந்தாடிய ஆடவர்
கன்னித் துறை படிந்தாடுங் கருத்திலர்
கன்னித் துறை பதிந்தாடும் கருதுண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.


பெண்ணுடன் பொருந்தும் ஆடவர் குண்டலினியின் ஆற்றலை மாற்றி அமைக்கும் வழியினை அறிந்து கொள்ளவில்லை. ஆண், பெண் கூட்டுறவைத் தெய்வக் கூட்டுறவாக மாற்றி அமைக்கும் வழியை அறிந்து கொண்டவருக்கு இனிமேல் பிறவிப் பிணி என்பது இல்லை.

#1520. அக்கினிக் கலையில் விளங்குவான்

செய்யன், கரியன், வெளியன்நற் பச்சையன்
எய்த உணர்தவர் எய்வர் இறைவனை
மைவென்று அகன்ற பகடு உரி போர்த்தவெங்
கையன் இவன் என்று காதல் செய்வீரே.


சுவாதிட்டானம் என்னும் நிலத்தில் விளங்கும் நான்முகன், மணி பூரகத்தில் விளங்கும் கரிய திருமால் , மற்றும் உருத்திரன், மகேசுரன், சதாசிவன் இவர்களை நன்கு அறிந்து கொள்பவர் இறைவனை அடைவர். மையை வெல்லும் கரிய நிறம் கொண்ட, உயர்ந்து அகன்ற, கரிய பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு அக்கினிக் கலையில் விளங்குபவன் நம் இறைவன்

#1521. ஞானம் விளையும்

எய்திய காலங்கள் எத்தனை ஆனாலும்
தையலும் தானும் தனி நாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமம் செய் காட்டது ஆமே.


இந்த உலகத்தில் தோன்றிய உயிர்கள் எத்தனை முறை அழிந்து, அழிந்து தோன்றினாலும், என்றுமே அழியாத பொருட்களாக விளங்குவது சிவமும் சக்தியும் மட்டுமே. விடியற் காலையில் தம்மை வணங்குபவர்களின் சுழுமுனையில் வந்து பொருந்துவர் சிவசக்தியர்.
 
#1522 to #1525

#1522. இருள் நீங்கும்

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டு பண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டு கொண்டாடும் மலர்வார் சடை அண்ணல்
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே.


உடலில் விளங்கும் கதிரவன், மதி என்னும் இரண்டையும் தொடர்ந்து சென்று உடலில் உள்ள ஒளியைக் கண்டு கொண்டோம். அது பண்டு தொட்டு உடலில் விளங்கும் பரமசிவன் என்னும் பேரொளிப் பிழம்பில் சென்று கலந்தது. வண்டுகள் கொண்டாடும் தாமரை மலர் போன்ற சகசிர தளத்தில் அண்ணலைக் கண்டு கொண்டவர்களில் மன இருட்டை அவனே மாற்றி அமைப்பான்.

#1523. சிவன் என்னும் கனி

அண்ணிக்கும் பெண்பிள்ளை, அப்பனார் தோட்டத்தில்
எண்நிற்கும் ஏழ்ஏழ் பிறவி உணர்விக்கும்
உள்நிற்பது எல்லாம் ஒழிய, முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனி அது ஆமே.


குண்டலினி சக்தி உலக இயலில் விஷயானந்தமான இன்பத்தைத் தரும். அதுவே அனைவருக்கும் அப்பனாகிய சிவபெருமானின் தோட்டமாகிய சகசிரதளத்தில் அளவைக் கடந்து நிற்கும். ஏழேழு பிறவிகளை உணர்த்தும். நல்வினைப் பயன்கள் தீவினைப் பயன்கள் என்னும் இரண்டையும் அழிந்துவிடும். அப்போது சீவன் சிவனைக் கண்டு அவனுடன் பொருந்திச் சிவக்கனியின் சுவையாக மாறி விடலாம்.

#1524. பெருந்தவம் நல்கும்!

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கும்
மறுப்பை யாருக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலைக் கோமளவல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே.

குவிமுலைக் கோமள வல்லியாகிய குண்டலினி சக்தி, சிறப்பாகத் தன்னை வணங்குபவர்களின் பிறவிப் பிணியை நீக்குவாள். பெருந் தவத்தைத் தருவாள். அறியாமையை அகற்றுவாள். தன்னை வணங்ககச் செய்வாள்.

#1525. குண்டலினியினை ஏன் வணங்க வேண்டும்?

தாங்குமி னெட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரு மறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.


எட்டுத் திசைகளுக்கும் தலைவன் ஆனவன் சிவன். ஆறு ஆதாரங்களில் விளங்கும் அழகிய தாமரை மலர்களை மாலையாகக் கொண்டு, சித்ரணி நாடியில் விளங்கும் குண்டலினி சக்தியுடன் பொருந்தி அவனைத் துதியுங்கள். அவ்வாறு செய்தால் அப்போது தோன்றும் நீல நிற ஒளியைப் பின்தொடர்ந்து அருள் பெற முடியும்.
 

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1526 to #1529

#1526. தீவிர பக்குவம்


நணுகினும், ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பான் மலர்த் தூவிப் பணிவன்
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியும் ஆமே.


இவ்வாறு சக்தியின் அருள் பெற்ற ஒருவனை நாடும் அனைவருமே அவனைப் போல ஞானம் பெறுவார். அனைவரும் தன்னை வணங்கினாலும் அவன் அன்னையை மலர்த் தூவி வழிபடுவான். தன்னை எல்லோரும் வணங்குவதால் ஆணவம் கொள்ள மாட்டான். எப்போதும் சமத்துவ நிலையில் இருப்பான். அவன் எந்த உலகுக்கும் சென்று வரும் ஆற்றலை அடைவான்.


#1527.
தீவிர தரம்

இருவினைநேர் ஒப்பில் இன்னருட்சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தரும் எனும் ஞானத்தால் தன் இயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து, சிவன் அவன் ஆமே.


நல்வினை, தீவினை இரண்டும் சமமாக உள்ளபோது அருட்சக்தி குரு மண்டலத்தில் விளங்குவாள். ஆன்மா மெய்யறிவு பெறாமல் தடுக்கும் குணங்களைப் போக்குவாள். தன் முனைப்பு அற்று எல்லாம் அவன் செயல் என்று இருப்பவனின் மும்மலமும் கெடும். அவன் சிவமாகத் திகழ்வான்.


#1528. அருளாட்சி அமையும்


இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம் செய்யாமல் அவளோடு சேர
பரிவு ஒன்றில் ஆளும் பராபரை தானே.


விந்து, நாதங்களைக் கடந்த நாதாந்தத்தில் ஒலியை உண்டாக்கும் சக்தியைத் தியானிக்க வேண்டும். மந்திரம் இல்லாத நாதந்தத்தில் அந்த சக்தியுடன் பொருந்தினால் அவளும் அன்போடு இவனிடம் வந்து பொருந்துவாள்.


#1529. ஊனை விளக்கி உடன் இருப்பா
ன்

மாலை விளக்கும், மதியமும், ஞாயிறும்
சால விளக்கும் தனிச் சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன் என்னுள் புகுந்து
ஊனை விளக்கி, உடன் இருந்தானே.


கதிரவன், மதி போன்ற ஒளிரும் பொருட்களுக்கு ஒளியைத் தருபவன் சிவன். ஒப்பில்லாத, பரஞ்சுடர் ஆகிய சிவன் உண்மை ஞானத்தை எனக்கு விளக்கிய தலைவன் ஆவான். அவன் என் ஊனை விளக்கி என் உயிருடன் பொருந்தினான்



 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

18. புறச்சமய தூஷணம்

புறச் சமயம் = அயல் சமயம்.

இறைவனைப் புறத்தில் காண வேண்டும் என்று கூறும் சமயம்.


#1530 to #1534

#1530. பாசத்தில் உற்று பதைப்பார்

ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா,
மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.


ஆறு விதமான சமயங்களும் நம் உடலினுள் உறையும் கடவுளைக் காண உதவுவதில்லை. அந்தச் சமயங்களைப் பின்பற்றுபவர்கள் மயக்கத்தைத் மாயக் குழியில் விழுவர். மனைவி, மக்கள் என்னும் பாசத்தில் கட்டுண்டு மனம் பதைபதைப்பர்.


#1531. உள்ளத்தே கரந்து நிற்பான்


உள்ளத்து உளே தான் கரந்து, எங்கும் நின்றவன்,
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்து அறியார்களே.


எங்கும் நிறைந்தவன் இறைவன். எனினும் ஒவ்வொரு உயிரின் உள்ளத்தில் உள்ளே ஒளிந்து மறைந்து உறைவான். அவன் ஒரு சிறந்த கொடை வள்ளல். சகசிரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரையில் சக்தியுடன் தானும் பொருந்தி நிற்பான். ஒன்பது வாயில்களைக் கொண்ட உடலில் புகுந்து கொண்டு மேல் நோக்கிச் செல்லும் அந்தக் கள்ளத் தலைவனின் செயல்முறைகளை இந்த உலகத்தவர் எவருமே அறிந்து கொள்ளவில்லை.


#1532. பற்றற்றவனைப் பற்றிடல் வேண்டும்!


உள்ளது முள்ளன் புறத்துள னென்பவர்க்கு
உள்ளது முள்ளன் புறத்துள னெம்மிறை
உள்ளது மில்லை புறத்தில்லை யென்பவர்க்கு
உள்ளது மில்லைப் புறத்தில்லை தானே.


உள்ளத்தில் உள்ளான் இறைவன் என்னும் அன்பரின் உள்ளத்தில் இருந்து அருள் புரிவான் இறைவன். புறத்தே இருந்து உயிர்களை நடத்துவான் இறைவன் என்ற பேதமான ஞானம் உடையவருக்கு அவரிலும் வேறாக நின்று அருள் புரிவான் இறைவன். உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களுக்கு அவன் இரண்டு இடங்களிலுமே இருப்பதில்லை.


#1533. தெளிந்த பின் மனை புகலாம்


ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனவன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின்
மாறுத லின்றி மனை புக லாமே.


ஆறு சமயங்களையும் உணர்ந்தவர் இறைவனை உண்மையாக உள்ளது உள்ளபடி அறிந்துகொண்டவர் அல்லர். ஆறு சமயங்கள் கூறும் முடிவான மெய்ப் பொருள் அவன் அல்ல என்பதும் மெய். எனவே நீங்கள் இறைவனைப் பற்றி நன்கு ஆராயுங்கள். ஆராய்ந்து தெளிவு பெறுங்கள். தெளிவு பெற்றால் வீடு பேற்றை மிக எளிதில் பெற்றுவிடலாம்.


#1534. நந்திதாள் சார்வது உய்விக்கும்


சிவம் அல்லது இல்லை, அறையே, சிவமாம்
தவம் அல்லது இல்லை, தலைப்படு வோர்க்கு இங்கு,
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்.
தவம் அல்ல, நந்திதாள் சார்ந்து உய்யும் நீரே.


சிவனை விடச் சிறந்த தெய்வம் என்று ஒன்று இல்லை. ஆன்மாவில் கரந்து மறைந்து உறையும் சிவனை அறிந்து கொள்வதே சிறந்த தவம் ஆகும். வேறு எதுவுமே தவம் அல்ல. இதை அறியாமல் ஆறு சமயங்களிலும் சிறப்பினை அடைய விரும்புபவர்களுக்கு அவை எல்லாம் வீணே. தவத்தின் பயனை அடையக் குரு மண்டலத்தில் விளங்கும் சிவத்தைக் கண்டு கொண்டு உய்வடைவீர்!







 
#1535 to #1539

#1535. மண் நின்று ஒழியும் வகை

அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவராக மிகவும் விரும்பியே
உள் நின்று அழிய முயன்றிலர் ஆதலால்,
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.

ஆறு சமயங்களின் நெறிகளில் நின்று கொண்டு அண்ணலைத் தேடுபவர்கள், விண்ணவர்களாகும் விருப்பம் கொள்வர். அதனால் அவர்கள் இறைவனை அறிந்து கொள்ளாமல், பிறவிப் பிணியை ஒழிக்காமல் மயக்கம் கொண்டு அழிவர்.

#1536. சிவகதியே கதி !

சிவகதி யேகதி மற்றுள்ள வெல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னோடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.

சிவநெறியே அனைத்திற்கும் மேலான நெறியாகும். பிற நெறிகள் எல்லாமே பிறவியைத் தரும் நெறிகள். அவற்றைச் சார்ந்தால் பாசத்தினால் உண்டாகும் சம்சாரத் தளைகள் விலகா! சீவனின் உள்ளத்தில் சிவனின் ஒளி தோன்றுவதே சிறந்த தவ நெறியாகும். மும் மூர்த்திகளாகிய நான்முகன், திருமால், உருத்திரன் என்பவர்களும் பிறவியை அளிக்கின்ற தெய்வங்களே அன்றிப் பிறவியை அழிக்கின்ற தெய்வங்கள் அல்ல.

#1537. சிவநெறியே பரநெறி!

நூறு சமயம் உளவாம்; நுவலுங்கால்
ஆறு சமயம் அவ் ஆறுள் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
ஈறு பறநெறி இல்ஆம் நெறி அன்றே.


பல நூறு சமயங்கள் உலகில் நிலவுகின்றன. ஆறு சமயங்களும் அந்த நூறு சமயங்களில் அடங்கும். எல்லா சமயங்கள் கூறும் நெறிகளிலும் சிறந்தது சிவநெறியாகும். இது ஒன்றே முக்தியைத் தரும் நன்னெறியாகும்.

#1538. பித்தேறிப் பிறந்திறப்பர்!

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்கும் தொய்வுற்று நிற்கின்றான்
குற்றந் தெரியார் குணக் கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப்பாரே.


பொருள் அறியாத மூடர்கள் கத்தும் கழுதைகளுக்கு சமம் ஆனவர்கள். எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவன் சிவன் என்ற போதிலும் இவர்கள் தம் குறைகளை நீக்க முயற்சி செய்வதில்லை. சிவன் பெருமைகளை எண்ணிப் புகழ்ச்சி செய்வதும் இல்லை. உண்மையை அறிந்து கொள்ளாமல் இவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துயரம் அடைவர்.

#1539. பயம் கெட ஒரு பரநெறி

மயங்குகின்றாரும், மதி தெளிந்தாரும்
முயங்கி, இருவினை முழைமுகப் பாச்சி
இயங்கி பெறுவரேல், ஈறு அது காட்டில்
பயம் கெட்டவருக்கு ஓர் பறநெறி ஆமே.

பக்தி நெறியில் மயங்கி நிற்பவர்களும், ஞான நூல்களைக் கற்று மதி தெளிந்தவர்களும், இருவினைப் பயன்களை அனுபவித்து, அதன்பின் சுழுமுனை வழியே மேலே சென்று, அங்குள்ள பிரமரந்திரத்தில் இறையருளைப் பெறுவதே, பிறவிப் பிணியைப் பற்றிய பயம் கெடுவதற்கு உள்ள ஒரு பரநெறியாகும்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1540 to #1544

#1540. காயம் விளைக்கும் கருத்து

சேயன் அணியன், பிணி இலன், பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு;
மாயன், மயக்கிய மானிடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே.

சிவன் தன்னைத் தொலைவில் இருந்து வந்து வணங்குபவர்களுக்கும், அருகில் இருந்து வந்து வணங்குபவர்களுக்கும் அருள் புரிபவன்; பாசப் பிணிகள் நீங்கியவன்; அவன் பேர் நந்தி; அவன் மனத்தை ஒரு நிலையில் நிறுத்தி அவனைத் தொழுபவர்களுக்குத் தூய பேரொளியாகத் தோன்றுவான். மாயையில் மயங்கி நிற்பவர்களுக்குப் புலப்படான். மாயையில் மயங்கி நிற்கும் மனிதர்கள் இந்த உடல் எடுத்த பயனை அறிய மாட்டார்கள்.

#1541. பழி நெறியும், சுழி நெறியும்

வழிஇரண் டுக்கும் ஓர்வித்து அதுவான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழிஅறி வாளன் தன் சொல் வழிமுன் நின்று
அழிவு அறிவார் ,நெறி நாட நில்லாரே.


பழி நெறி வழி வாழ்பவர் உலகில் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துயர் உறுவர். சுழி நெறி வாழ்பவர் பிறவிப் பிணியை ஒழித்து விடுவர். இந்த இரு வழிப்பட்டவர்களுக்குமே கிடைத்துள்ள உடல் ஒரு அரிய வித்து ஆகும். பிரமரந்திரத்தை அடைந்து பிறவா வரம் பெறும் வழியினை அருளும் குருவின் மொழிப்படி வாழ்ந்து சீவன் பரந்த வெளியுடன் கலந்து விடுவதே சுழி நெறியாகும்.

#1542. இறைவன் வெளிப்படுவான்

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர்,
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே ‘பிரான்’ என்று கைத் தொழில்
ஆதியும் அந்நெறி ஆகி நின்றானே.


பெருந் தவசீலர்கள் மகாதேவனைத் தம்மைச் செலுத்தும் பிரான் என்று கூறி வழிபடுவர். அவன் குரு மண்டலத்தில் நாத வடிவாகத் தோன்றுவான். அவனை வீணாத் தண்டியின் வழியாக வழி பட்டு நின்றால் அவனும் அந்த நெறியின் வழியே தன்னை வெளிப்படுத்துவான்.

1543. பரன் அருள வேண்டும்

அரநெறி அப்பனை, ஆதிப் பிரானை,
உரநெறி ஆகி வந்து உள்ளம் புகுந்தானை
பரநெறி தேடிய பக்தர்கள் சித்தம்
பரன் அறியாவிடில் பல்வகை தூரமே.


அனைத்து சமயங்களுக்கும் தலைவன் ஆனவனை; எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவனை; சிறந்த பக்தி நெறியில் வழிபடுபவர்களின் உள்ளம் தேடிவந்து குடி புகுபவனை;மேலான நெறியை விரும்பித் தொழும் பக்தர்களின் சித்தத்தை அறிந்து கொண்டு அவன் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள வேண்டும். அன்றேல் அவர்களால் உண்மையை அறிய முடியாமல் போய் விடும்.

#1544. துரிசு அற நீ நினை!

பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

சீவர்களின் தன்மையை நன்கு அறிந்தவன்; தன்னை விரும்பியவரை ஆதரிக்கும் உயர்ந்த பண்பு உடையவன்; கதிரவன் போல ஒளி வடிவானவன்; வானவர் பெற்றுள்ள அனைத்துப் பேறுகளுக்கும் பெருந் தலைவனாக உள்ளவன்; அவனைக் குறித்து நீ ஐயங்களை அகற்றிச் சிந்தனை செய்வாய்! தூய மணியினைப் போல ஒளி வீசும் அவன் வைத்த அற நெறிகள் அரிய நெறிகள் ஆகும்.
 
#1545 to #1549

#1545. கானம் கடந்த கடவுளை நாடுமின்!

ஆன சமயம் அதுஇது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி ;
கானம் கடந்த கடவுளை நாடுமின்
ஊனம் கடந்த உருவது ஆமே.

“இந்தச் சமயம் சிறந்தது! அந்தச் சமயம் சிறந்தது!” என்று கூறும் மக்களின் மயக்கும் சூழலை விட்டு நீங்கி மயக்கம் நீங்குவீர். நாதாந்தத்தில் உள்ள சிவபெருமானை நாடுங்கள். பஞ்சபூதங்களால் ஆன ஊன் உடம்பினை ஒழித்துப் பிரணவ உடல் பெறும் வழி அதுவே ஆகும்.

#1546. சென்னெறி செல்லாது திகைப்பது ஏன் ?

அந்நெறி நாடி அமரரும் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
முன்னெறி நாடி முதல்வனரு ளிலார்
சென்னெறி செல்லார் திகைகின்ற வாறே.


அமரர்களும், முனிவர்களும் சிவநெறியே சிறந்தது என்று அறிந்து கொண்டு சிவமாகும் பேற்றினைப் பெற்றனர். முதல்வனாகிய சிவபெருமான் அருளைப் பெற விரும்புபவர் செல்ல வேண்டிய நெறியில் செல்லாமல் திகைத்து நின்று மக்கள் வகுத்த வேறு பிற நெறிகளைப் பின் பற்றிச் செல்வது ஏன்?

#1547. உள் நின்ற சோதி

உறும் ஆறு அறிவதும், உள் நின்ற சோதி
பெறும்ஆறு அறியின் பிணக்கு ஒன்றும் இல்லை;
அறும் ஆறு அதுவானது அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.

நாம் அடைய வேண்டிய நெறியை அறிந்து கொண்டு, உயிரில் உயிராய்ச் சுடர் விட்டு உள் நிற்கும் அந்த அரிய சோதியைப் பெற முயற்சித்தால் பிணக்கு எதுவும் இல்லை. நம் கர்மங்களைத் தொலைக்கும் வல்லமை கொண்ட அந்தச் சிவசோதியில் கலந்து நின்று சுய போதம் கழிவதை மக்கள் அறிந்து கொள்ளவில்லை எனில் இவர்கள் அறிவற்ற ஏழைகள் தாமே.

#1548. வழி நடக்கும் பரிசு

வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு, வையம்
கழி நடக் குண்டவர் கற்பனை கேட்பர்,
சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப்
பழி நடப்பார்க்குப் பரவலும் ஆமே.

இறைவனை அடையும் வழி என்று ஒன்று உண்டு. உலக இன்பத்தில் விருப்பம் கொண்டு ஒழுகுபவர் தான் பிறர் கூறுகின்ற கற்பனைக் கதைகளைக் கேட்பர். பிறவி என்னும் சுழலில் அகப்பட்டுக் கொள்ளும் துன்பத்தைப் போக்கி, உலக இன்பத்தைப் பழித்து நடப்பவர்கள் பிறரால் போற்றப் படுவார்.

#1549. உம்பர் தலைவன் முன் ஆவான்

வழி சென்ற, மாதவம் வைகின்ற போது
பழி சொல்லும் வல்வினைப் பற்று அறுத்து, ஆங்கே
வழி செல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.

சிறந்த சிவநெறியைப் பின்பற்றி அதில் நன்கு நிலை பெற வேண்டும். பழி பாவங்களில் செலுத்தும் வலிமை வாய்ந்த வினைப் பயன்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். அந்த வினைகளில் வழியே ஒழுகும் தீவினையாளர்களையும் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். பிரமரந்திரத்தின் வழியே மேலே செல்பவர்களுக்குத் தேவர்களுக்குத் தேவனாகிய சிவன் வெளிப்படுவான்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

19. நிராகாரம்

19. நிராகாரம்

நிராகாரம் என்றால் வடிவம் இல்லாதது என்று பொருள். அருவமான உயிரில் அருவமாக இறைவன் கலந்திருப்பதைப் பற்றிக் கூறும் இந்தப் பகுதி.


#1550 to #1552


#1550. கலந்து நிற்பான்

இமயங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமைவு அறிந்தோம் என்பர் ஆதிப் பிரானும்
கமை அறிந்தாருள் கலந்து நின்றானே.


உயர்ந்த தெய்வத் தன்மை பெற்றவர்கள் தத்தம் இயல்புக்கு ஏற்ப ஆறு சமயங்களைப் உருவாக்கினர். அவர்கள் சாத்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்துச் சமயங்கள் அமைவதை அறிந்து கொண்டோம் என்பார்கள். ஆனால் சிவன் பொறுமையுடனும் அடக்கத்துடனும் உள்ள ஞானியர் உள்ளத்தில் மட்டுமே கலந்து நிற்பான்.

#1551. நினைக்காதவர் ஏங்கி அழுவர்

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ண நினைவு செய்யாதவர்
ஏங்கி யுலகி லிருந்தழு வாரே.


அன்பர்களின் அறிவு மண்டலம் என்னும் பொன்னொளி மண்டலத்தில் பொருந்தியுள்ள, கொன்றை மலர் சூடிய சிவபெருமானைத் தன்னிலும் வேறாகக் கருதாமல் நினைப்பவர் அவனுக்கு நிகராக ஆகி விடுவர். சிவனைத் தன்னிலும் வேறாகக் கருதி அவனை நினையாமல் இருப்பவர்கள் உலகில் உழன்று துன்புற்று ஏங்கி அழுவர்.

#1552. பெருந்தன்மை நல்குவான்

இருந்தழு வாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவ மேற்கொண் டங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

துன்புற்று அழுபவர்களும், நல்ல இயல்புகளை இழந்து விட்டவர்களும், பெருமையுடைய சிவனை தியானித்து அருந்தவ வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அப்போது சிவன் அவர்கள் துயரங்களைப் போக்கி வருத்தத்தை நீக்குவான். பிறப்பிலியாகிய சிவன் அவர்களுக்குப் பெரிய தகுதிகளையும் நல்குவான்.



 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1553 to #1556

#1553. கார்முகில் போல் உதவுவார்.

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பார்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே
.

‘இறைவன் எங்கோ தொலைவில் இருக்கின்றான்’ என்று எண்ணி அவனை வணங்குபவர், அவன் தன்னுடனேயே துணையாக இருந்து தனக்கு வேண்டியவற்றைத் தருவதை அறிந்து கொள்வதில்லை. உலகில் உள்ள பொருட்களையும், அவை தரும் இன்பத்தையும் விரும்புபவர்கள், அதன் வினை பயனையும் அடைந்து வருந்த நேரிடும். அறியாமையில் அழுந்திய இந்த இரு சாராரும் பிறவிக் கடலில் விழுவர். சிவன் எப்போதும் தன்னை விட்டு அகலாமல் இருப்பவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் கைம்மாறு கருதாத கார்முகில் போல உலகத்துக்கு நம்மை புரிபவர்கள்.

#1554. சேவடி நினைகிலர் !

அறிவுடன் கூடி யழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறியது கண்டும் கொடு வினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.


பிரணவம் என்னும் தோணி, சீவன் அறிவுடன் கூடிச் சிவனை அறிந்து அவனை அனுபவிப்பதற்கு உதவுகின்றது. அந்தச் சிவம் என்னும் பேரொளியாகிய தூண் வினைப் பயன்களைச் சேமிக்கும் காரண உடலை அழிக்க வல்லது என்ற உண்மையை அறிந்திருந்தும் கொடு வினையாளர்கள் சிவனின் சேவடியை நினைப்பதில்லையே!

#1555. தொழுபவருக்குச் சிவப் பேறு!

மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனித ரிகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப் பட லாமே.


மன்னும் சிவன் மனத்தோடு பொருந்திய பரம் பொருள் என்ற போதிலும், அதனை உணராமல் அவனை இகழ்பவர்கள் அறிவில்லாத ஏழைகள் ஆவர். உண்மையான செல்வமாகிய சிவனை இகழாமல், அவன் சிறப்பினை உணர்ந்து கொண்டு, அவனை உள்ளத்தில் இறுத்தி வணங்குங்கள் . அப்போது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சிவத்தினை உணர்ந்து சிவப் பேற்றினை அடைய முடியும்.

#1556. நீங்காச் சமயம் நின்று ஒழிவர் !

ஓங்காரத்து உள்ளொளி உள்ளே உதயம் உற்று,
ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார்,
சாம்காலம் உன்னார், பிறவாமை சார்வுறார்,
நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந் தார்களே.


மயக்கம் தரும் சமயங்களைச் சார்ந்தவர்கள் பிரணவத்தின் உள்ளே ஒளிரும் சிவனைக் காணார்; தன் தனித் தன்மை கெட்டு அவனுடன் ஒன்றாகச் சேரார் ; உடல் அழியும் என்ற உண்மையை அறியார்; பிறவிப் பிணியை ஒருநாளும் ஒழியார்.

 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

20. உட்சமயம்

20. உட்சமயம்

சீவன் சிவசோதியை அறியச் செய்வது .
சன்மார்க்கம் என்னும் ஒளிநெறி இதுவே.

#1557 to #1560

#1557. ஆறு சமயங்களும் அவனை நாடும்

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்,
சமையங்கள் ஆறும் தன் தாளினை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதிப் பிரானே
.

உடல், கருவிகள் ,கரணங்கள் முதலியவற்றைத் தந்து விண்ணவர்களையும் , மண்ணவர்களையும் உலகில் பொருந்தி அனுபவம் பெறுமாறு செய்தவன் சிவன். அவன் மிகவும் பழமையானவன். ஆறு சமயங்களும் அவன் திருவடியை நாடுகின்றன .அவன் அவற்றில் கலந்து விளங்குவதால் அவனே அனைத்துக்கும் முதல்வன் ஆவான்.

#1558. குன்று குரைக்கும் நாய்

ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்குள்,
என்றது போல, இரு சமயமும்
நன்று இது, தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தாரே

ஒரே ஊருக்குச் செல்வதற்கு ஆறு வேறு வேறு வழிகள் உள்ளன. அதைப் போலவே ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைவிக்கின்றன. அவற்றில் இது நன்று இது தீது என்று உரைக்கும் அறிவிலிகள், குன்றை நோக்கிக் குரைக்கும் நாயைப் போன்றவர்கள்.

#1559. வையத் தலைவனை அடைந்து உய்வீர்

சைவப் பெருமைத் தனிநாயகன் தன்னை,
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை, இன்பம் செய்
வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே.

உய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியது என்ன ?
பெருமை வாய்ந்த சைவ சமயத்தின் ஒப்பற்ற தனித் தலைவனான சிவனை வந்து அடைய வேண்டும்.
உயிர்களை உய்விக்கும் ஒண் சுடர் சோதியான சிவனை வந்து .அடைய வேண்டும். மெய்யறிவு பெற்ற அடியார்களுக்கு அன்பன் ஆன சிவனை, இந்த வையத்தின் ஒரே தலைவனை வந்து வணங்க வேண்டும்.

#1560. பழ வழி நாடுவீர்

சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழவழி நாடி,
“இவன் அவன் ” – என்பது அறியவல்லார்கட்கு

அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே.

உயிர்கள் உய்யும் பொருட்டுச் சிவபிரான் ஒரு தெய்வநெறியை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் பழமையான வழியில் சென்று இந்த சீவனே அந்தச் சிவன் என்னும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது சிவன் அந்த வழியில் செல்லும் சீவனுக்கு அங்கு தவறாமல் தோன்றுவான்




 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1561 to #1564

#1561. ஆதார சக்தி தாங்குவாள்


ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்குப்
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம்ஆம் வழி ஆக்கும் அவ்வேறு உயிர்கட்குப்
போம் ஆறு; அவ் ஆதாரப் பூங்கொடியா ளே.


சீவர்கள் உய்யும் வழிகளை உரைக்கும் ஆறு சமயங்களின் உச்சியைச் சீவர்கள் தாமாக ஏறி அடைந்து விட முடியாது. அவர்கள் முன்பு நல்வினைப் பயன்களே அவர்களுக்கு அந்த வழியை அமைத்துத் தரும். அப்படி மேலே செல்லும் சீவர்களைத் தாங்குவது ஆதார சக்தியின் திருவருள் என்று அறிவீர்.


#1562. தனிச் சுடர் தரும் நெறி


அரநெறி யாவ தறித்தேனு நானுஞ்
சிலநெறி தேடித் திருந்தவந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.


சிவனை அடையும் வழிகளை அறிந்து கொண்டு நான் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்தேன். அந்த நாட்களில் உண்மையான நல்ல நெறியில், எண்ணங்கள் என்னும் கடலை நீந்திக் கடந்து கரை ஏற எனக்கு உதவி செய்தது நிகரற்ற சிவச் சுடரே ஆகும். சீவனில் உறையும் சிவசோதியை அறிந்து கொள்வதே அனைத்துக்கும் மேலான சிவநெறியாகும்.


#1563. பரமுக்தி தருவது சிவநெறி


தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள் நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.


ஆராய்ச்சிகளும், அனுபவங்களும் உணர்த்கின்ற உண்மை சிவனே பரம்பொருள் என்பது ஆகும். அவனை அடைவிக்கின்ற சிவநெறியில் பிற சமயங்களைச் சார்ந்தவர்களும் மீண்டும் வந்து ஒன்றிவிடுவர். சீவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப வேறு வேறு உலகங்களை அடைவதற்கும் இந்த நெறியே உதவுகின்றது. அந்த முத்தி நிலைகளில் நின்ற பின்பு மீண்டும் வந்து அவர்கள் பொருந்துவது இந்தச் சிவநெறியில் தான்.


#1564. சுடரொளி தோன்றும்


ஈரு மனதை இரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை யோதுமி னோதியே
வாரும் அறநெறி மன்னியே மன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.


புறவுலகை நாடி செல்கின்ற மனதைத் திசை திருப்பி அகப் பொருளாகிய சிவன் மீது அதைப் பொருத்துங்கள். அதற்குச் ‘சி’காரத்தால் உணர்த்தப்படுவதும், மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கிச் செல்வதும் ஆகிய திரு ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுங்கள். இந்த சாதனையைச் சிவநெறியில் பொருந்தி செய்து வந்தால், நெற்றிக்கு முன்பாக ஒரு சிவந்த ஒளி தோன்றும்.








 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1565 to #1568

#1565. இதுவே அரநெறி ஆகும்

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனக் குறியாளனை ஆதிப் பிரான் தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக் குறி காணி லரநெறி யாமே.


யோகப் பயிற்சி செயப்வனுக்கு மின்னல் ஒளி போன்று வெளிப்படுவான் சிவன். அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயில் வெளிப்படுவான் சிவன். எந்த உருவில் அவனை நினைத்தாலும் அந்த உருவில் வெளிப்படுவான் சிவன். ஞானக் கொழுந்தாகிய அவனை ஒளி மயமாகக் காண்பதுவே அரநெறி என்னும் சிவநெறியாகும்.

#1566. அரன் நெறி தரும் இன்பம்

ஆய்ந்துண ரார் களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழுது
ஏய்ந்துணர் செய்வதோ ரின்பமு மாமே.


ஆராய்ந்து ஒளி நெறியே சிறந்தது என்று உணராதவர்கள் பல நெறிகளிலும் பொருந்தி நின்றாலும் அரன் நெறியில் புக முடியாது. ஒளி நெறியில் சிறப்பை உணர்ந்து கொண்டு, அரன் நெறியில் புகுந்து, அவன் மேன்மையை உணர்ந்து, அவன் சேவடிகளைக் கைதொழுபவர் பெறுவது ஒப்பில்லாத பேரின்பம் ஆகும்.

#1567. ஒளி நெறியே சிவநெறி

சைவ சமயத் தனி நாய கனந்தி
உய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே.


சைவச் சமயத்தில் ஒப்பற்ற தனித் தலைவன் சிவபெருமான். அவன் உயிர்கள் உய்வதற்கு ஒரு ஒளி நெறியை அமைத்துத் தந்துள்ளான். அதுவே தெய்வத் தன்மை வாய்ந்த சிவநெறி எனப்படும் சன்மார்க்கம். வையத்தோர் உய்வடைடைய உலக மக்களுக்கு சிவன் தந்த நன்னெறியாகும்.

#1568. வீடுபேறு அடையலாம்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலென் எங்கு பிறக்கிலென்
ஒதுணர் வார்க் கொல்லை யூர்புக லாமே.

இந்தத் தவம் சிறந்தது! அந்தத் தவம் சிறந்தது என்று பேதப்படுத்திப் பேசும் அறிவற்றவர்களைக் கண்டால் சிவ பெருமான் சிரிப்பான்! எந்தத் தவத்தை மேற்கொண்டால் என்ன? எங்கே சென்று பிறந்தால் என்ன? இறைவனோடு வேறுபாடு இன்றி ஒன்றி நின்று அவனை உணர்பவர்களே வீடு பேற்றினை அடைய முடியும்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1569 to #1572

#1569. தெய்வத் தன்மை பெறலாம்

ஆமே பிரான்முகம் ஐந்தொடு ஆருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

உயிர்களுடன் பொருந்தி விளங்கும் சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. தத் புருடம், அகோரம், சத்தியோசாதம், வாமதேவம், ஈசானம் என்ற ஐந்து முகங்களுடன் என்னும் ஐந்து முகங்களுடன் அதோமுகம் என்னும் ஆறாவது முகமும் உண்டு. சிவனை உணர்ந்து கொண்டவர்களுக்கு அதோமுகம் மேல் நோக்கியபடி விளங்கும். ஆறு முகங்களும் சதாசிவன் போல ஆகிவிடும். சிவத்தை அறியாதவர்களுக்கு அதோமுகம் கீழ் நோக்கியபடி இருக்கும்.

#1570. சக்தியின் செயல்கள்

ஆதிப் பிரானுல கேழு மளந்தவன்
ஓதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதி பிலாமையி னின்ற பராசக்தி
ஆதிக்கண் தெய்வமு மந்தமு மாமே.


ஆதிப் பிரானாகிய சிவன் ஏழு உலகங்களிலும் கலந்து விளங்குகின்றான். அலை கடலாகவும், கடல் சூழ்ந்த உலகமாகவும், உலகில் உள்ள உயிர்களாகவும் இருக்கின்றாள் சக்தி. சிவனிடமிருந்தி பிரியாமல் இருக்கும் சக்தி, ஆதியில் உலக உற்பத்திக்கு உதவி புரிகின்றாள். அவளே அந்தத்தில் உலகினைத் தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்றாள்.

#1571. இம்மையில் மறுமையைக் காணலாம்

ஆய்ந்தறி வார்க ளமரர் வித்தி யாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே
.

அமரர், வித்தியாதரர் போன்றவர்கள் ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ள முடியும். ஆயினும் அவர்கள் இன்பம் வேண்டி இறைவனை வழிபடுவதால் உண்மையை அறிந்து கொள்வதில்லை. ஆராய்ச்சியால் அறிய முடியாத அரன் நெறியை அவன் சேவடிகளைக் கை தொழுது நான் அறிந்து கொண்டேன். அதனால் நான் இம்மையிலேயே மறுமை இன்பத்தை அடைந்தேன்

#1572. சிவனை அறிவதே மேலான சமயம்

அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறவகை யாக்கி
அறியவொண் ணாத வறு வகைக் கோசத்து
அறியவொண் ணாததோ ரண்டம் பதிந்ததே.


மனித உடலைப் பெற்றதன் பயன் இறைவனை அறிந்து கொள்வதற்கே என்ற இந்த உண்மையை மக்கள் அறிந்து கொள்ளவில்லை! அறிய ஒண்ணாத சிவம் சீவனின் கூடு போன்ற அண்டமாக உள்ளது. அறிய ஒண்ணாத வானத்தைச் சிவம் உடலின் ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தது. சிவம் அறிய ஒண்ணாதவற்றை உடலின் ஆறு கோசங்களில் அனுபவிக்கச் செய்தது.

ஆறு கோசங்கள்:

1. பூ
தாத்மா, 2. அந்தராத்மா, 3. தத்துவாத்மா,

4. சிவாத்மா, 5. மந்திராத்மா, 6. பரமாத்மா.

இத்துடன் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம் முற்றுப் பெற்றது.

 
ஆறாம் தந்திரம்


1. ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்

2. ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே.

ஒரே மெய்ப் பொருளானவன்,
சிவ சக்தியராக இரண்டானவன்,
பிரமன், திருமால் ருத்திரன்என்ற மும் மூர்த்திகளுமானவன்,
நான்கு புருஷார்த்தங்களை (அறம் பொருள் இன்பம் வீடு) உணர்ந்தவன்,
ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,
ஆறு சக்கரங்களில் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,
ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,
எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.

3. கூற்றுதைத்தான் போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்
 
1. சிவகுரு தரிசனம்

உள்ளத்தில் உள்ள சிவனையே தன் குருவாகக் காணுதல்

#1573 to 1577

#1573. சித்தம் இறையே சிவகுரு

பத்திப் பணிந்துப் பரவும் அடி நல்கிச்
சுத்த உரையால் துரிசு அறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் , சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே.


பக்தியை உண்டாக்குவான் சிவன்; தன் சேவடிகளை வணங்கச் செய்வான் சிவன்; பிரணவ உபதேசத்தால் ஆன்மாவின் குற்றங்களை நீக்குவான் சிவன்; சத்து (சிவம் அல்லது பதி ) ; அசத்து (உலகம் அல்லது பாசம்); சதசத்து (ஆன்மா அல்லது பசு ) என்பவற்றின் உண்மையான இயல்புகளை உயிருக்கு உணர்த்துபவன் சிவன். ஆதலால் சிவனே சிறந்த குரு ஆவான்.

#1574. ஆசு அற்ற சற்குரு

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர் நேரே
கூசு அற்ற முத்தியில் கூட்டலால் , நாட்டத்தது
ஆசு அற்ற சற்குரு அம்பலம் ஆமே.


சீவன் ஆணவத்தில் அமிழ்ந்து, “உடலே நான்!” என்று மயங்கிக் கிடக்கின்றது. அதன் மாய மலத்தைக் கழித்தும், அதன் ஆணவத்தை நீக்கியும், அது உடல் மீது கொண்ட நேசத்தைப் போக்குவதும் சிவகுரு ஆவான். முத்தியில் நேருக்கு நேராகச் சேர்த்து வைக்கும் சிவனே உபாசகனின் ஒளி மண்டலத்தில் உள்ள குற்றமற்ற குரு ஆவான்.

#1575. நாதன் அருள் நல்குபவை இவை

சித்திக லெட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியு மெண்முத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியு மந்திர சாதக போதமும்
பத்தியு நாத னருளில் பயிலுமே.


நாதன் அருள் நமக்கு நல்குபவை இவை : அணிமா முதலிய சித்திகள் எட்டும் கைக் கூடும் . சாதகன் சிவனைப் போன்ற பக்குவ நிலை அடைவான். வாமை முதலிய எட்டு சக்திகளுக்கும் கட்டுப்படாத தூய்மை அடைவான். யோகத்தால் நிரம்ப ஆற்றல் ஏற்படும். மந்திர தியானத்தால் ஞானம் விளையும். இறைவனிடத்தில் மிகுந்த அன்பு தோன்றும்.

எட்டு சித்திகள்:
அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்,

எட்டு சக்திகள்:
வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூத தமனி.

#1576. சுத்த சிவமே நற்குரு

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லா ருள்ளத்து மிக்கருள் நல்கலால்
எலாரு முய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.


எல்லா உலகங்களுக்கும் அப்பாற் பட்டவன் சிவன்; இந்த உலகிலும் நிறைந்து இருப்பவன் சிவன்; நல்லோர் உள்ளத்தில் உறைந்து அருள்பவன் சிவன்; எல்லோரும் உய்யுமாறு அருள்பவன் சிவன்; இவ்வுலகிலேயே எல்லோரும் உய்யுமாறு அருள்பவன் சிவன் .ஆதலால் பிரணவ வடிவு கொண்ட சிவனே ஒரு நல்ல குரு ஆவான்.

#1577. முத்தி நல்குவான்

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாயுளக் கண்டு, உரையாலே
மூவாப் பசு பாசம் மாற்றியே முத்திப் பால்
ஆவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.


தேவனாகவும், தூய குருவாகவும் விளங்குபவன் சிவன். நூல்களில் பதி , பசு, பாசம் என்ற மூன்றாகக் கூறப்படுவதைத் தன் உபதேசத்தால் மாற்றி விடுவான். அழிவற்ற சீவனைத் தளைப் படுத்தும் பாசத்தை நீக்கிவிடுவான். சீவனுக்கு அன்புடன் முக்தியையும் அளிப்பான்.




 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1578 to #1581

#1578. குருவாய் அருள்பவன் சிவன்

சுத்த சிவன் குருவாய் வந்து, தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய்த்தகு கண்ணால் , நமர் என்பர், புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.

சிவனே சீவனிடத்தில் அருள் கொண்டு குருவாக உருவெடுத்து வருவான். சீவனின் மலங்களை அகற்றுவான். அவன் அருளை அறியாத அறிவற்றவர்களும் , உலக இன்பத்தில் ஈடுபாடு உடையவர்களும், பாசம் என்னும் தளைப் பட்டவர்களும் குருவைத் தமக்குச் சமமாகவே எண்ணுவர். ஞானியரோவெனில் குருவைச் சிவனாகவே கருதுவர்.

#1579. பொய்மை ஒழியும்

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும், எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே?


ஞானத்தால் பொய்மையை ஒழிக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் திண்மை பெற வேண்டும். சிவனின் அருளைப் பெற வேண்டும். எட்டு சித்திகள் தரும் மயக்கத்தை வெல்ல வேண்டும். அண்ணலின் அருள் அன்றி இவை அனைத்தும் சாத்தியமாகுமா?

#1580. நன் முத்தி நண்ணும்

சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முக்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

சிவனே உருவெடுத்து உபதேசம் செய்யச் சிவஞானி ஆக வருவான். தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனாகக் கருதுபவருக்கு சிவபெருமானின் நட்பும் நல்ல முத்தியும் கிடைக்கும். அவர் பிறவிப் பிணையை வென்று சிவ லோகப் பதவியை அடைவர்.

#1581. குருவே சிவன்

குருவே சிவமெனக் கூறினான் நந்தி
குருவே சிவமென் பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணா வற்றதோர் கோவே.

என் ஒளி மண்டலத்தில் உள்ள சிவன், “குருவே சிவன் ஆவான்!” என்று கூறினான். குருவே ஒளி மண்டலத்தில் உயிரின் தலைவனாகவும், ஒப்பற்ற மன்னனாகவும் விளங்குகின்றான். இத்தகைய குரு மண்டலத்தில் சிவன் உள் நின்று ஒளிர்வதை உணராதவர்கள் பேதைகள்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1578 to #1581

#1578. குருவாய் அருள்பவன் சிவன்

சுத்த சிவன் குருவாய் வந்து, தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய்த்தகு கண்ணால் , நமர் என்பர், புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.

சிவனே சீவனிடத்தில் அருள் கொண்டு குருவாக உருவெடுத்து வருவான். சீவனின் மலங்களை அகற்றுவான். அவன் அருளை அறியாத அறிவற்றவர்களும் , உலக இன்பத்தில் ஈடுபாடு உடையவர்களும், பாசம் என்னும் தளைப் பட்டவர்களும் குருவைத் தமக்குச் சமமாகவே எண்ணுவர். ஞானியரோவெனில் குருவைச் சிவனாகவே கருதுவர்.

#1579. பொய்மை ஒழியும்

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும், எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே?


ஞானத்தால் பொய்மையை ஒழிக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் திண்மை பெற வேண்டும். சிவனின் அருளைப் பெற வேண்டும். எட்டு சித்திகள் தரும் மயக்கத்தை வெல்ல வேண்டும். அண்ணலின் அருள் அன்றி இவை அனைத்தும் சாத்தியமாகுமா?

#1580. நன் முத்தி நண்ணும்

சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முக்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

சிவனே உருவெடுத்து உபதேசம் செய்யச் சிவஞானி ஆக வருவான். தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனாகக் கருதுபவருக்கு சிவபெருமானின் நட்பும் நல்ல முத்தியும் கிடைக்கும். அவர் பிறவிப் பிணையை வென்று சிவ லோகப் பதவியை அடைவர்.

#1581. குருவே சிவன்

குருவே சிவமெனக் கூறினான் நந்தி
குருவே சிவமென் பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணா வற்றதோர் கோவே.

என் ஒளி மண்டலத்தில் உள்ள சிவன், “குருவே சிவன் ஆவான்!” என்று கூறினான். குருவே ஒளி மண்டலத்தில் உயிரின் தலைவனாகவும், ஒப்பற்ற மன்னனாகவும் விளங்குகின்றான். இத்தகைய குரு மண்டலத்தில் சிவன் உள் நின்று ஒளிர்வதை உணராதவர்கள் பேதைகள்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1582 to #1585

#1582. அத்தன் சித்தத்தில் அமர்வான்

சித்தம் யாவையும் சிந்தித்திருந் திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே ;
சித்தம் யாவையும் திண்சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ் விடத்தே அமர்ந்தானே.


சீவனின் சித்தம் தான் அறிந்தவை எல்லாவற்றையும் குறித்து எப்போதும் சிந்தித்த வண்ணம் இருக்கும். அத்தன் அருள் பெற்றவர்களால் மட்டுமே அவனைக் குறித்து மட்டும் சிந்திக்க முடியும். இங்ஙனம் சித்தம் முழுவதையும் வேறு நினைவுகள் இன்றிச் சிவமயமாக ஆக்கிவிட்டால் சிவனும் அங்கு வந்து அமர்ந்து கொள்வான்.

#1583. தனிச் சுடர் ஆவான்

தான் நந்தி நீர்மையுட் சந்திக்கச் சீர்வைத்த
கோன் நந்தி , எந்தை குறிப்பு அறிவார் இல்லை
‘வான் நந்தி’ என்று மகிழும் ஒருவற்குத்
தான் அந்தி அங்கித் தனிச் சுடர் ஆகுமே.

தந்தையைப் போன்ற சிவபெருமான் தானே வந்து குருமண்டலத்தில் பொருந்தும் சீர்மையை உணர்பவர் இலர். சிவன் வானத்தில் குருமண்டலத்தில் திகழ்பவன் என்று எண்ணுவார்கள். அக்கினி மண்டலத்தில் விளங்குகின்ற மன்னனே ஒப்பில்லாத சிவசூரியன் ஆவான்.

#1584. வேதாந்த போதம்

திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருள் ஆய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர் ஒண்ணாதே.


குருவருளால் கி
டைப்பவை எவை?
செல்வமாகிய சித்தியும், அதன் பயனாகிய முக்தியும், மயக்கம் நீங்கிய தெளிவும், ஐயங்கள் அகன்று நன்கு உணர்ந்த மெய்ப்பொருளும், வேதங்களின் ஞானமும் இவை அனைத்துமே குரு அருளும் பொழுது மட்டுமே கிடைப்பவை. அவர் அருளாவிட்டால் யாருக்குமே கிடைக்காதவை.

#1585. ஞானம் என்னும் பயிர்

பத்தியும் ஞான வைராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள் தரில் தான் எளிதாமே.

பர சித்தி அடைய உதவும் வித்துக்கள் சிவனிடத்தில் கொண்ட பக்தியும், ஞானம் அடைய வேண்டும் என்னும் வைராக்கியமும் ஆகும். சிவோகம் அல்லது ‘நானே சிவன்’ என்ற எண்ணம் உண்டாகி அது முதிர்ச்சி அடையவேண்டும். சக்தியின் அருளால் ஞானம் என்னும் பயிர் எளிதாக வளர்ந்து முத்தியை அளிக்கும்.
 
Back
Top