Quotable Quotes Part II

#1674 & #1675

#1674. சிவ ஞானி

ஞானத்தில் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலயத் தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தன்;
எனைத் தவசி இவன் என லாகுமே


திருவடி உணர்வினால் ஞானம் பெற்றுச் சிவன் நிலையை ஒரு சிவஞானி அடைந்து விடுவான். அவன் நடமாடும் ஓர் ஒப்பற்ற சிவாலயம் ஆவான். அவன் மோனத்தில் மூழ்கி இருப்பதால் ஒரு சிறந்த சித்தனும் முத்தனும் ஆவான். இவனைப்பற்றிப் பேசுவதற்கு மற்றவர்களுக்குத் தகுதி இல்லை.

#1675. நந்தி பதம் முத்தி தரும்

தானன்றித் தன்மையும், தான் அவ னாதலும்,
ஏனைய அச்சிவ மான இயற்கையும்,
தான் உறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்திபதம் முத்தி பெற்றதே


பிரணவ சித்தியும், சிவபதவியும் பெற்றவர்களின் இயல்பு இது. தன்னறிவை இழந்து இருப்பது, சிவத்துடன் இரண்டறக் கலந்து விளங்குவது, எந்தப் பொருளுக்கும் உரிய மூன்று காலங்களையும் அறிகின்ற ஆற்றல் பெறுவது, ஞானம் பெறும் தகுதி படைத்தவர்களுக்குத் தன் பார்வையினால் அல்லது பரிசத்தால் சிவ ஞானத்தை வழங்குவது.
 
#1676 to #1679

#1676. சிவ வேடத்தார்

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்
பொருளாம் தனது உடல் பொற்பதி நாடி,
இருளானது இன்றி இருஞ் செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவ வேடத்தாரே

சிவன் அருளால் அவனுக்கே அடிமை ஆகித் தன் உடலுக்கு மேலே விளங்குகின்ற ஒளி மயமான அண்ட கோசத்தை அறிந்து கொண்டு, அறியாமை இருள் நீங்கித் தன் செயல் என்று எதுவும் இல்லாமல், உடல், பொருள் ஆவி அனைத்தையும் சிவனுக்கே அர்ப்பணித்தவரே தெளிந்த சிவ வேடம் பூண்டவர்.

#1677. கடலில் அகப்பட்ட கட்டை

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா,
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும,
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.


உடலில் ஏற்றுக் கொண்ட புறக் கோலங்கள் உள்ளே உள்ள ஆன்மாவுக்கு எந்தப் பயனையும் தராது. ஆன்மா உடலில் இருந்து நீங்கும் போதே அந்த வேடமும் கலைந்து விடும். உடல் அசத்து, ஆன்மா சத்து என்ற வேறுபாட்டினை உணராதவர்கள் கடலில் விழுந்த கட்டை கடலுக்கும் கரைக்கும் இடையில் அல்லாடுவதைப் போலவே பிறப்பு, இறப்பு என்ற இரண்டின் இடையே ஊசலாடுவர்.

#1678. செயல் அற்று இருப்பர்

மயல் அற்று, இருள் அற்று, மாமனம் அற்றுக்
கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத்
துயல் அற்றவரோடும் தாமே தாமாகிச்
செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே


சிவ வேடத்தார் ஆணவ மலம் தரும் மயக்கத்தை நீக்குவர். அதன் விளைவாகிய அறியாமை இருளை அகற்றுவர். மனத்தால் எண்ணும் செயலைத துறப்பர். மீன் விழியாரின் தழுவலையும் துறப்பர். தெளிந்த ஞானிகளுடன் கூடித் தமக்கு என்று ஒரு செயலும் இல்லாமல் இருப்பர்.

#1679. இன்பப் பொருளை எய்தலாம்

ஓடுங் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின்
வேடங் கொண்டென் செய்வீர் வேண்டா மனிதரே
நடுமின் நந்தியை நம்பெருமான் தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய் தலாமே.


மனிதர்களே! புறக் கோலம் தரித்துக் கொள்வதால் மட்டும் என்ன பயன்? பிராண வடிவமாக இருந்து கொண்டு உங்களுக்கு உள்ளே ஓடும் அந்தக் குதிரையின் கடிவாளத்தைக் கைப் பற்றுங்கள் !அதை உங்கள் வசப்படுத்துங்கள்! வீணான புறக் கோலத்தைக் கைவிட்டுவிட்டுச் சிவபெருமானை நாடுங்கள்! நீங்காமல் அவனிடத்தில் மனத்தை வைத்தால் இன்பப் பொருளான அவனைச் சென்று அடைந்திட இயலும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

13. அபக்குவன்

13. அபக்குவன் = பக்குவம் இல்லாதவன்

#1680 to #1683

#1680. இரு குருடர்கள்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழி விழுமாறே.


தன் அறிவால் மாணவனின் அறியாமையைப் போக்கும்
நல்ல குருவை ஏற்றுக் கொள்ள மாட்டார். தானே அறியாமையில் அழுந்தியுள்ள ஒரு குருவை ஏற்பார். இது ஒரு குருடனுக்கு இன்னொரு குருடன் வழி காட்டி அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழியில் விழுவதைப் போன்றது.

#1681. புறக்கடை இச்சிப்பர்

மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்றவாறே.


மனத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றன நாம் காண்கின்ற, உணர்கின்ற, எண்ணுகின்ற அனைத்துமே. ஆன்மாவை மறைக்கும் அந்தத் திரையின் நிழலைக் கூட இவர்கள் காண்பதில்லை. தம் வினைப் பயன்கள் வீணாகிவிடுவதற்கு சிறிதும் முயற்சி செய்வதும் இல்லை. மீண்டும் மீண்டும் அறியாமையின் விளைவாக உலக இன்பங்களையே நாடுகின்றார்கள்

#1682. ஊன் நிலை செய்யும் உருவிலி

‘ஏய் ‘ எனில் ‘என்’ என மாட்டார்கள் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுரம் நின்று ஊறிடும்,
தாய் முலை யாவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உருவிலி தானே


‘ஏய்!’ என்று அழைத்தாலும் மறுமொழி கூறார் வெறும் மனிதர்கள்! ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத உருவிலியாகிய சிவபெருமான் செய்வது என்ன தெரியுமா ?

பிறந்த குழந்தையின் உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு அதன் தாயின் மார்பில் இனிமையான பாலைச் சுரக்கச் செய்கின்றான். இந்த மாயம் நிகழ்வது எங்கனம் என்று வேறு எவரும் அறியார்!
 
#1683 to #1685

#1683. முக்கரணங்களின் தூய்மை

வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல், உறுதி நெடுந்தகாய்!
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.


உறுதி படைத்த நெடுந்தகையோனே! நீ வாயால் ஒன்றைக் கூறி, மனத்தால் வேறு ஒன்றை எண்ணி, செயலால் பிறிதொன்றைச் செய்யாதே! மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களும் தூய்மையாக இருந்தால் மட்டுமே நீ சிவாக்கினி பெற்றவன் என்று நான் உன்னைக் கூறுவேன். அப்போது தான் என் சொல்லைப் பித்தனின் பேச்சு என்று எவரும் கூற மாட்டார்கள்.

# 1684. பஞ்ச மா பாதகங்கள்

பஞ்சத் துரோகத்திப் பா தகர் தம்மை
அஞ்சச் சமயத்தோர் வேந்த னருந் தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறு விடாவிடில்
பஞ்சத்து ளாய் புவிமுற்றும் பாழாகுமே.


பஞ்ச மா பாதகங்கள் செய்பவரை மன்னன் அஞ்சும் வண்ணம் தண்டித்து அவர்களை நாடு கடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த நாடு பஞ்சம், வறுமை இவற்றால் பாழாகிவிடும்.

#1685. பவத்திடை நின்று பரிதவிப்பர்

தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறியாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடு அது ஆமே.


தவத்தை மேற் கொள்பவருக்குப் பல துன்பங்கள் நேரலாம். அவை அனைத்தும் சாதகனின் கன்மம் கழிவதற்காகச் சிவத்தினால் ஏற்படுத்தப் பட்டவை என்று அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையைத் தேவரும் அறிகிலர். தவத்திடை நிலையாக நிற்க இயலாதவர்கள் பவம் என்னும் பிறவித் துன்பத்தில் சிக்கிக் கொண்டு வருந்துவர்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1600 to #1604

#1600. உடல் பற்று அழியும்

கழல்ஆர் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே.


தாமரையில் விளங்குகின்ற கழல் அணிந்த ஈசன் திருவடி நிழலை அடைந்தேன்.அழல் சேர்ந்த அக்கினி மண்டலத்தில் விளங்குகின்றவரும், திருமாலும் அறிந்திடாதவரும் ஆன உருத்திரர், என் உடல் பற்றினை அழித்து விட்டு சுழு முனை உச்சியில் சிவமாகச் சென்று அமர்ந்தார்.

#1601. அளவற்ற இன்பம்

முடிமன்ன ராகின் மூவுலகம தாள்வர்
அடிமன்ன ரின்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்று நின்றாரே.


முடி சூடிய மன்னன் மூவுலகையும் ஆள்வான். அவன் அடையும் இன்பம் மிகப் பெரிது. எனினும் சிவன் அடியார்கள் என்னும் அன்பின் மன்னர்கள் பெறுகின்ற இன்பத்துக்கு ஓர் எல்லையே இராது. முடி மன்னர்கள் சிவனடி தொழும் அடியவர்கள் ஆனால் அவர்கள் குற்றம் குறைகள் எல்லாம் நீங்கிவிடும்.

#1602. வேதத்தின் அந்தம்

வைத்தேன் அடிகள் மனத்தி னுள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்;
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.


என் மனத்தில் இறைவனின் திருவடிகளைப் பதித்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய் போலக் காட்டித் துன்புறுத்தும் வலிமை வாய்ந்த புலன்களின் வழியே நான் செல்லவில்லை. உலக வாழ்வில் உழலச் செய்யும் இருவினைத் துன்பங்களை மாற்றிவிட்டேன். மறைகளின் முடிவாகிய வேதாந்தத்தை நான் அடைந்தேன்.

#1603. இன்ப வெள்ளத்தில் திளைப்பர்

அடிசார லாமண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.


எவரும் இறைவனின் திருவருளைப் பெறலாம். பண்டு வயோதிக முனிவர்கள் யுவ சிவகுருவின் திருவடிகளைத் தம் தலை முடிமீது அணிந்து கொண்டனர்.. படிப்படியாக பேரின்ப வெள்ளத்தை அடைந்து அதில் குடி கொண்டு திளைப்பதற்கு இதுவே ஒரு நல்ல வழியாகும்.

#1604. திருவடிகள் தருபவை இவை

மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்ற னிணையடி தானே.


ஈசன் திருவடிகள் அவற்றை உன்னுபவரைக் காக்கும் உயரிய மந்திரம் ஆகும்; பிறவிப் பிணியைத் தீர்க்கும் அரு மருந்து ஆகும்; இறைவன் திருவருளைப் பெற்றுத் தருகின்ற சிறந்த தந்திரம் ஆகும்; இறையருளைப் பெற்றுத் தரும் அரிய தானங்களாகும். வீடு பேற்றினைத் தரும் தூய நன்னெறியாகும்; இவை அனைத்துமாக ஆவது எந்தைப் பிரானின் இனிய திருவடிகளே.
 
3. ஞாதுரு, ஞானம், ஞேயம்

3. ஞாதுரு, ஞானம், ஞேயம்

ஞாதுரு = காண்பவன் => ஆன்மா / சீவன்
ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்
ஞேயம் = காணப்படும் பொருள் => சிவம்.

#1605 to #1607

#1605. அமுத நிலை பெறலாம்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலை பெறலாமே
.

ஆன்மா நீங்காத சிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது. அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கி எப்போதும் சிவானந்தத்தில் திளைத்து அதன் மூலம் அமுத நிலையை அடையலாம்.

#1606. அறிவு அறிவார்கள்

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.


அறியப் படும் பொருள் சிவன் என்று அறிந்து கொண்டு, அந்த நெறியில் உறுதியாக நிற்பவர்களிடம் ஞானத்துக்கு உரிய பிற நலன்கள் அனைத்தும் பொருந்தி அமையும். அறியப் படும் பொருளான சிவத்தை அறிந்து கொண்ட ஆன்மா தானும் சிவமாகவே மாறி விடுவது வீடுபேறு ஆகும். ஞேயத்தின் ஞேயமாகச் சிவனைப் பிரியாது விளங்கும் சக்தி தேவியை உணர்ந்தவர் மெய்ஞான அறிவினைப் பெற்றவர் ஆவார்.

#1607. தானே சிவனாதல்

தான் என்று அவன் என்று இரண்டாகும் தத்துவம்
தான் என்று அவன் இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவனடி சாத்தினால்
நான் என்று, அவன் என்கை நல்லதொன்று அன்றே
.

உண்மைப் பொருட்கள் ‘நான்’ என்றும் ‘அவன்’ என்றும் வேறுபட்ட இரண்டு போலத் தோன்றும். சகசிர தளம் என்னும் ஆயிரம் இதழ்த் தாமரை கவிழ்ந்த நிலையில் உள்ளபோது, ‘நான்’, ‘அவன் ‘ என்ற இரண்டும் வேறு வேறாத் தோன்றும். கவிழ்ந்த சகசிரதளத் தாமரையை நிமிர்த்தி விட்டால் அதன் பிறகு ‘நான்’ என்றும் ‘அவன்’ என்’றும் தோன்றும் வேறுபாடுகள் அகன்று விடும். நானே நீ!’ என்று அவன் என்னிடம் சொல்வது நல்லது அல்லவா?
 
#1608 to #1610

#1608. அச்சம் கெடுப்பான்!

வைச்சன வாறாறு மாற்றி யெனை வைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத் தென்னை யாண்டனன் நந்தியே.


என்னிடம் அமைந்திருந்த முப்பத்தாறு தத்துவங்களையும் மாற்றி அமைத்தான் என் குருநாதன். என்னை நிலைபெறச் செய்தான் உலகத்தவர் மெச்சிக் கொள்ளும் வண்ணம். சிவனின் எல்லைக்குள் என்னை இருத்தி என்னையும் சிவமாகவே செய்துவிட்டான். என் அச்சங்களையையும், அறியாமையையும் நீக்கி என்னை ஆட்கொண்டான்.

#1609. ஆன்மாவைப் பரனாக்கியது

முன்னை அறிவு அறியாதஅம் மூடர்போல்
பின்னை அறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரன் ஆக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.


தீட்சை பெரும் முன்பு அறிவுக்கும், அறியாமைக்கும் உள்ள வேறுபாடு அறியாத மூடன் போல இருந்தேன். தீட்சைக்குப் பின்னர் அறிவுக்கும், அறியாமைக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டேன். ‘தான்’ என்று இருந்த என் ஆன்மாவுக்குப் பரம்பொருளாகிய ‘தத்’ என்பதின் இயல்பினை அளித்தான்.

#1610. செறிந்த அறிவைத் தருவான்

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணாயென வந்து காட்டினான் நந்தியே.


“கண்கள் கண்டிராத காட்சிகள், செவிகள் கேட்டிராத சொற்கள், குறையாத சிவானந்தம், கிடைப்பதற்கு அறிய யோகக் கூட்டு, குறைவில்லாத நாதம், நாதாந்ததில் உள்ள தூய அறிவாகிய போதம் இவை அனைத்தையும் வந்து காண்பாய்!” என எனக்குக் காட்டினான் என் நந்தியாகிய சிவபெருமான்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1611 to #1613

#1611. ஐந்தொழில் ஆற்றும் வல்லமை

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.


மோனமாகிய பிரணவ யோகம் கைவரப் பெற்றவர்களுக்கு முக்தியும் கைக்கூடும். அவர் முன்பு எட்டு பெருஞ் சித்திகளும் கை கட்டி நின்று ஏவல் செய்யும். அவருக்குப் பேசாத மோன மொழியாகிய அசபை கைக் கூடும். படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் என்னும் ஐங் கருமங்களையும் ஆற்றும் வல்லமையை அவர் பெறுவார்.

#1612. பிறந்து இறவார்!

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன் பால்
வைத்த கலைகால் நால்மடங் கால்மாற்றி
உய்த்த ‘வத்து ஆனந்தத்து’ ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.


மூன்று முத்திரைகள் சாம்பவி, கேசரி, பைரவி என்பவை. இவற்றின் காரியம் எப்போது முடிந்துவிடும் என்று அறிவீரா ? காண்பவன், காட்சி, காணும் பொருள் என்ற மூன்றும் வேறுபாடுகள் இன்றி ஒன்றிவிடும் போது! இடைகலை பிங்கலை வழியாகச் செல்லும் காற்றை உள்நாக்கின் வழியே அதன் மேலுள்ள நான்கு விரற்கடைப் பகுதியில் உலவ விட வேண்டும். குருவின் திருவடிகளில் அமர வேண்டும். பந்தப் படுத்தும் தளைகளை விட்டு விட வேண்டும். இவற்றைச் செய்பவர் மீண்டும் உலகில் பிறக்கவோ இறக்கவோ மாட்டார்.

#1613. மூல சொரூபன்

மேலைச் சொரூபங்கள் மூன்றும் சக்தி
பலித்த முத்திரை பற்றும் பரஞானி;
ஆலித்த நட்டமே ஞேயம் ; புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழி ஞாதுருவனே.


மிகுந்த சக்தி விளங்கும் மேலான மூன்று சொரூபங்கள் விந்து, நாதம், சாதாக்கியம் என்பவை. இதுவே முதல் நிலை. இதைப் பற்றியுள்ள பரம ஞானி செய்யுன் நடனமே ஞேயம் என்னும் காணப் படும் பொருள். தன்னிலை அழிந்துவிட்ட பரன் ஞாதுரு என்னும் காண்பவன் ஆகிவிடுவான்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

4. துறவு
அன்பால் இறவனைப் பற்றிக் கொண்டு இயல்பாகவே பாசங்களில் இருந்து விடுபடுவது துறவு

#1614 to #1618

#1614. அறப் பதி காட்டுவான் அமரர் பிரான்

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய் நித்தம் வாய்மொழி வார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே.


சிவன் பிறப்பு, இறப்பு என்ற இரண்டையும் நீக்கிவிடுவான். இயல்பாகவே இந்த உலக இன்பங்களைத் துறக்கும் அருந்தவத்தையும் அருள்வான். ஒளி வடிவினனாகிய சிவனை மறவாமல் அவனை வாய் மொழியும் அன்பர்களுக்கு அவன் அறப்பதியாகிய சிவலோகத்தைத் தருவான்.

#1615. உயிர்க்குச் சுடரொளி

பிறந்தும் இறந்தும் பல் பேதமை யாலே
மறந்து மலவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.


வினைப் பயன்களின் படிச் சீவன் பிறக்கின்றான்; பிறகு இறக்கிறான். அறியாமை இருளில் அவன் அழுந்தி விடுகின்றான். செய்ய வேண்டியவை எவை, விலக்க வேண்டியவை எவை என்று மறந்து விடுகின்றான். மலங்களால் அறிவு மறைக்கப் படுகின்றான். எனினும் சிவன் அருள் வெளிப்படும் போது தகுந்த பருவத்தில் பற்றுக்களைத் துறந்து விடுவதன் மூலம் சீவன் சுடரொளியாக ஆகிவிடுவான்.

#1616. பிறவி அறுப்பான்

அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே
.

அவன் அறநெறிப் பட்டவன்; பிறப்பில்லாத அநாதியானவன்; அதனால் தன்னந் தனியன்; அவன் தங்கும் இடம் தத்துவங்கள் சுட்டு எரிக்கப் பட்ட இடம்; அவன் ஏற்பது பிச்சை. அவன் அனைத்தையும் துறந்து விட்டவன். பற்றுக்களை விட்டு விட்டவர்களின் பிறப்பை அறுக்கும் பித்தன் அவன் என்று அறிந்து கொள்ளுங்கள்!

#1617. நெருஞ்சில் முள் பாயாது

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியின் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முள் பாயகில்லாவே.


இறைவன் கைக் கொள்ள வேண்டிய நல்ல நெறிகளையும் படைத்தான் ; ஒதுக்கித் தள்ள வேண்டிய நெருஞ்சில் முட்களைப் போன்ற செயல்களையும் படைத்தான். அறவழி செல்லாமல் தவறான வழியில் செல்பவர்கள் நெருஞ்சில் முள் பாய்ந்ததைப் போலத் துன்புறுவர். அற வழியில் செல்பவர்களுக்கு இந்தத் துன்பம் நேராது.

#1618. திருவடி கூடும் தவம்

கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன்
ஆடல் விடை உடை அண்ணல் , திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையன் தானே


ஐம்பொறிகள் எனக்குக் கேடு விளைவிக்க எண்ணி என்னை அலைக் கழிக்கும். ஆனால் நான் அவைகள் வசப்பட்டுச் செயல்படக் கடமைப்பட்டவன் அல்லன். ஒளி மண்டலத்தில் நடனம் செய்யும் விடையேறும் ஈசனின் திருவடிகளை எப்போதும் பிரியாத சிறந்த தவத்தை மேற் கொண்டவன் நான்.
 
#1619 to #1623

#1619. உழவன் உழவு ஒழிவான்

உழவன் உழ, உழ, வானம் வழங்க,
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழவு ஒழிந் தானே


ஞான சாதனை செய்பவன் விருப்பத்துடன் அதனை மேன் மேலும் தீவிரமாகச் செய்வான். வான மண்டலம் அதனால் மேன் மேலும் விகசிக்கும். ஒரு நீல நிற ஒளி தோன்றும். சாதகன் அது அருள் மிகுந்த சக்தியின் ஒளி என்று அறிந்து கொள்வான். மேலும் சாதனை செய்யத் தேவை இல்லை அதனால் அவன் சக்தியின் அருளில் நாட்டம் கொள்வான்.

#1620. பார் துறந்தார்க்குப் பதம்

மேல்துறந்து அண்ணல் விளங்குஒளி கூற்றுவன்
நாள்துறந்தார்க்கு அவன் நண்பன், அவாவிலி,
கார்துறந்தார்க்கு அவன் கண்ணுதலாய் நிற்கும்
பார்துறந்தார்க்கே பதம்செய லாமே


சிவன் அனைத்தையும் துறந்து விட்டவன்; அவன் மேலே ஒளிரும் ஒளியாக இருந்து கொண்டு அனைவருக்கும் வழி காட்டுபவன்; அவன் எல்லோருக்கும் நண்பன்; எந்த ஆசையும் இல்லாதவன். இருளாகிய அஞ்ஞானத்தை விட்டு விட்டு ஞானத்தைத் தேடுபவருக்குத் தன் நெற்றிக் கண்ணால் அருள்பவன். உலக ஆசைகளை முற்றிலுமாகத் துறந்தவர்களுக்கே அவன் தன் திருவடிகளைத் தருவான்.

#1621. உடம்பு இடம் ஆமே

நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது
போகமும் புற்றில் பொருந்தி நிறைந்தது ;
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து,
ஏகப் படம் செய்து உடம்பு இடம் ஆமே.


குண்டலினி சக்தி என்னும் நாகம் ஒன்று. அதன் ஐந்து படங்கள் ஐம்பொறிகள் ஆகும். அந்தக்கரணங்கள் நான்கும் இவற்றுடன் தொடர்பு கொண்டு போகம் அடைகின்றன. இது புற்றுப்போன்ற உலக அனுபவங்களில் நிறைந்துள்ளது. பருவுடல் நுண்ணுடல் இரண்டிலும் இது படம் எடுத்து ஆடும். எப்போது குண்டலினி சக்தி சிற்சக்தியுடன் இணைந்து விடுகின்றதோ அப்போது இது ஆடுவதை விட்டு விடும். இரண்டு படங்களையும் ஒன்றாக்கி விட்டு உடலை இடமாகக் கொண்டு கிடக்கும்.

#1622. நயன்தான் வரும் வழி

அகன்றார் வழி முதல் ஆதிப் பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்;
சிவன்தாள் பல பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே.


துறவு மேற்கொண்டவர்களில் முதல்வன் சிவன் ஆவான். ‘இவனே அவன்!’ என்று சுட்டிக் காட்டும் அளவுக்கு அவன் எளிமையானவன் அல்லன். சீவனுக்குச் சிவன் அருளைப் பெறப் பல பல பிறவிகள் தேவைப்படலாம். நயந்து அவன் நம்மிடம் வரும் வழியை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா?

சீவனின் பக்குவத்துக்கு ஏற்ப சிவன் அருள் புரிவான். இலயம் விரும்புபவர்களுக்கு இலயம் அளிப்பன். போகம் விரும்பியவருக்குப் போகம் அளிப்பான். அதிகாரத்தை விரும்பியவருக்கு அதிகாரம் தருவான்.

#1623. உலகம் கசக்கும்

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்,
ஆம்பற் குழலியின் கஞ்சுளிபட்டது,
வேம்பேறி நோக்கினென், மீகாமன் கூரையில்,
கூம்பு எறிக் கோவில் பழுக்கின்ற வாறே.


அற்புதமான அந்த வழி திறந்துவிட்டவுடன், உடலின் ஒன்பது வாயில்களும் ஆம்பல் மலர்களைச் சூடிய அன்னையின் அருளால் அடைபட்டுவிடும். உடலின் அனுபவம் முடிந்து விடும். உலகம் கசந்து விடும். அதுவரை உடலைச் செலுத்தி வந்த ஆன்மா தலை உச்சியில் மேல் தலைவன் விளங்கும் சகசிர தளத்தில் தானும் அமைந்து விளங்கும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

5. தவம்

தனக்குள் மறைந்து உறையும் உண்மைப் பொருளைத் தேடும் முயற்சி.


#1624 to #1626

#1624. பற்று விட்டோர்

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப் பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே


சிவத்திடம் உள்ளத்தை ஒடுக்கி அங்கே நிலை பெற்றவர்கள் எந்தத் துன்பத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவது இல்லை. காலன் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது. இரவும் இல்லை, பகலும் இல்லை. உலகப் பொருட்களின் மேல் உள்ள பற்றினைத் துறந்தவர்களுக்கு இதைவிட நல்ல பயன் என்று வேறு எதுவும் இல்லை.

#1625. தவத்தின் சிறப்பு

எம்மா ருயிரு மிருநிலத் தோற்றமும்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க்கல்லாது
இம்மா தவத்தினியல்பறி யாரே.


உயிர் உலகில் வந்து பிறப்பதையும், அது ஓர் உடலுடன் கூடிப் பிறப்பதையும், அது அனுபவிப்பதற்கு உலகம் ஏற்படுத்தப் பட்டதையும், தவத்தின் மேன்மையையும் சிவன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். பிறர் இந்த மாதவத்தின் மேன்மையை அறிகிலர்.

#1626. பிறப்பை நீக்கும் பெருமை

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவார்
மறப்பில ராகிய மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே.


பிச்சை பெற்று உயிர் வாழும் மாதவத்தவர் இனிப் பிறவியை அறியார். அவர்களுக்கு சிறப்பும் உயரிய அருட் செல்வமும் நிரம்பவும் கிடைக்கும். மறக்காமல் சிவனை நினைந்து தவம் செய்பவர் பிறவிப் பிணியை நீக்கும் பெருமை பெறுவார்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1627 to #1629

#1627. சிந்தை சிவன் பால்

இருந்தி வருந்தி எழில் தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந் திந்திரனே எவரே வரினும்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே.


சிவன் மீது சிந்தையை இருத்தி, உடலை வருத்தி மாதவம் செய்பவர்கள, இந்திரனோ அன்றி வேறு எவரேனும் வந்து அவர்கள் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தாலும், சிறிதும் சிந்தை கலங்காமல் தன் உள்ளக் கருத்தைச் சிவன் மீதே பொருத்தி இருப்பார்.

#1628. அணுகுவதற்கு அரியவன் சிவன்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்
வரைந்து தொழப்படும் வெண்மதி யானே.


சிவன் தவம் செய்யாதவர்களுக்கு மறைந்து உ றைவான்; தவம் செய்பவர்களுக்கு மறையாமல் தெரிவான். சிவன் புறக் கண்களுக்குப் புலப்படமாட்டான். அவன் அகக் கண்களுக்கு நன்கு புலப்படுவான். பரந்து விரிந்த வீசும் சடையை உடையவன். ஆணிப் பொன்னின் நிறம் கொண்டவன். பக்குவம் அடைந்த சீவர்களின் மதி மண்டலத்தில் சிவன் விளங்குவான்.

1629. தானே வெளிப்படுவான்

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே


பின்னால் அடைய வேண்டிய இனிய பிறப்பை முன்னமேயே நியதியாக அமைப்பவன் சிவன். சீவன் சிவனை அறிய முயற்சி செய்யும் போது, சிவன் சீவன் முன்பு தானே வெளிப்படுவான். சாதகனின் தளராத மன உறுதியே இதைச் சாத்தியம் ஆகும்.
 
#1630 to #1632

#1630. தவத்தைக் கைவிடார்

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்து எழும் பூசளுள் பட்டார் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆக்கமும் நோக்கி
இமைத்து அழியாது இருப்பார் தவத்தோரே.


அமைச்சர்கள், யானைகள், அரசர்கள் போன்றோர் பகைத்து எழுந்து புரியும் போர் களத்தின் நடுவில் இருந்தாலும், ஞானமும் ஈசன் மீது மாறாத அன்பும் கொண்டவர் தம் கொண்ட தவத்திலிருந்து சிறிதும் மாறுபடார்.

#1631. ஆர்த்த பிறவி அகன்று விடும்

சாத்திர மோதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி யகல விட்டோடுமே


சாத்திரங்களை ஓதி அதனால் மிகுந்த பெருமை அடைபவர்களே! ஒரு கணமாவது வெளியே பாய்ந்து செல்லும் உங்கள் உள்ளதைத் தடுத்து அதை உள்முகமாகத் திருப்புங்கள். இத்தகைய உள் நோக்கிய பார்வை பசுமரத்தில் அடித்த ஆணி போலப் பதிந்திருக்கும் பிறவிப் பிணியை இனி இல்லாமல் விரட்டி ஓடச் செய்துவிடும்.

#1632. தவப் பயன் பெற்றபின் தவம் தேவையில்லை

தவம் வேண்டு ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதி கை கூடில்
தவம் வேண்டா மச்சக சமார்க்கத் தோர்க்குத்
தவம் வேண்டா மாற்றம் தனையறி யாரே


ஞானம் பெறுவதற்குத் தவம் தேவை.
ஞான சமாதி கைவந்த பின்னர் அதற்குரிய தவம் தேவை இல்லை.
சகச மார்க்கத்தைப் பின்பற்றும் இல்லறதோருக்கு ஞான சமாதிக்கு தேவை இல்லை.
தவத்தால் பெறுகின்ற ஞானத்தைப் பெற்ற பின்பு தவம் தேவை இல்லை.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

6. தவ தூடணம்

6. தவ தூடணம்
தவ தூடணம் = தவம் + தூடணம்
தூடணம் = நிந்தை
புற நோக்கை நீக்கி அக நோக்கைக் கொண்டவருக்குப் புறச் செயல்கள் தேவை இல்லை.

#1633 to #1635

#1633. புலன் வழி போகாதவர்

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்க் காயமிடங் கண்டால்
சாதலும் வேண்டா சமாதியைக் கை கூடினால்
போதலும் வேண்டா புலன் வழி போகார்க்கே.


உயிரில் உயிராக உள்ள உண்மைப் பொருளைக் கண்டு கொண்ட பின்னர் ஒருவர் கற்று அறிந்து வேண்டியது எதுவும் இல்லை.

உடலில் உறைந்துள்ள சிவத்தைக் கண்டு கொண்ட பின்னர், அவன் மேல் காதல் கொள்ளத் தேவை இல்லை.

சமாதி நிலை கை வந்த பின்னர், இறக்க வேண்டிய தேவை இல்லை.

மனம் புலன்களின் வழியே புறவுலகு செல்வதைத் தடுத்து நிறுத்தக் கற்றவர் வேறு ஓர் இடத்துக்குச் சென்று தவம் புரியத் தேவை இல்லை.
விளக்கம்

காதல் செய்ய இருவர் தேவை. சிவனும் சீவனும் ஒன்றான பிறகு காதல் செய்வது எப்படி?

சாதல் எனபது உடலிலிருந்து உயிர் பிரிந்து நிற்பது. சமாதியில் உயிர் உடலை விட்டுத் தனியே நிற்கும். எனவே சமாதியில் சாதல் தேவை இல்லை

புலன்களின் வழியே பொறிகள் செல்லாமல் தடுக்கக் காடு அல்லது மலைக்குச் சென்று தவம் புரிவது வழக்கம். மனம் புலன் வழிப் போகாமல் தடுக்கக் கற்றவர்களுக்கு தனியிடம் செல்லத் தேவை இல்லை.

#1634. சமாதி கூடிய பின்பு

கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற் றிருக்கிலே.


மெய்ப் பொருளை உணர்ந்து, ஐம் பொறிகளையும் அடக்கிய ஒருவருக்கு இறைவனை உணர்த்தும் நூல்களை உரக்கப் படிக்க வேண்டிய தேவை இல்லை. சமாதியில் சீவன் சிவனுடன் கூடிய பின்பு மந்திரங்களும் ஆரவாரமான பூசைகளும் அவசியம் இல்லை. உலகத் தொடர்பை விட்டு விட்ட பின்பு ஒருவர் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ளும் செயல் செய்யத் தேவை இல்லை.

#1635. வானவரிலும் உயர்ந்தவர்

விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுறஞ் செய்வார்
விளைவறி வார் விண்ணின் மண்ணின் மிக்காரே


தான் செய்யும் தவத்தின் உண்மைப் பயனை அறிந்து கொண்டவரே உண்மையான தவம் செய்பவர் ஆவார். இத்தன்மை கொண்டவரே மாணவனுக்கு உண்மையை உணர்த்தும் நல்ல குரு ஆவார் . இவரே ஒளியுடல் பெற்று வானவரிலும் சிறந்தவர் ஆவார்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1639 to #1641

#1639. சிவத்தை சிந்தையில் வைப்பதே தவம்

ஒத்து மிகவுநின் றானை உரைப்பது
பக்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும்பதம்
சத்தான செய்வதுந் தான்தவந் தானே.


சிவனுடன் பொருந்தி நிற்கும் சிவனை உணர்வது அவன் மீது பக்தியைத் தரும். சிவனடியார்களைத் தொழுவது உயர்ந்த முக்தியைத் தரும். “உலகை வெறுப்பவன் ஒரு முனிவன்!” என்ற சொல்லை மெய்யாக்கும் வண்ணம் செய்வதே உயர்ந்த தவம் ஆகும்.

#1640. தவம் சந்திரகலையைத் தோற்றுவிக்கும்

இல்லை தொட்டு, பூப் பறித்து, எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டுக் கண்டேன், வரும் புலன் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்ட வாறே.


இலைகளைப் பறித்தும் , மலர்களைக் கொய்தும்
இறைவனுக்கு மாலைகள் தொடுத்தேன். ஆனால் தலையில் வான் கங்கையாகிய சந்திர கலையின் ஒளியைக் காண முடியவில்லை .மூலாதாரத்திலிருந்து தலை வரை செல்லும் சுழுமுனை நாடியைக் கண்டேன் அதனால் என் உள்ளம் அடங்கி ஒடுங்கியது. அந்தத் தவம் தலையில் சந்திர கலையை விகசிக்கச் செய்தது.

#1641. இடர் வராது ஈசன் காப்பான்

படர்சடை மாதவம் பற்றிய பக்தருக்கு
இடர்அடையா வண்ணம் ஈசன் அருளும்
இடர்அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர்அடை செய்வதுஒரு மனத் தாமே.


படர் சடையானை மாதவத்தில் பற்றிக் கொண்ட உண்மை அன்பர்களுக்குத் துன்பம் நேராத வண்ணம் ஈசன் காப்பான். இங்கனம் துன்பம் நேராத வண்ணம் ஈசன் காக்கும்படித் தவம் செய்தவர் செய்த தவத்தை ஆராய்ந்தால், அவருக்குக் கிடைத்த பெருமை எல்லாம் அவர் மனத்தின் ஒருமைப் பாட்டினால் என்ற உண்மை விளங்கும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்


#1642 to #1644

#1642. சோற்றுக்கு நின்று சுழல்வர்

ஆற்றிற் கிடந்த முதலை கண்டஞ்சிப் போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.


நூலைக் கற்று அறியாது , சிறந்த தவம் செய்யாமல், எப்போதும் வயிற்ருக்கு உணவு தேடி அலைவது ஆற்றில் உள்ள முதலைக்கு அஞ்சி, அண்மையில் குட்டியை ஈன்ற தாய்க் கரடியிடம் சென்று வருந்துவதைப் போன்றது ஆகும்.

#1643. மூச்சின் இயக்கம்

பழுக்கின்ற வாறும் பழம் உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளி அக்கோணியைப் பல்கால்
குழக்கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழுக்காது நெஞ்சத்து இட, ஒன்று மாமே.


உயிர் மூச்சு சீவனின் உடலில் உலவுகின்ற போது, அது சிவக்கனியைப் பழுக்கச் செய்யும். சீவன் அதனை உண்ணச் செய்யும். ஆனால் உயிர் மூச்சைச் சுழு முனையில் அடக்கும் பொழுது மூச்சு இயங்குவது நின்று நின்று விடும். மேல் நோக்கியுள்ள சகசிர தளத்தில் மனம் அடங்கும் பொழுது மூச்சின் இயக்கமும் நின்றுவிடும்.

#1644. சித்தம் சிவமாவது தவம்

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர் ந்தோர் அற உண்டால்,
சித்தம் சிவமாக வேசித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.


இடையறாது சிவனை நினைந்து நினைந்து தன் சித்தத்தையே சிவமயம் ஆக்கி விட்ட ஒருவருக்குச் செய்ய வேண்டிய தவம் என்று எதுவும் இல்லை. சித்தம் சிவமயமான ஒருவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் சித்தம் சிவ மயமாகி விடும். அத்துடன் அவர்களுக்குச் சித்தியும் முத்தியும் உண்டாகும். இங்ஙனம் சித்தம் சிவமயமாவது ஒருவர் முன்பு செய்த தவப் பயனால் மட்டுமே விளையும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

7. அருளுடைமையின் ஞானம் பெறுதல்

அருள் = நாதம் விந்து ஆகிய திருவடி.
நாத விந்துவான திருவடி பொருந்தியபோது ஞானம் பெறுவது.

#1645 to #1647

#1645. பிரானிடம் அனைத்தும் அமையும்

பிரானருள் உண்டெனில் உண்டு நற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டு நன் ஞானம்
பிரானருளிற் பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளில்பெருந் தெய்வமு மாமே.


சிவன் அருள் உண்டானால் ஒருவருக்குக் கிடைப்பவை எவை எவை?
நல்ல செல்வம், நல்ல ஞானம், பெருந்தன்மை என்பவை அவரிடம் பொருந்தி அவர் ஒரு பெருந் தெய்வம் போல ஆகிவிடுவார்.

#1646. தமிழ் மண்டலம் ஐந்து

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவர்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவமே


தமிழ் மண்டலம் ஐந்து என்பது தமிழ், மலையாளம், கன்னம், தெலுங்கு, துளுவு என்னும் ஐந்து மொழிகள் பேசப்படும் நாடுகளின் தொகுப்பு. தமிழ் மண்டலத்தில் உள்ள புண்ணிய தலங்களுக்குச் சென்று வணங்கினால் தமக்குள் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என்று எண்ணி பலர் அங்கெல்லாம் சுற்றித் திரிவர். ஒப்பற்ற இறைவனாகிய ஒரு சிவமே பல சக்திகளாக விளங்கும் உண்மையை ஞானியர் அறிவார். அதனால் அவர்கள் தல யாத்திரைகள் செல்லாமலேயே தாம் இருக்கும் இடத்தில் இருந்து வழிபட்டுப் பெரும் பயனைப் பெறுவார்.

#1647. வினைகளை வேரோடு அறுக்க வேண்டும்

புண்ணிய பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்துப் அப்புறுத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்ளீரே


புண்ணியம் பாவம் என்று இரண்டு செயல்கள் உள்ளன. அவை நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப இன்பம் துன்பம் என்று உருவெடுத்து மீண்டும் நம்மிடம் வந்து பொருந்து கின்றன. இந்த இரண்டையுமே விலக்கிவிட உள்ள ஒரே வழி வினைகளை வேருடன் அறுத்துத் தள்ளுவதே ஆகும். இதைச் செய்த பின்பு அண்ணல் ஆகிய சிவனை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்வீர்!
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1648 to #1650

#1648. முன்னும் பின்னும் நின்று உதவுவான்

முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நன் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கொரு முத்தி தந்தானே.


வினைகள் முடிகின்ற காலத்தில் சிவன் சீவனின் முன் தோன்றி வீடு பேற்றை அளிப்பான். அந்த நிலை வருவதற்கு முன்பு சிவன் உயிரில் உயிராக இருந்து கொண்டு, சீவனை வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்வான். சிவன் மறைந்து இருந்து சீவனுக்கு அருள் செய்துப் பிறவியை நீக்குவான். இங்கனம் முன்னும் பின்னும் இருந்து சீவனுக்கு நலம் தருபவன் சிவன்.

#1649. சிவலோகம் கிடைக்கும்

சிவனரு ளாற் சிலர் தேவரு மாவார்
சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே.


சிவனருள் கிடைப்பதனால் ஒருவருக்கு அதனால் மேலும் கிடைப்பவை எவை எவை? சிவனிடம் அன்பு கொண்டவர்களில் சிவர் தேவ வடிவம் பெறுவார். சிலர் தெய்வத் தன்மை பெறுவார். சிவன் அருளால் அவர்களை வினைகள் வந்து பற்றா. இந்த மூன்று அன்பர்களுமே சிவலோகம் பெறுவார்.

#1650. ஞானியராகலாம் வானவராகலாம்

புண்ணிய னெந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவ னருள் பெற்ற போதே.


சிவன் நாம் செய்த புண்ணியத்தின் பயன் ஆவான். அவன் நம் எல்லோருக்கும் ஒரே தந்தை. அந்தப் புனிதனின் இணையடிகள் என் உள்ளத்தில் பொருந்திய போது விளக்கின் ஒளி போன்று ஞானம் தோன்றியது. சிவன் அருள் பெற்றவர்கள் இவ்வுலகில் இருக்கும் போது ஞானியர் ஆவார். விண்ணுலகில் அவர்கள் தேவ வடிவம் பெறுவார்.
 
#1651 to #1654

#1651. இவன் அவனாக ஆகிவிடுவான்!

காயத்தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மயங்கு மவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவனாமே.


சீவன் உடல் என்னும் தேரில் ஏறும். அத்தேரை மனம் என்னும் பாகன் இயக்குவான். உலகில் நிலவும் தத்துவங்கள் என்னும் உணர்வுகளில் ஈடுபட்டு மனம் மயங்கும் அந்த சீவன். அந்த சீவனே நேயத் தேர் சென்று நிர்மலனாகிய சிவன் அருள் பெற்றுவிட்டால் சிவனடியார்களில் ஒருவனாக ஆகிவிடுவான். அவன் சிவ வடிவமும் பெறுவான்.

# 1652. சிவனடி சேர்வர்

அவ்வுல கத்தே பிறக்கி லுடலொடும்
அவ்வுல கத்தே யருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள் பெறுவாரே.


சிவலோக ஞானத்தோடு ஒருவன் பிறவி எடுத்தால், அவன் மீண்டும் அந்த சிவலோகத்தை நாடி அரிய தவம் புரிவான். சிவலோகத்தில் சிவனைடியைப் பெறுவான். சிவசக்தியின் ஆற்றலை அடைவான்.

#1653. ஈசன் எழில் வடிவானவன்

கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவாம்
சதி கொண்ட சாக்கி ஏரியின் வடிவாம்
ஏரி கொண்ட ஈசன் எழில்வடி வாமே.


சூரிய காந்தக் கல் சூரிய ஒளியில் கனல் போல ஒளிரும். சந்திர காந்தக் கல் நிலவொளியில் முத்துப் போன்ற நீர்மை வடிவம் ஆகும். சக்கி முக்கிக் கற்கள் உரசும் போது தீயின் வடிவம் எடுக்கும். ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னுள் கொண்டுள்ள ஈசன் மிகுந்த எழில் வடிவானவன்.

#1654. சிவனை நாடி அவனைத் தேடுவேன்

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெருமான் என்று
கூடுவன் கூடிக் குரைக் கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே


நான் நாடித் தேடும் உறவினன் என் குருவாகிய சிவபெருமான், நான் தேடிக் கூடும் என் உறவினன் சிவ பெருமான். கூடிய அந்தக் குரை கழல்களை நாடி நான் செல்வதற்கு என் உடலிலிருந்து என் உயிரைப் பிரித்து அறிந்து கொளும் வரையில் நான் முயன்று கொண்டே இருப்பேன்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

8. அவ வேடம்

8. அவ வேடம் = பயனற்ற சின்னங்களை அணிந்து கொள்வது

#1655 to #1657

#1655. சிவன் தாள் தேடுவீர்!

ஆடம் பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே


ஆடம்பரத்துடன் உணவு உண்பதற்காக பலப் பலப் பொய் வேடங்களைத் தரித்து உலகத்தோரை மயக்கியும் அச்சுறுத்தியும் வாழும் அறிவிலிகளே!
உங்கள் அவ வேடங்களைக் கை விடுங்கள். சிவனை நினைத்து ஆடுங்கள்; பாடுங்கள்; அழுது அரற்றுங்கள். எப்படியேனும் அவன் தாள்களைக் கண்டறியுங்கள்.

#1656. நலம் கெடும் புவி

ஞான மிலார் வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங் கேடுமப் புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.


சிவ ஞானம் இல்லாத ஒருவர் தவ வேடம் மேற்கொண்டு பிச்சை எடுத்து உண்டால் வசிக்கின்ற அந்த நாட்டின் பெருமை குன்றி விடும். ஆதலால் அருடைய அவ வேடத்தைக் கலைப்பது இன்பம் தருவதாக ஆகும்.

#1657. வையம் வாழும்

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்து உள
நன் செயல், புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறைநாடி நாள்தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே.


ஒரு நாட்டில் நிலவுகின்ற இன்ப துன்பங்கள் அந்த நாட்டு மக்கள் செய்த நல்வினை, தீவினைகளின் பயன் என்று கூறுவார். இதை நன்கு உணர்ந்து கொண்ட கொண்ட ஒரு மன்னன் தன் நாட்டில் பொய்ய்க் கோலம் பூண்டு திரிபவர்களை நல் வழிப்படுத்த வேண்டும். அப்போது அந்த நலம் பெற்று வாழும்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

#1658 to #1660

#1658. களையப்பட வேண்டியவர்கள்

இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத்து ஆகிய பாழ் சண்ட ரானார்
கழிகுலததோர்கள் களையப் பட் டோரே.


தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைய விரும்பித் தவவேடம் தரிப்பர்.
வழி வழியாகத் தொண்டு செய்பவர், இறை அருளைப் பெற விரும்பித் தவ வேடம் பூணுவர்.
பழிக்கத் தக்க செயல்களைச் செய்யும் குலத்திற் பிறந்து தவ வேடம் பூண்பவர் பாழ் சண்டாளர்கள் ஆவர். அவர்களின் பொய் வேடம் கழித்துக் களையப்பட வேண்டியதே.

#1659. ஞானம் தாங்கும் தவம்

பொய்த் தவம் செய்வார் புகுவர் நரகத்து
பொய்த் தவம் செய்தவர் புண்ணியர் ஆகார்,
பொய்த் தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கியம்
சத்தியம் ஞானத்தால் தாங்கும் தவங்களே .


பொய்த் தவக் கோலம் பூணுகின்றவர் நரகம் சென்று புகுவர்! அவர் ஒரு நாளும் புண்ணியம் எய்தார்!
மெய்த் தவத்தைப் போன்றே பொய்த் தவமும் இந்த உலக இன்பங்கள் சிலவற்றை ஒருவருக்கு அளிக்கலாம். ஆனால் உண்மையான ஞானத்தினால் மட்டுமே மெய்த் தவம் கைக்கூடும்.

#1660. பொய் வேடமும் உய் வேடமாகும்

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய் வேடமாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.


நன்கு புசிப்பதற்காகவே சிலர் பொய்த் தவ வேடம் தரிப்பர். உண்மைத் தவம் செய்பவர் உடலில் உயிர் பொருந்தி இருப்பதற்குப் பிச்சை ஏற்று உண்பர். பொய் வேடம் பூண்டவரும் அதையே உய்வேடமாக ஆக்க முடியும் – அவர் அந்தக் கோலத்துக்கு உரிய மேன்மையாலும், உண்மையான ஞானத்தைப் பெறுவதாலும்.
 

திருமந்திரம் -ஆறாம் தந்திரம்


9. தவ வேடம்
9. தவ வேடம்
தவத்துக்கு உரிய சின்னங்களைத் தரிப்பது.
அவை திருநீறு, உருத்திராக்கம், குண்டலம் போன்றவை.

#1661 to #1664

#1661. தவக் கோலம் சிறக்கும்

தவம்மிக் கவரே தலையான வேடர்
அவம்மிக் கவரே அதி கொலை வேடர்
அவம்மிக் கவர் வேடத்து ஆகார் அவ்வேடம்
தவம்மிக் கவர்க்கு அன்றித் தாங்கஒண் ணாதே


தவத்தில் சிறந்தவர்கள் அணிவது தலையான தவக் கோலம். தாழ்ந்தவர்கள் பொய்யாகத் தவக் கோலம் புனைவது கொடுமையிலும் கொடுமை ஆகும். தாழ்ந்த இழி செயல் புரிபவர்கள் தவக் கோலம் பூணத் தகுதி இல்லாதவர்கள். தக்கோலத்தைத் தவத்தில் சிறந்தவர்களுக்கே தாங்க ஒண்ணும்.

#1662. தவக்கோலச் சின்னங்கள்

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதிய வர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே


தவக் கோலம் பூண ஏற்றவை இவை. நெற்றியில் சிறந்த திருநீறு, காதுகளில் தாமிரக் குண்டலம், கழுத்தில் உருத்திராக்க மாலை. இவை வேத ஆகமங்களை அறிந்த ஒருவருக்கு ஏற்ற சின்னங்கள்.

#1663. மற்ற சிவச் சின்னங்கள்

யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்கு பாசத்துச் சுற்றுஞ் சடைய தொன்று
ஆகத்து நீரணி யாங்கக் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.


சிவ யோகிக்கு உரிய பிற சின்னங்கள் இவை :
உள்ளாடை ஆகிய கோவணம், ஒரு கைப் பை, மயில் இறகுக் குல்லாய், சுற்றிக் கட்டிய சடை, உடல் முழுவதும் திருநீறு, கையில் ஒரு திருவோடு, ஒரு அழகிய பிரம்பு என்பவை ஆகும்.

#1664. சிவயோகியின் சீரிய சின்னங்கள்

காதணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டிக் கப்பரை
ஏதம்இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம்
ஏதம்இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே.


காதணியாகக் குண்டலம், கழுத்தணியாக உருத்திராக்கம், சிவசிவ என்னும் ஒலி, ஊதுகின்ற வெண் சங்கு, ஆறுகட்டி, திருவோடு, பாதக் குறடு, ஆதனம், யோகப் பட்டம், யோக தண்டம் என்னும் பத்துப் பொருட்கள் சிவ யோகிக்கு உரியவை.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

10. திரு நீறு

திரு நீறு = விபூதி

#1665 to #1667

#1665. ஓங்காரம் ஒன்றாக்கி விடும்

நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் , நுண் சிகை ஞானமாம்
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே

பூணூல், சிகை இவற்றை அணிந்திருக்கும் மூடர்கள் அவற்றின் உண்மை இயல்பை அறிவதில் வேதாந்தத்தை உணர்த்துவது பூணூல் ஆகும். சிகையில் உள்ள குடுமி வேதாந்த ஞானத்தைக் குறிக்கும். சிவனிடத்தில் ஒன்றிவிட்டவர்கள் சிவனும் சீவனும் ஒன்று என்று காண்பர். இன்னமும் சிவனுடன் ஒன்றி விடாதவர்கள் ஓங்காரத்தை ஓதுவதன் மூலம் சிவனுடன் ஒன்றும் தன்மையும், மேன்மையும் அடைவர்.

#1666. திருவடி சேர்வர்

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் கதி
சிங்காரமான திருவடி சேர்வரே.

கபால மாலையை அணிந்த சிவன் பூசிக் கொள்ளும் கவசத் திருநீற்றை நீங்களும் மங்காமல் பூசி மகிழுங்கள் அப்போது நீங்கள் செய்துள்ள வினைகள் அழிந்து விடும். உங்களுக்கு அரிய சிவகதி கிடைக்கும். நீங்களும் சிவனின் சிங்காரத் திருவடிகளைச் சென்று சேரலாம்.

#1667. உயர் குலத்தவர் ஆகலாம்

அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குல மாமே.

அரசு, ஆல், அத்தி போன்ற மரங்களின் சமித்துக்கள் வேள்வித் தீக்கு இரையாகும் போது, அவை உருமாறித் திருநீறாக மாறி விடும். அது போன்றே அவயவங்களோ, மலங்களோ இல்லாத சிவனின் அருளைப் பெற்றவர்கள் தம் உருவம் மாறி உயர் குலத்தை அடைவர்.
 
திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

11. ஞானவேடம்

#1668 to #1670

#1668. சிவ ஒளியில் பொருந்தலாம்

ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர்;
ஞான முள்ளார் வேடம் இன்று எனின் நன் முத்தர்
ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன் பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்போரே.

சிவஞானம் பெறாத ஒருவன் சிவ ஞானியைப் போல வேடம் தரித்தால் அவன் நரகத்தை அடைவான். சிவஞானம் அடைந்த ஒருவர், சிவ ஞானி வேடம் தரிக்காவிடினும் அவர் நல்ல முக்தர் ஆவார். சிவஞானம் பெற விரும்புகின்ற ஒருவர் அவன் அண்மையிலேயே எப்போதும் தன்னை இருத்திக் கொள்வார்.

#1669. பயனற்ற வாதம் புரிய மாட்டார்.

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்
துன்ஞானத் தோர் சமயத் துரிசுள்ளோர்
பின்ஞானத் தோரோன்றும் பேச கில்லாரே .

தாழ்ந்த ஞானம் உடைய ஒருவர் உயர்ந்த சிவ ஞானியின் கோலத்தைத் தரித்தாலும், அதனால் அவருக்கு எந்தப் பயனும் விளையாது. சிவ ஞானம் பெற்ற ஒருவர் அதில் அமிழ்ந்து விடுவதால் அதற்குரிய கோலத்தைத் தரிப்பதில் கருத்தைச் செலுத்த மாட்டார். மாறுபட்ட ஞானத்தை உடையவர் சமய விரோதப் போக்கு மேற்கொள்வார். நல்ல ஞானம் உடையவர்கள் இது போன்ற சமய விரோதிகளிடம் வீண் வாதம் செய்து தம் பொன்னான காலத்தை வீணாக்க மாட்டார்கள்.

#1670. உவமையற்றவன் சிவன்

சிவ ஞானிகட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதன மாகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே

ஆராய்ந்து நோக்கினால் மெய்யான சிவ ஞானிகளுக்கும், சிவயோகிகளுக்கும் புறச் சாதனங்கள் தேவை இல்லை. திருநீறு, சடை முடி, உருத்திராக்கம், ஐந்தெழுத்து என்னும் நான்கு புறச் சாதனங்களும் வீண். இவைகளின் உதவி இன்றியே அவர்கள் உவமையற்ற சிவனுடன் உள்ளூறப் பொருந்தி வாழலாம்.
 
Back
Top