திருமந்திரம் -ஆறாம் தந்திரம்
6. தவ தூடணம்
6. தவ தூடணம்
தவ தூடணம் = தவம் + தூடணம்
தூடணம் = நிந்தை
புற நோக்கை நீக்கி அக நோக்கைக் கொண்டவருக்குப் புறச் செயல்கள் தேவை இல்லை.
#1633 to #1635
#1633. புலன் வழி போகாதவர்
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்க் காயமிடங் கண்டால்
சாதலும் வேண்டா சமாதியைக் கை கூடினால்
போதலும் வேண்டா புலன் வழி போகார்க்கே.
உயிரில் உயிராக உள்ள உண்மைப் பொருளைக் கண்டு கொண்ட பின்னர் ஒருவர் கற்று அறிந்து வேண்டியது எதுவும் இல்லை.
உடலில் உறைந்துள்ள சிவத்தைக் கண்டு கொண்ட பின்னர், அவன் மேல் காதல் கொள்ளத் தேவை இல்லை.
சமாதி நிலை கை வந்த பின்னர், இறக்க வேண்டிய தேவை இல்லை.
மனம் புலன்களின் வழியே புறவுலகு செல்வதைத் தடுத்து நிறுத்தக் கற்றவர் வேறு ஓர் இடத்துக்குச் சென்று தவம் புரியத் தேவை இல்லை.
விளக்கம்
காதல் செய்ய இருவர் தேவை. சிவனும் சீவனும் ஒன்றான பிறகு காதல் செய்வது எப்படி?
சாதல் எனபது உடலிலிருந்து உயிர் பிரிந்து நிற்பது. சமாதியில் உயிர் உடலை விட்டுத் தனியே நிற்கும். எனவே சமாதியில் சாதல் தேவை இல்லை
புலன்களின் வழியே பொறிகள் செல்லாமல் தடுக்கக் காடு அல்லது மலைக்குச் சென்று தவம் புரிவது வழக்கம். மனம் புலன் வழிப் போகாமல் தடுக்கக் கற்றவர்களுக்கு தனியிடம் செல்லத் தேவை இல்லை.
#1634. சமாதி கூடிய பின்பு
கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற் றிருக்கிலே.
மெய்ப் பொருளை உணர்ந்து, ஐம் பொறிகளையும் அடக்கிய ஒருவருக்கு இறைவனை உணர்த்தும் நூல்களை உரக்கப் படிக்க வேண்டிய தேவை இல்லை. சமாதியில் சீவன் சிவனுடன் கூடிய பின்பு மந்திரங்களும் ஆரவாரமான பூசைகளும் அவசியம் இல்லை. உலகத் தொடர்பை விட்டு விட்ட பின்பு ஒருவர் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ளும் செயல் செய்யத் தேவை இல்லை.
#1635. வானவரிலும் உயர்ந்தவர்
விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுறஞ் செய்வார்
விளைவறி வார் விண்ணின் மண்ணின் மிக்காரே
தான் செய்யும் தவத்தின் உண்மைப் பயனை அறிந்து கொண்டவரே உண்மையான தவம் செய்பவர் ஆவார். இத்தன்மை கொண்டவரே மாணவனுக்கு உண்மையை உணர்த்தும் நல்ல குரு ஆவார் . இவரே ஒளியுடல் பெற்று வானவரிலும் சிறந்தவர் ஆவார்.